சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று மாலை ஐந்து மணியளவில், திமுக சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் இந்த மாநாடு தொடங்கியது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி , டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மகளிர் உரிமை மாநாடு

மாநாடு ஆரம்பித்ததும், கலந்துகொண்ட இந்தியா கூட்டணி பெண் தலைவர்ளுக்கு ஸ்டாலினும், கனிமொழியும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். அதைத்தொடர்ந்து பெண் தலைவர்கள் ஒவொருவராக மேடையில் உரையாற்றத் தொடங்கினர்.

மாநாட்டில் உரையாற்றிய கனிமொழி, “ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால், ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணால் அத்தகைய ஒளியை உருவாக்க முடியும் என்று சொன்னவர் கலைஞர். ஒரு பெண்ணுக்கு ஆண் தான் பாதுகாப்பு என்பார்கள். ஆனால், இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் பெண்ணுக்கு வாய்ப்பளித்து, ஆணுக்கும் பெண் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய ஆட்சியின் நீட்சியாக ஸ்டாலின் ஆட்சி மிளிர்கின்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை விடியல் பயணமாக அறிவித்து, பெண்கள் யாரும் வீட்டை விட்டு செல்ல முடியாது போகக்கூடாது என்று சொல்ல முடியாத ஒரு நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர்.

கனிமொழி

படிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய பெண்ணின் கனவு எதுவும் சிதையக் கூடாது என்பதற்காக, அவர் படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய ஆட்சி தி.மு.க ஆட்சி. உழைப்பின் சிகரங்களாக இருக்கக்கூடிய பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை. தமிழ்நாட்டில் பெண் மேயர்கள் இருக்கிறார்கள். 2010-ல் யு.பி.ஏ ஆட்சியில் சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரில் தி.மு.க ஆதரவாடு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இதெல்லாம் இருந்தால்தான் நடைமுறைக்கு வரும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், மகளிர் மசோதாவை கொண்டு வந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பா.ஜ.க, 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வர முடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்காவது பாதுகாப்பு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மணிப்பூர் பற்றி எரிகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களை பார்வையிட்ட போது, அங்கு பெண்களும், குழந்தைகளும் வாழ முடியாத நிலையில், சொல்லொணாத் துயரோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்று வரை அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதே பா.ஜ.க, குஜராத்தில் செய்த அட்டூழியங்களால் பெண்கள் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறார்கள் என்பதை இன்றுவரை நாம் மறந்து விட முடியாது. மதக் கலவரங்கள், காழ்ப்புணர்வு அரசியல், வெறுப்பு அரசியல் என்று வரும்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

கனிமொழி

நாட்டின் முதல் குடிமகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் கோயிலுக்குள் போக முடியாது, நாடாளுமன்றத்துக்கு வர முடியாது என்று அவமானப்படுத்தப்படக்கூடிய ஒரு நிலை இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `நான் ஒரு பெண், தலித் என்பதால் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லியில் வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கவில்லை. குடியரசுத் தலைவராக இருக்கட்டும், வீராங்கனைகளாக இருக்கட்டும், அமைச்சராக இருக்கட்டும், சாதாரண வீட்டு சாமானிய பெண்களாக இருக்கட்டும், யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையைதான் ஒன்றிய பா.ஜ.க ஆட்சி உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு சென்றார்கள். இன்று அதை எட்டு சதவிகிதமாக குறைந்திருக்கிறது. கல்வி இல்லை, எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்ற நிலையைதான் பெண்களுக்கு இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். 50 சதவீத வாக்குகள் பெண்களிடம் இருந்து வருகிறது. ஆனால். திட்டங்கள், முடிவுகள் என எதிலும் பெண்களின் கருத்து கேட்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள் என்ற நிலைதான் நீடிக்கிறது. நாங்கள் யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று இந்த நாட்டின் பெண்கள் நிமிர்ந்து நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது” என்று பேசி முடித்தார்.

டிம்பிள் யாதவ்

முன்னதாக மேடையில் பேசிய, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியும், எம்.பி-யுமான டிம்பிள் யாதவ், “சமூக நீதிக்கான தளராத அர்ப்பணிப்பு, ஒவ்வொரு தனிமனிதனின் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான அயராத முயற்சி, பெண்கள் உரிமைகளுக்காக அயராத வாதிடும் இந்தியா என்ற பார்வைக்கான மூன்று அடிப்படை அம்சங்களில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் போற்றுதல் மற்றும் நிலைநிறுத்துதல், பிராந்திய, சமூக, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளங்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது, நாம் அனைவரும் இன்று உண்மையான பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும். நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.