நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மாணவரின் பெற்றோர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும். எனவே அது தொடர்பான மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யலாம். நீட் தேர்வுக்குப் பின்னரே மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் விலக்கு தொடர்பான மசோதாவை குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்” என பதிலளித்தார்.

ஆளுநர் ரவி

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அதேவேளையில், இத்தேர்வினால் ஏற்படும் மரணங்கள் என்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நீட் தேர்வினால் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஜெகதீஸ், அவரின் தந்தை செல்வ சேகர் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருப்பதோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ஒழித்துவிடுவோம், நீட் தேர்வை நீக்குவதற்கான சூட்சுமம் தங்களுக்கு தான் தெரியும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்ததாக முதல்வர் ஸ்டாலினையும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே வருகிற 20-ம் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அறிவித்திருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த தகுதியும், முகாந்திரமும் திமுக-வுக்கு இல்லை. நீட் தேர்வுக்கு போராட தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் குலாம் நபி ஆசாத் அமைச்சராக இருந்த போது, இணை அமைச்சராக திமுக-வை சேர்ந்த காந்திசெல்வன் இருந்தார். அவர்தான் மசோதாவையே அறிமுகம் செய்தார். அப்போது என்ன காதில் பூ சுத்தி கொண்டிருந்தீர்களா? வாயில் வடை வைத்து கொண்டிருந்தீர்களா?

எப்படிபட்ட சந்தர்பவாதம் என்பது தமிழக மக்களுக்கு நிச்சயம் தெரியும். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக-வுக்கு கொஞ்சமும் உரிமையில்லை. நீட் தேர்வு விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. அதிமுக மாநாடு வெளியே தெரியக்கூடாது என்கிற காழ்ப்புணர்ச்சியால் ஆகஸ்ட் 20-ல் திமுக போராட்டம் அறிவித்துள்ளது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்காக வரும் 20-ம் தேதி திமுக-வின் மாணவர் அணி, மருத்துவர் அணி, இளைஞர் அணி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். ஜெயக்குமார் கேட்ட கேள்விக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்க. அவர் கையில் பூ வைத்திருக்கிறார். அவர் சுற்றட்டும். நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறோம். ஆளுநர் உங்கள் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசியின் பிரதிநிதிதானே. அவர் ஒரு பெற்றோரிடமே நீட் விலக்குக்கு கையெழுத்து போட மாட்டேன் என்று தைரியமாக சொல்கிறார். அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு கண்டனமாவது தெரிவித்தீர்களா. ஆளுநரை எதிர்த்தோ, ஒன்றிய பாஜக-வை எதிர்த்தோ ஒரு மூச்சு விட முடிகிறதா. நாங்களாவது எங்கள் எதிர்ப்பை தைரியமாக தெரிவிக்கிறோம். சட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று சொல்கிறோம். நீங்கள் ஒரு கண்டனமாவது தெரிவித்தீர்களா…” என்று எதிர் கேள்வியினை முன் வைத்திருக்கிறார்.

நிலைமை இவ்வாறு இருக்க நீட் விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “நீட்டை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்த தலைவர் இந்தியாவிலேயே புரட்சி தலைவி அம்மாதான். வலிமையான குரலாக ஓங்கி ஒலித்தார். அவருடைய வழியில் இன்றைக்கும் கொள்கை உறுதியோடு நீட்டை எதிர்த்து கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் எடப்பாடியார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து என்று அறிவித்தது யார்… ஏன் ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்லும் போது மட்டும் மௌனம் காக்கின்றனர்” என்றார்.

சி.விஜயபாஸ்கர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆளுநரை பொறுத்தவரை இவர்கள் ஒரு மசோதா இயற்றி அனுப்பி அந்த மசோதாக்கு சில விளக்கங்கள் கேட்டு, அதற்கு இவர்கள் பூர்த்தி செய்து திரும்ப அனுப்பினார்கள். ஆளுநர் இரண்டாவது முறை அனுப்பிய மசோதாவை திரும்ப அனுப்ப முடியாது. நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலையில் மசோதா டெல்லியில் இருக்கிறது.

ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்பது திசை திருப்பும் வேலைதானே. மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இங்கு இவர் கையெழுத்து போட்டுத்தானே ஆக வேண்டும். முப்பத்தெட்டு எம்.பி-கள் வைத்திருக்கும் திமுக, மத்திய உள்துறைக்கு அனுப்பிய பிறகு அங்கு போய் அழுத்தம் கொடுக்காமல் இங்கு வெறும் வாயில் அவல் மெல்லுவது ஏன்…” என்றவரிடம், ‘ஆளுநரின் கருத்துக்கு அதிமுக மௌனம் காப்பது ஏன்?’ என்கிற கேள்வியை முன் வைத்தோம்.

ஜெயக்குமார்

“கையெழுத்து போட மாட்டேன் என்று ஏன் அவர் சொன்னார் என்பது தெரியவில்லை. சட்டப்படி பார்த்தால் ஆளுநரின் ரோல் இங்கு ஒன்றுமே இல்லையே. அப்படி இருக்கும் போது அவரை எதற்காக நாங்கள் விமரசனம் செய்ய வேண்டும். அவர்தான் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டாரே. திமுக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தால் ஆளுநர் இங்கு ஒன்றுமே பண்ண முடியாதே. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் எதற்கு ஆளுநரை எதிர்க்க வேண்டும். நீட் விவகாரத்தில் இங்கு திமுக-வினரால் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஆளுநர் மீது அதை மாற்றுகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் பசப்பு வார்த்தை காட்டி உண்ணாவிரதம் என்று நாடகங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இனி இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.