“திமு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது. இன்றும் வரவேற்கிறது” – ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது. இன்றும் வரவேற்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100-ல் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்?”

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள். மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது. இன்றும் வரவேற்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

செந்தில் பாலாஜி, வருமான வரித்துறை

பண மோசடி வழக்கில் சிறையிலிருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அவரின் ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள காசியின் வீட்டில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. செந்தில் பாலாஜிடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கும் காசி, தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் மனு… இன்று விசாரணை!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்துவைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

சீமான்

தி.மு.க அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

வருமான வரித்துறை

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த ரெய்டு நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சென்னையில் நான்கு தொழில் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30 இடங்களில் ரெய்டு நடக்கிறது. பொன்னேரியிலுள்ள ராதா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், நாவலூரிலுள்ள டேட்டா பேட்டர்ன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில் ரெய்டு நடக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி

இதற்கிடையே ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனு, முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20-ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதி அல்லி இன்று தீர்ப்பளிக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.