தொடரும் கன மழை; தேங்கிய மழை நீர்; இடம்: கணேஷ் புரம், வியாசர்பாடி, சென்னை

தொடரும் கன மழை; தேங்கிய மழை நீர்; இடம்: கணேஷ் புரம், வியாசர்பாடி, சென்னை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில், “காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது.

மழை

மேலும், சென்னை, அதன் சுற்றுவட்டாரங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார்வளைகுடா, தென்தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்பிருப்பதால், இந்தப் பகுதி கடல்களுக்கு இரண்டு நாள்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வடசென்னை, தென்சென்னை, புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், கொரட்டூர், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கிய மழை நேற்று இரவு வரை விட்டு விட்டுப் பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன.

மழை, பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி கத்திப்பாரா பாலத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் மழைநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் என ஆறு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டப்படி இன்று 12-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.