‘சாரி சார்…நீங்கள் யார்னு தெரியாம அடிச்சுட்டேன்’ – இது தவறாக நடந்துகொண்ட எழுத்தாளர் பாலசந்திரன் சுள்ளிக்காடிடம் பாதிக்கப்பட்ட பெண் சொன்ன வார்த்தைகள். இப்படித்தான் கதைசொல்லியான பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டில் ஒரு கதையைக் கூறினார்.

பவா செல்லத்துரை சொன்ன கதையின் சுருக்கம் இதோ…”கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஒரு நாள் வீட்டில் இருந்தபோது ஒரு பெண் ஊறுகாய் விற்க அவரது வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஊறுகாய்களை அடுக்க அவள் குனியும்போது இடுப்பைப் பார்த்த பாலச்சந்திரன், அனைத்து ஊறுகாயையும் வாங்கிக்கொள்கிறேன் என்று வீட்டுக்குள் அழைத்து அவள் இடுப்பைத் தொட்டுள்ளார்.

பவா செல்லத்துரை

முதலில் கோபம் அடைந்து அறைந்த பெண், அவர் யார் என்று தெரிந்த பிறகு, மன்னிப்பும் கேட்டும், அவளது திருமணத்தின் போது பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டிடமே ஆசியும் வாங்கினாள்”.

இந்தக் கதையை கேட்ட பெரும்பாலான பிக் பாஸ் போட்டியாளர்கள் ‘பாதிக்கப்பட்ட பெண் ஏன் மன்னிப்பு கேட்டாள்?’ என்று எதிர்ப்பைக் கிளப்பினர். வீட்டுக்கு உள்ளே மட்டும் அல்ல, வெளியேவும் எதிர்ப்புக் குரல் வந்தது. ஆனால் பவா செல்லத்துரையின் கூற்று, “ஒரு பிரபல எழுத்தாளர் அப்பட்டமான உண்மையைப் பேசுகிறார்” என்பதாகவே இருந்தது.

“பெண் தன்னை அறைந்ததை விட, பொதுவெளியில் அந்தச் சம்பவத்தை சொல்லி தன்னைத்தானே அறைந்துகொள்கிறார்” என்று பிக் பாஸ் நிகழ்சியின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் தொடங்கிய கமல், “என்னையே மறந்து ஓர் உணர்ச்சி அலையில் மாட்டிக்கொண்டேன். ஒரு பேரலை என்னைத் தள்ளித் தொட்டுவிட்டேன் என்று பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. ‘சீ…நாயே’ என்று திட்டிவிட்டு அந்தப் பெண் அறைந்துவிட்டு ஊறுகாயை எடுத்துக்கொண்டு போகும்போது ‘சாரி…நீங்க இப்படிப்பட்ட ஆள்னு நினைக்கவே இல்லை. நீங்க எங்க காலேஜ்க்கு விஜயலட்சுமி டீச்சருடன்(பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மனைவி) வந்திருக்கீங்க. நான் உங்ககிட்ட ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கேன்’ என்று கூறுகிறாள்.

எழுத்தாளர் பாலசந்திரன் சுள்ளிக்காடு

அந்த ‘சாரி’ நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்பதற்கானதோ, என்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்பதற்கானதோ இல்லை. அதிகாரத்திற்கும், ஆணாதிக்கத்திற்கும் பயந்து சொல்லும் சாரியும் இல்லை. நானும் வரம்பு மீறி இன்னொரு மனிதனை கைநீட்டி அடித்துவிட்டேன் என்பதற்கான சாரி.

‘மானமே போய்டும்..யார்கிட்டேயும் சொல்லிட்டாதே’ என்று பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மன்னிப்பு கேட்கும்போது விஜயலட்சுமி டீச்சருக்காக நான் சொல்லமாட்டேன் என்று மற்றொரு பெண்ணுக்காக இந்தப் பெண் பரிந்து பேசுகிறாள்.

வெளியேபோயிருந்த விஜயலட்சுமி டீச்சர் வீட்டுக்கு திரும்பிவந்து வீட்டை பெருக்குகையில், அறையும்போது உடைந்த கண்ணாடி வளையலை எடுத்துப் பார்த்து கேட்கும்போது, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முழுகதையையும் சொல்லிவிடுகிறார். ‘அவள் என்னோட மாணவி’ என்று விஜயலட்சுமி டீச்சர் மிகவும் வருத்தப்படுகிறார்.

பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு மனைவியுடன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சென்று அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, அங்கேயும் அவருக்கு அந்தப் பெண்ணின் அடி ஞாபகம் வருகிறது” என்று பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சுயசரிதையான ‘சிதம்பர ஸ்மரண’ நூலில் உள்ள ‘பிழை’ என்னும் கதையை கமல் கூறி முடித்தார்.

கமல்

மேலும் “இங்கே யாருமே பாலியல் சுரண்டலுக்கு உதவி செய்யக்கூடிய ஆள்கள் இல்லை. அதை மறுப்பவர்கள் தான்” என்பதை தெளிவுபடுத்தி, “அது எப்படி பவா செல்லாத்துரை ஒரு கதையை இப்படி புனையலாம் என்று கேட்க முடியாது. அது கதைசொல்லிகளுக்கு உரித்தான விஷயம். ஒருவேளை பவா செல்லத்துரை தான் சொல்லும் கதைக்கு சுவாரஸ்யமான பார்வையாளர்கள் இல்லாததால், சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்று பாதி கதையோடு நிறுத்தியிருக்கலாம்” என்றும் கூறினார்.

பவா செல்லத்துரை சொன்னக் கதைக்கும், கமல் சொன்ன கதைக்கும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசம் உள்ளது.

`பெண்களைப் பார்த்து பிரமாதமா சமைக்கிறாங்கன்னு சொல்லக் கூடாது… அதுல ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆகி சமைக்க ஆரம்பிச்சுடுவாங்க… அவங்க எங்கேயோ போக வேண்டியவங்க’ என்று கூறிய ஒருவர், தான் சொல்லும் கதைக்காக பாதிக்கப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டதாக புனைவது எந்த வகையில் சரி?

பவா செல்லத்துரை

என்னதான் பார்வையாளர்கள் சுவாரஸ்யமாகக் கேட்கவில்லை என்றாலும், ஒரு கதைசொல்லியாக கதையின் முக்கியமான சாராம்சத்தை கட்டாயம் சொல்லியிருக்க வேண்டும். கடைசியில், பிக் பாஸ் போட்டியாளர்கள் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டை பற்றி கேள்வி எழுப்பும்போதோ அல்லது அந்தப் பெண் மன்னிப்பு கேட்டது தவறு என்று கூறும்போதாவது முழுக் கதையும் சொல்லவில்லை என்றாலும், அவர்களுக்கான சரியான பதிலை கூறியிருக்கலாம். அப்போது தேவையில்லாத இந்தச் சர்ச்சை எழுந்திருக்காது.

பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் தைரியத்தைச் சொல்கிறேன் என்றும், பாதிக்கப்பட்ட பெண் மன்னிப்பு கேட்கிறாள் என்றும் பவா செல்லத்துரை கூறிய கதை, பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் தைரியத்திற்கும் பாராட்டு தேடித் தரவில்லை…அந்தப் பெண்ணுக்கும் சுயமரியாதையைத் தரவில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.