காவிரி விவகாரத்தில் திமுக அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் கஷ்டப்படுகின்ற விவசாயிகளின் துன்பத்தை கண் இருந்தும் பார்க்காமல், காது இருந்தும் கேட்காமல், வாய் இருந்தும் பேசாமல் இருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தான், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வருகிறது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் பேசி, கர்நாடக முதல்வர் சித்ராமையாவின் மூலம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தரலாம்.

ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். மக்களின் நலனுக்காக தான் நாங்கள் ஒன்று சேர்கின்றோம் என கூட்டணி கட்சிகள் சொல்லிவிட்டு, ஒன்று, இரண்டு எம்.பி எம்.எல்.ஏ சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு மக்கள் பிரச்னைக்காக திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்க அஞ்சுகின்றன.

இன்றைக்கு நமது நாட்டில் அறிவியல் எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால், உணவுக்கு மாற்றாகவும், விவசாயத்திற்கு மாற்றாகவும், எதுவும் இந்த நாட்டில் கண்டுபிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல..! அது மக்களின் வாழ்வியல் முறையாக இருந்து வருகிறது. தன்னை டெல்டாக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்னைகளை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.

திமுக என்கிற தீய சக்தியையும், அதிமுக என்கிற அடிமைகள் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டும் வரை, அமமுகவின் பணிகள் ஓயாது..! முன்பை விட எங்களுடைய அமமுக இயக்கம் வலுப்பெற்று வீரியமிக்க கட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாற்று சக்தியாக ஒரு நாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திகழும்.

நாட்டில் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறு தரப்பு மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசாமல், அவருடைய மகன் உதயநிதியை வைத்து சனாதன ஒழிப்பை பற்றி பேசி வருகிறார்.

சனாதனம் என்கிற ஒன்று இருக்கிறதா..! என்பதே இன்று வரை தெரியவில்லை. நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியது சனாதனம் அல்ல, திமுக தான்..! புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை திமுக தமிழ்நாட்டில் வாலாட்ட வில்லை. ஆனால், பழனிசாமியால் தான் திமுக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை அறியாமையில் தள்ளியும், ஏமாற்றியும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுதான் திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது.

நாட்டில் விவசாயிகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்ற இந்த நிலையில், யார் இப்போது சனாதனத்தை பற்றி எல்லாம் இவர்களிடம் கேட்டார்கள்? உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, விளையாட்டாக பேசி வருகிறார். திமுகவை நம்பி செந்தில் பாலாஜி நடுத்தெருவில் தற்போது நிற்கிறார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது தான் காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சியை கொண்டு வந்து திமுக கட்சிக்காரர்களை முட்டிக்கு முட்டி தட்டி உட்கார வைத்தார்கள். ஆனால், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதன் பிறகும் கருணாநிதி, நேருவின் மகளே வருக..! என்று பிரசாரம் செய்தார். இப்படிப்பட்ட கேவலமான திமுக தான் நாங்கள் மிகவும் பலம் வாய்ந்த கட்சி என்றும், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றும் மக்களிடம் பொய் பேசி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கு துப்பு இல்லாத திமுக அரசாங்கம், டாஸ்மாக்கில் உள்ள சாராயத்தை எப்படியேல்லாம் விற்கலாம் என்று அறிவியல் பூர்வமாக சிந்தித்து வருகிறது. ஸ்டாலின் தீபாவளிக்கோ, விநாயகர் சதுர்த்திக்கோ வாழ்த்து தெரிவிக்க மாட்டார். ஆனால், கேரளாவில் கொண்டாடப்படுகிற ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் கூட வாழ்த்து தெரிவிப்பார். முதலில் உதயநிதி ஸ்டாலின் அவர் வீட்டில் உள்ள சனாதனத்தை ஒழித்து விட்டு வந்து மக்களிடையே சனாதத்தை ஒழிப்பதை பற்றி பேசட்டும்.

டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி கருகி வருகிறது. உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தந்து விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போது மன்னார்குடியில் மட்டும்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அரசு காவிரி நீரை பெற்றுத் தர மறுத்தால் தமிழ்நாடு முழுவதும் அமமுகவின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.