நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டுமே ஆக்டிவாக இருப்பது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வழக்கம். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை ஜூலை 18-ம் தேதி பா.ஜ.க நடத்துகிறது. இது தொடர்பான அறிவிப்பு தேசிய அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ராமதாஸ், மோடி, அன்புமணி

1998-ம் ஆண்டு, பா.ஜ.க தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. அப்போது, இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவும், அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் இருந்தனர். 1998 முதல் 2004 வரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, வாஜ்பாய் பிரதமராக இருந்தார். 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் வெற்றிபெற்றது. அந்த பத்தாண்டுக்கால ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.

மீண்டும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி. நரேந்திர மோடி பிரதமரானார். தற்போது, அ.தி.மு.க., பா.ம.க., சிவசேனா, அசாம் கண பரிஷத், அகில இந்திய என்-ஆர்.காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிவிட்டது. விவசாயிகள் பிரச்னையின்போது, சிரோன்மணி அகாலி தளம் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

மோடி, எடப்பாடி பழனிசாமி

பல்வேறு காலக்கட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க உட்பட பல கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகள இந்தக் கூட்டணியில் இடம்பெற்றன. அந்தத் தேர்தலில் (தமிழக அளவில்) தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது. அ.தி.மு.க மட்டும் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. அதன் பிறகு, அ.தி.மு.க மட்டுமே பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடருவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், தே.மு.தி.க-வோ, பா.ம.க-வோ பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்றனவா என்பதே தெரியவில்லை. ஏனெனில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எந்த செயல்பாடும் இல்லை.

தற்போது, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தக் கூட்டணி களமிறங்கியிருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அவர்கள், தற்போது பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் கூடுகிறார்கள். இந்த முறை, ம.தி.மு.க, வி.சி.க என கூடுதலாக பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். மேலும், காங்கிரஸின் செயல் தலைவர் சோனியா காந்தி இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவிருக்கிறார்.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

பாரத் ஜோடோ யாத்திரையால் ராகுல் காந்தியின் செல்வாக்கும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்கிற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தச் செயல்பாடு தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், பா.ஜ.க-வும் களமிறங்க முடிவுசெய்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் அதே நாளில், டெல்லியில் தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. புதிய வரவாக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை பங்கேற்கவிருக்கின்றன.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

அ.தி.மு.க-வுடன், தமிழகக் கட்சிகளான பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும், கூட்டத்தில் பங்கேற்றுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஜூலை 18-ல் நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகுதான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்ற விவரமே முழுமையாகத் தெரியவரும். அந்தக் கூட்டத்தின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதும்கூட பிறகுதான் தெரியவரும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.