பெரும்பாலானவர்கள் `இம்போஸ்டர் சிண்ட்ரோம் (Imposter Syndrome) ‘ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை அனுபவித்திருப்பார்கள். எவ்வளவுதான் சிறப்பாக உழைத்தாலும், ‘நாம சரியா பண்ணலை, இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்’ என்ற போதாமை மனதில் ஒட்டிக்கொண்டே இருக்கும் மனநிலைதான் இது.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு `நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டும்’ என்று இலக்கு நிச்சயிக்கும் பெற்றோர் அதிகம். 100 மதிப்பெண்கள், ஃபர்ஸ்ட் ரேங்க் என்று குழந்தைகளுக்கு, எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற அழுத்தம் தருவது, மற்றவர்களுடனான ஒப்பீடு ஆகியன, ஒரு கட்டத்தில் அவர்கள் வளர்ந்த பின் நாளடைவில் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அத்துடன், அவர்கள் செய்யும் வேலையில் மனநிறைவின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ’இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்கள் இதைதான் எதிர்கொள்வார்கள்.

சமீத்தா ஜெயின் | உளவியல் நிபுணர்

இந்த உளவியல் சிக்கலிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது பற்றி, உளவியல் நிபுணர் சமீத்தா ஜெயினிடம் பேசினோம்.

“இம்போஸ்டர் சிண்ட்ரோம் எனும் உளவியல் பிரச்னையில் இருக்கும் ஒருவர், தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்வார். அவர் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும், இந்த உலகமே அவரை கொண்டாடினாலும், மனநிறைவு இல்லாமையை வெளிப்படுத்துவார்.

தனது கடின உழைப்பால் வெற்றியை அடைந்திருந்தாலும், அதற்குக் காரணம் சூழ்நிலை மற்றும் வேறு நபர்கள்தான் என்று எண்ணுவார். எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும், `இந்த வெற்றிக்கு நான் தகுந்தவனா?’ என்று சுய சந்தேகப்படுவார். அதோடு, சாதனைகள் செய்தாலும் கொண்டாட்டங்கள் இன்றி மௌனமாக கடந்து செல்லும் இயல்புடையவராக இருப்பார். இதற்கான காரணங்களில் முதன்மையானது, குழந்தைப் பருவத்திலும், வளரும் பருவத்திலும், எதிலும் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் பதிக்கப்படுவது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது இலக்குகளைத் திணிக்கின்றனர். இந்த இலக்கை அடைந்தால் தான் மதிப்புக்குள்ளானவர் என்று நிர்ணயிக்கின்றனர். குழந்தைகளின் மதிப்பு என்பது இலக்கில் இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மதிப்பு அவர்கள் சாதனைகளில் எனும்போது, அவர்கள் அதைத் தேடி ஓடும்போது உளவியல் ரீதியாக பல பிரச்னைகளும் கூடவே வருகிறது.

உதாரணமாக, முதலாம் வகுப்புப் படிக்கும் குழந்தையிடம் ‘நீ ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் சாக்லெட் வாங்கித் தருவேன்’ என்றால், அந்தக் குழந்தையின் இலக்கு சாக்லெட்டை நோக்கித்தான் இருக்கும்.

குழந்தை வளர்ப்பு

அதுபோல ஒரு சில பெற்றோர், ‘நீ இப்படி இருந்தால்தான் பெஸ்ட் குழந்தை’ என சில குணங்களை கட்டமைக்கின்றனர். இதுவும் குழந்தைகளுக்கு உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை இல்லாமையையும் உண்டாக்கும். நாளடைவில், ‘நான் இன்னும் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும்’ என்ற ஒரு அழுத்தத்தையும், எதை செய்தாலும் ‘இன்னும் பர்ஃபெக்ட்டாக வேண்டும்’ என்று மனநிறைவு இல்லாமையையும் ஏற்படுத்திவிடுகிறது.

நாளடைவில் அவர்கள் எதிர்பார்க்கின்ற ‘பர்ஃபெக்ட்னஸை’ அடையாத போது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றுக்காரர்களாக, கையாலாகாதவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். சுயசந்தேகம் அதிகரிக்கும் போது, தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.

இந்த உளவியல் பிரச்னை இருக்கும் ஒரு சிலர், தங்களுக்கென்று தினமும் இலக்கு வைத்திருப்பார்கள். உதாரணமாக, ‘ஒரு நாளுக்கு 500 பக்கங்கள் படிக்க வேண்டும் ‘ என்று. ஆனால் ஏதேனும் சூழ்நிலைகளால் தவறும்போது, அவர்களால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை எனும்போது, மனரீதியாக மிகவும் சோர்ந்துபோய் தளர்வடைவார்கள்.

’இம்போஸ்டர் சிண்ட்ரோமை’ பொறுத்தவரையில், அதன் தாக்கம் எல்லோரிடமும் சிறிதளவேனும் இருக்கும். ஆனாலும் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையோ, சமூக வாழ்க்கையையோ பாதிக்காதவரையில் பிரச்னை இல்லை. ஒருவேளை அது தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது என்றால், உடனடியாக உளவியல் நிபுணரை சந்தித்து, உரிய தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.

மாதிரிப் படம்

குழந்தைகள் வளரும் பருவத்தில், பெற்றோர்கள் தங்கள் இலக்கை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. படிப்பு சார்ந்தோ, மற்ற விளையாட்டுத் துறை சார்ந்தோ, குழந்தைகளின் சிறிதளவு முன்னேற்றத்திலும் மகிழ்ச்சியடைய வேண்டும். குழந்தைகளை முயற்சி செய்ய விட வேண்டும். அவர்கள் முயற்சியின் ஒவ்வோர் அடிகளிலும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

குழந்தைகளின் மதிப்பு அவர்கள் வாங்கும் முதல் ரேங்க்கில் இல்லை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை நல்லவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. ஆனால், எல்லாவற்றிலும் என் குழந்தை முதலாவதாக, பெஸ்ட்டாக, பெர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு சரியான குழந்தை வளர்ப்பு முறை அல்ல” என்கிறார் மருத்துவர் சமீத்தா ஜெயின்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.