டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவிருக்கும் பாரத் மண்டபத்தின் முகப்பில் தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் செய்யப்பட்ட உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி, “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பர்யங்களுக்கு ஒரு சான்றாக அமையும்” என தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நடராஜர் சிலை

`இது தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெருமை’ என சிலையை வடிவமைத்த ஸ்தபதி நெகிழ்ந்திருக்கிறார். டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடக்கவிருக்கிறது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பில் வைப்பதற்காக, மத்திய அரசின் கலாசாரத்துறையின்கீழ் இயங்கும், இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் சார்பில், சோழர் கால நடராஜர் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வடிவமைக்கும் பொறுப்பு தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்ரீ தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதா கிருஷ்ணன், ஶ்ரீகண்டன், சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று பேரும் சேர்ந்து சிலையை செய்து முடித்த பின்னர், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட்டின் தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையிலான அலுவலர்கள் சிலையைப் பெற்று எடுத்துச் சென்றனர்.

சுவாமிமலையில் செய்யப்பட்ட நடராஜர் சிலை

பின்னர் மாநாடு நடைபெறும் இடத்தில் வைப்பதற்காக 18 நபர்கள் சென்றிருந்தனர். அந்த பணிகள் முடிந்த நிலையில், தற்போது நடராஜர் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிலையின் பிரமாண்டம் உள்ளிட்டவை பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நடராஜர் சிலை குறித்துப் பதிவிட்டிருப்பது பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

இது குறித்து ஶ்ரீகண்ட ஸ்தபதியிடம் பேசினோம். “சுவாமிமலையில் சோழர்கள் காலத்திலிருந்து ஐம்பொன்னில் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜி20 மாநாட்டில் வைப்பதற்காக உலகத்திலேயே பெரிய அளவிலான நடராஜர் சிலையை வடிவமைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொண்டனர். அதன்படி சோழர்கள் கால முறைப்படி பழைமை மாறாமல் நடராஜர் சிலையைச் செய்தோம்.

நடராஜர் சிலையுடன் ஸ்தபதி

வழக்கமாக பஞ்சலோகத்தில் சிலை செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்தச் சிலையை செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், இரும்பு, பாதரசம் உள்ளிட்ட எட்டு அஷ்ட தாதுக்கள் பயன்படுத்தி செய்திருக்கிறோம். பாதரசம், இரும்பு, வெள்ளீயம் சேர்ந்தால் சிலையின் உறுதித்தன்மை அதிகரிக்கும். அதை வெட்டவோ அறுக்கவோ முடியாது. பல ஆயிரம் ஆண்டுகள் சேதமடையால் அப்படியே நிலைத்து இருக்கும். அதற்காகவே இவற்றை கலந்து செய்திருக்கிறோம்.

28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட இந்தச் சிலையின் மேல் பகுதி 18 டன் எடை, பீடம் 5 டன் என மொத்தம் 23 டன் எடை கொண்டது. 10 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஸ்தபதிகள் தலைமையில் நாற்பதற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் ஆறு மாதங்களில் இதனை செய்து முடித்தோம்.

டெல்லியில் ஜி-20
மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை

அதே போல் சுவாமிமலையிலிருந்து 18 பேர் சென்று மாநாட்டு முகப்பில் நடராஜர் சிலையை அமைத்திருக்கின்றனர். இதனை பிரதமர் மோடி நம் வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண் முன்னே நிறுத்துவதாக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார். இதை சுவாமிமலையின் பாரம்பர்ய சிற்பக் கலைஞர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். உழைப்புக்கு கிடைத்த பாராட்டு உற்சாகத்தை தந்திருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.