`ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ வைத்த கதையாக காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்காக நின்றாலும், I.N.D.I.A கூட்டணி தர்மத்தால் ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசை முழுமையாகக் கண்டிக்கவும் முடியாமல், நட்பு பாராட்டவும் முடியாமல் திணறிவருகிறது தி.மு.க அரசு. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் பூசிமெழுகுகிறது தி.மு.க அரசு என அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

தி.மு.க – காங்கிரஸ்

கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டுக்கு நியாயப்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி திறந்துவிட வேண்டிய காவிரி நீரை முறையாகத் தராமல் போக்குகாட்டி வருகிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. மேலும், தண்ணீர் கேட்கும் தமிழ்நாட்டைக் கண்டித்து அடுத்தடுத்து போராட்டங்களையும் கர்நாடக பா.ஜ.க., ம.ஜ.த மற்றுமுள்ள விவசாய சங்கங்கள் நடத்தி வருகின்றன. அந்த போராட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உருவப் படங்களை அவமதிக்கும் அவலங்களும் நடந்தேறியிருக்கின்றன. இத்தனை நடந்த பிறகும் தமிழ்நாடு அரசு சார்பில் பெரிய அளவிலான எதிர்ப்போ, பதிலடிகளோ இல்லை என்றும், காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால்தான் தி.மு.க கள்ள மௌனம் சாதிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

இந்த நிலையில், நேற்று முந்தினம் (9.10.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்!” என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின்மீது கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டனர். அப்போது பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், `இந்த தீர்மானத்தில் கர்நாடகாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஏதுவுமே சொல்லாமல் மத்திய அரசை மட்டும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானம் முழுமையாகவே இல்லை!” எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடர்

மேலும், வெளியில் வந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்த வானதி சீனிவாசன், “கர்நாடகாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்கிறார். அங்கிருக்கும் கூட்டணிக் கட்சி தலைவர்களோடு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, தன்னுடைய செல்வாக்கை காண்பித்து, கர்நாடகத்திலிருந்து அவரால் காவிரி நீரைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை! தி.மு.க அரசு 1972-லிருந்து வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு முறையும் தமிழகத்தினுடைய நலனை சமரசம் செய்துகொண்டிருக்கிறது. இப்போதும் இந்த அரசு இன்னொரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.

வானதி சீனிவாசன்

தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக மிகப்பெரிய ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாத இந்த கூட்டணி பிரதமரை எதிர்க்கிறார்கள்! எனவே, மக்களை ஏமாற்றுகின்ற நாடகமாக இந்த தீர்மானத்தைப் பார்க்கிறோம். முதல்வர் கொண்டு வநதிருக்கும் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாததால் வெளிநடப்பு செய்கிறோம்!” என குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதேபோல, தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்த ஆண்டு அணையில் நீர் குறைவாக இருப்பது குறித்து முன்கூட்டியே நாங்கள் எச்சரித்தோம். ஆனால், அதையும் மீறி நீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அதனை நம்பி பயிரிட்டார்கள். இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து கர்நாடக முதல்வருடன் பேசியிருக்கலாம்!” என்றார்.

அதற்கு பதிலளித்துப்பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “அவர்களோடு பேசுவது தற்கொலை செய்வதற்குச் சமம். நம் உரிமையை அடகு வைப்பதற்குச் சமம்!” என்றார்.

அதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, “கர்நாடக அரசோடு பேசவது தற்கொலைக்குச் சமம் என்றால், அங்கு ஆளும் காங்கிரஸ் அரசோடு கூட்டணி ஏன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?” என கிடுக்குப்பிடி கேள்வி கேட்டார். இந்த விவாதம் நீண்டது.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம், “ தி.மு.க அங்கம் வகிக்கிக்கும் I.N.D.I.A கூட்டணியில்தான் காங்கிரஸும் இருக்கிறது. பெங்களூரிலே அதற்கான கூட்டம் நடந்தபோது, அங்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்… அக்கட்சியின் தலைவரிடமோ அல்லது ராகுல் காந்தியிடமோ தனிப்பட்ட முறையில் சந்தித்து, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முறையிட்டீர்களா. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூற வேண்டாம்… ‘மனிதாபிமான அடிப்படையிலாவது, 5 லட்சம் ஏக்கர் குருவை விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தீர்களா..! அப்போது எதற்காக நீங்கள் ஒரு முதலமைச்சராக இருக்கிறீர்கள்? உங்களுடைய கூட்டணியிலே பேசி, வெற்றி பெற்று மத்தியிலே ஆட்சிக்கு வந்து, அந்த அமைச்சர் பதவியை பெற்று அனுபவிக்க மட்டும் செல்ல நினைக்கும் நீங்கள்… தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னையை பேசுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள். என்ன பயம், என்ன அச்சம்..?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் பார்ப்போம். அப்படி இயற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா… இல்லை. எனவே இந்த நடிப்பு, நாடகத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி பூசுவதை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் என்ற அக்கறையோடு செயல்படுங்கள். ஊழல் செய்த அமைச்சர்களை காப்பாற்ற துடிக்கின்ற இந்த அரசு, விவசாயிகளை காப்பாற்ற ஏன் நடவடிக்கை எடுக்க தவறுகிறது!” என சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.

சீமான்

இவர்கள் தவிர நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தி.மு.க அரசு எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் காவிரி நீருக்காக போராடும். மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி கொடுக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி செய்யவில்லையே! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு நீர் தராத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தி.மு.க ஓட்டுக்கேட்க வந்தால் பா.ஜ.கவைப் போல இவர்களையும் தோற்கடிக்க வேண்டும்!” என கொந்தளித்திருக்கிறார்.

அதே நேரத்தில் திமுக-வினரோ, “கூட்டணி வேறு. உரிமை வேறு. ‘I.N.D.I.A’ என்பது எப்படியாவது பாஜகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காக உருவானது. அதனை வைத்து காவிரி விவகாரத்தை அணுக முடியாது” என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு தீர்மானம் கொண்டு வந்த அதே நாளில், கர்நாடக சட்டப்பேரவையில் போட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருக்கிறார் டி.கே சிவக்குமார்.

இந்த விவகாரத்திஎதிர்க்கட்சியினரோ, `டெல்லி மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவை, கூட்டணி நெருக்கடியை வைத்து தான் கெஜ்ரிவால் பெற்றார். தற்போது அவரும் அந்த கூட்டணியில் நீடிக்கிறார். அதனால், பதவி முக்கியமில்லை, மாநில உரிமை தான் முதன்மை என்றால், அவர்கள் கூட்டணியை, நட்பை பயன்படுத்தி மாநில நலம் பேணலாம்’ என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.