மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்துவரும் மோதல் இரண்டு மாதங்களாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மாநிலத்தின் பெரும்பான்மையான `மைதேயி’ சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3-ம் தேதி சிறுபான்மையினரான `குக்கி’ பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலில் மைதேயி இனக்குழுவினரும், குக்கி இனக்குழுவினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள மாநிலமே கலவர பூமியாக மாறியது.

மணிப்பூர்

இந்தக் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல மைதேயி சமூகத்தின் நூற்றுக்கணக்கான கோயில்களும் சிதைக்கப்பட்டன. முக்கியமாக இந்தக் கலவரத்தில் குக்கிப் பழங்குடியினர் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

`நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கலவரத்தை அடக்குவதற்கு மாநில பா.ஜ.க அரசு தவறிவிட்டது. காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது. முதல்வரும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவுடன் குக்கி பழங்குடிகளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது’ என அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தொடர்ந்து கலவரத்தை அடக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு தரப்பினரிடமும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன. மணிப்பூர் விவகாரம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்க, 50 நாள்களுக்கும் மேலாக பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் வாய்மூடி மௌனமாகவே இருந்தார். இது எதிர்க்கட்சிகளை இன்னும் உக்கிரமாகச் சீண்டின. அந்த நிலையில், உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

மணிப்பூர்

அதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வடகிழக்கு மாநிலங்களின் நான்கு எம்.பி-க்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து சுமார் நான்கு மணிநேரமாக விவாதித்தனர்.

மணிப்பூர்

குறிப்பாக பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள், `மணிப்பூர் விவகாரத்தில் உண்மையில் தீர்வு காணவேண்டும் என்றால், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அனைத்துக்கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைக்கவேண்டும். பிரதமர் வந்த பிறகு இதேபோல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தியினர்.

அதைத் தொடர்ந்து பேசிய அமித்ஷா, “மணிப்பூரில் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. கலவரம் தொடங்கிய பிறகு மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமரிடம் தினமும் பேசி வருகிறேன். அவரின் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்!” எனத் தெரிவித்தார்.

மோடி – அமித்ஷா

அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டவும், இயல்புநிலைத் திரும்பவும் மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேன் சிங், `மணிப்பூரின் நிலைமை இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே கூற முடியாத அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது!’ என அதிர்ச்சியாகத் தெரிவித்தார்.

அமித் ஷா – மணிப்பூர் முதல்வர்

இந்த நிலையில், நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய பிரதமர் மோடியை, அவரின் இல்லத்தில் சந்தித்த அமித் ஷா, மணிப்பூர் நிலவரம் குறித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மணிப்பூரில் அமைதி நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன?

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். வன்முறை பரவாமலிருக்கு 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கிறது. இணைய சேவைகளும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், மணிப்பூர் மாநிலக் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து கலவரக்காரர்கள் உருவாக்கியிருந்த 12 பதுங்கு குழிகளை கைப்பற்றி அழித்திருக்கின்றனர். கலவரம் தொடர்பாக சுமார் 3,700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சி.பி.ஐ விசாரணையும் எஸ்.ஐ.டி சிறப்பு விசாரணையும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

மணிப்பூர் கலவரம்

இவை தவிர, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல், சட்டம் ஒழுங்கை மேம்படுத்துதல், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த மாதம் (ஜூன்) 29,30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்குச் செல்லவிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.