சிவகங்கை மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான கீரை வகைகளை மதிப்புக்கூட்டி கீரை மாத்திரையாக தரலாம். இந்தியாவில் சுமார் 83 சதவிகித மக்கள் தங்களுடைய தினசரி உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகளைப் பயன்டுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வு. அதேபோல குழந்தைகளில் பெரும்பாலானோர் கீரையை உணவாக உட்கொள்வதில் தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பிரச்னைக்கும் தீர்வு காணும் வகையில் கீரை மாத்திரையை அறிமுகப்படுத்தலாம்.

வெல்பீயிங் நியூட்ரிசியன் (Wellbeing Nutrition) எனும் நிறுவனம் கீரைகளை மாத்திரை வடிவில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. கீரைகள் மட்டுமல்லாமல், முட்டைகோஸ், ஸ்பைருலினா (Spirulina), குளோரெல்லா (Chlorella) போன்றவற்றை மாத்திரைகளாகத் தயாரித்து, விற்கிறது. இதை முன் மாதிரியாகக் கொண்டு, கீரை மாத்திரைக்கான தொழிற்சாலையையும் அதையொட்டியே ஆய்வகத்தையும் (Laboratory) சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கலாம்.

கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், மெக்னீசியம் (Magnesium), இரும்பு, நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் (Antioxidants) நிரம்பியிருக்கும். மேலும், லுடீன் (Lutein) மற்றும் ஜீயாக்சான்தின் (Zeaxanthin) உள்ளிட்டவையும் அடங்கியிருப்பதால் பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டிருக்கின்றன. செரிமானத்தை மேம்படுத்த, ஆற்றலை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்த… என பல வகைகளில் கீரை மாத்திரைகள் உதவலாம்.

பல்வேறு வகையான நோய்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் மிக முக்கிய காரணமாக ஊட்டச்சத்து நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுவதால், இந்த மாத்திரைகளுக்கு சந்தையில் வரவேற்பு அதிகரிக்கலாம். இந்த மாத்திரையைத் தண்ணீரில் கலந்து பருக வேண்டும் என்பதால், ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தலாம்.

கீரையை அப்படியே சந்தைக்கு கொண்டு செல்லும்போது பல பிரச்னைகளை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. குறிப்பாக, கீரைகள் எளிதாக வாடிவிடும், போக்குவரத்துக்கு நிறைய பணம் செலவாகும். இவற்றையெல்லாம் தாண்டி, உரிய விலை கிடைக்காமல் வீணாகின்றன. இயற்கையாகவே, கீரைகளுக்கு ஷெல்ப் லைஃப் (Shelf life) இல்லை. ஆனால், அதையே கீரையை மதிப்புக்கூட்டி, மாத்திரையாக தரும்போது ஷெல்ப் லைஃப் கிடைப்பதோடு, கீரையாக விற்றால் பெறும் வருமானத்தை விட அதிகளவில் வருமானத்தைப் பெறலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் தருமபுரம், மல்லிகைப்பட்டி, கெங்கவல்லி, வில்லாபுரம், பூசல், திருப்புத்தூர், மங்களம், இளையனார்குடி, வெங்கடேசபுரம், கொத்தமங்கலம், சிறுகுடி, மணவாளநகரம், நத்தம், சிறுகூடல், காரைக்குடி, ஓமந்தூர், வைரமங்கலம், சூலமங்கலம், கல்லாத்துறை, பெரியகுடி, தேவகோட்டை, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பாலக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் சுமார் 1,000 ஏக்கர் அளவுக்கு பயரிடப்பட்டு, அறுவடை செய்யப்படுகின்றன.

இங்கே உற்பத்தியாகும் கீரைகளிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு கொள்முதல் செய்து, கீரை மாத்திரைகளைத் தயாரிக்கலாம். சுமார் 15 மாத்திரைகள் கொண்ட ஒரு பாட்டிலின் விலையை ஏறக்குறைய 600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, பொருளாதார வளம் பெறலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் உள்ள காரை வீடுகள் எனப்படும் செட்டிநாடு வீடுகள் புகழ்பெற்றவை. இந்தப் பகுதியில் ஏராளமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடக்கின்றன. அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்படும் சிறப்பு திரைப்படப் பகுதியாக (Preserved Special Film Zone) அறிவித்து, சிறப்புறச் செய்யலாம்.

தமிழ் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார், பல வருடங்களுக்கு முன்பே ஏ.வி.எம். திரைப்பட வளாகத்தை காரைக்குடியில் அமைத்தது மிக முக்கியமான துவக்கமாகும். அதன் தொடர்ச்சியாக, குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் முதல் தேர்வாக இந்தப் பகுதியே முன்னிலை வகிக்கிறது. இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் மற்றும் இயக்குநர் ஹரி இயக்கிய சிங்கம், வேல் போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இந்தப் பகுதியிலேயே படமாக்கப்பட்டன.

நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டியார்கள் காரைக்குடி பகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது முன்னோர்கள், வீடுகளை கலைநயமிக்கதாகக் கட்டியுள்ளனர். இவை, செட்டிநாடு வீடுகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஆயிரம் ஜன்னல் வீடு, செட்டிநாடு ராஜா அரண்மனை போன்றவை படப்பிடிப்புக்கு புகழ்பெற்றவை மற்றும் குறிப்பிடத்தகுந்தவை. இதேபோன்று பல வீடுகள் பழைமை மாறாமல் உள்ளன. இவற்றைப் பராமரிப்பது அடுத்த தலைமுறையினருக்குச் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது.

பராமரிக்க இயலாத வீடுகளை அடையாளம் கண்டு, அவற்றை அரசே தத்தெடுத்து பாதுகாக்க வேண்டும். அத்தகைய வீடுகளைப் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடுவதோடு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டடக் கலை மாணவர்கள் பயிற்சி பெற உதவும் விதமாகப் பயன்படுத்தலாம். இத்தகைய வீடுகளைக் காண குறிப்பிட்ட தொகையை நுழைவுக்கட்டணமாக நிர்ணயம் செய்து வசூலித்தால், பல லட்ச ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறலாம்.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு உணவுகளுக்கும், தங்குமிடத்துக்கும் பெயர் பெற்ற ஒன்று என்பதால் திரைப்படக் குழுவினருக்கு உணவு, தங்குமிடத்துக்கு பிரச்னை இல்லை. ஆனால், படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து சேருவது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அதைச் சரி செய்யும் நோக்கோடு அந்தப் பகுதியில் ஹெலிபேட் (Helipad) ஒன்றை அமைக்கலாம். இதன் வழியே படப்பிடிப்பு பகுதிக்கு எளிதில் வந்து செல்ல முடியும் என்பதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அதிகரித்து, அதன் வழியே வருமானம் பெருகும்.

(இன்னும் காண்போம்…)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.