தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திரைப்பள்ளி 2023 – 2024-ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழு நடத்திய 11வது சர்வதேச குறும்பட ஆவணப்பட விழாவில், `ஓராண்டு திரைப்பட ஆக்கப் பயிற்சி’ என்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து திரைப்பள்ளியின் ஆசிரியர் இயக்குநர் சிவக்குமாரிடம் பேசினேன், “இந்த முன்னெடுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொடங்கினோம். அப்போது வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்றன. அதில் 22 மாணவர்கள் கலந்து கொண்டு முழுவதுமாகப் பலன் பெற்றனர். அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு வகுப்பினை நேரடியாக நடத்தினோம்.

தமுஎகச திரைப்பள்ளி

அது தஞ்சாவூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. வகுப்பின் இறுதியில் குறும்படம் எடுப்பதற்கான செயல்முறை வகுப்பும் நடத்தப்பட்டது. இரண்டு பிரிவினர்களாக மாணவர்கள் பிரிந்து கதை எழுதினர். அதைப் படம் பிடிக்கத் தொடங்கினர். முடிவில் அதை ஒரு திரைப்படமாக மாற்றினர். அது தற்போது நடைபெற்ற குறும்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது” என்றார்.

இந்த ஆண்டு நடைபெறப் போகும் வகுப்புகள் குறித்துப் பேசியவர், “இம்முறை ஒரு வருட வகுப்பாக நடைபெறும் இது, ஐந்து மாவட்டங்களில் நடைபெற உள்ளது. முதல் ஐந்து மாதங்கள் தஞ்சாவூரில் தியரி பாடங்களும் அடுத்து இரண்டு மாதங்கள் கம்பம், அடுத்த இரண்டு மாதங்கள் பாண்டிச்சேரி எனச் செயல்முறை வகுப்புகளும் நடைபெற உள்ளன. பின்னர் வட்டார மொழியினையும், பல்வேறு நிலத்தில் வாழும் மக்களைப் புரிந்து கொள்ளும் விதமாகவும் கோவை மற்றும் கன்னியாகுமரியில் தலா ஒரு மாதம் வகுப்புகள் நடைபெறுகின்றன. இறுதிக்கட்ட வகுப்புகள் சென்னையில் ஒரு மாத காலம் நடைபெறும்” என்கிறார் சிவகுமார்.

தமுஎகச திரைப்பள்ளி

இவ்வகுப்புகளை துறை சார்ந்த பல வல்லுநர்களும், எழுத்தாளர்களும் நடத்த உள்ளனர். குறிப்பாக இயக்குநர் சசி, இயக்குநர் பிரம்மா, நடிகர் ரோகிணி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் போன்றோர் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார். பாடத்திட்டத்தினை பொறுத்தவரை திரைக்கதையாக்கம் (Screenplay), இயக்கம் (Direction) படத்தொகுப்பு (Editing), ஒளிப்பதிவு (Cinematography) ஆகியவற்றின் அடிப்படைகள் சொல்லித் தரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி

  • 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • தமிழ், ஆங்கிலம் மொழிகளை ஓரளவு எழுதவும் புரிந்துகொள்ளவும் திறனுள்ளவராக இருத்தல் வேண்டும்.

  • திரைப்படத்துறை மீது ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். முன்அனுபவம் இருப்பின் நல்லது.

  • மாணவிகளுக்குத் தனி முன்னுரிமை வழங்கப்படும்.

திரைப்பயிற்சி

இதற்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.17,000 (நுழைவுக்கட்டணம் ரூ.2000 உட்பட) வசூலிக்கப்படவுள்ளது. இது குறித்துப் பேசிய சிவக்குமார், “பல லட்சம் வாங்கிக் கொண்டு நடத்தும் வகுப்புகளை, நாம் மாணவர்களின் பொருளாதார சூழல் கருதி சொற்பமான கட்டணத்துக்கு நடத்துகிறோம். வயது அதிகமுடையவர்களும் ஆர்வமாக இதற்காக விண்ணப்பித்து வருகிறார்கள். விதிகளின் அடிப்படையில் சேர்க்க முடியாத சூழல் உள்ளது. மற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அக்டோபர் மாதத்திலிருந்து வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதில் தேர்வாகும் மாணவர்களுக்குச் சுயாதீன மற்றும் வெகுஜன சினிமா ஆகிய இரண்டின் அடிப்படையிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.” என்றார்.

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் ஆகஸ்ட் 31.

இந்த லிங்கிங்கின் வழியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.