பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையிலான வார்த்தைப்போர் முற்றியிருக்கிறது. அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, பா.ஜ.க-விலிருந்து சிலர் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், தன்னை பிரசாரங்களுக்குக்கூட பயன்படுத்தவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார் எஸ்.வி.சேகர். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் வாயிலாக அண்ணாமலைக்கு எதிராக தீவிரமாக கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலை மீது அவ்வப்போது அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்த எஸ்.வி.சேகரும் தற்போது அதிரடியாக பல விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

எஸ்.வி.சேகர்

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நான் யாருக்கும் விரோதி இல்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக டெல்லிக்குச் செல்லுங்கள். இண்டிகோ விமானத்தில் 6,000 ரூபாய்தான் டிக்கெட், உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் டிக்கெட் போட்டுத் தருகிறோம். பழைய பஞ்சாங்கத்தை வைத்து யாராவது கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால், நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். `நாங்கள் அந்தக் காலத்தில் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம், எங்க அப்பா அப்படி இருந்தாரு, எங்க தாத்தா இப்படி இருந்தாரு…’ என்பதெல்லாம் உங்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள். இது எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்ல, அவருடன் இருக்கும் அனைவருக்கும்தான். உங்கள் பழம்பெருமை கதையெல்லாம் எங்களிடம் சொல்லிக் கட்டுப்படுத்த முடியாது.

பா.ஜ.க தனி நபர்களுக்குச் சொந்தமானது இல்லை. எல்லாருக்குமான கட்சிதான். இது ஒரு காட்டாற்று வெள்ளம், ஒருத்தரோ அல்லது இரண்டு பேரோ கட்டுப்படுத்த முடியாது. அண்ணாமலையைப் பொறுத்தவரை இப்படித்தான் இருப்பேன். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கோங்க. தலைவராக இருந்தாலும், இப்படித்தான், தொண்டனாக இருந்தாலும் இப்படித்தான், அண்ணாமலை இருப்பான். எனக்குக் கொஞ்சம் திமிரு அதிகம். வீட்டுக்குப் போய் மாட்டப் பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன், ஆட்டைப் பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன். தலைவனானாலும் இப்படித்தான் இருப்பேன்” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

அண்ணாமலை

இந்த நிலையில், அண்ணாமலையுடன் என்ன தகராறு என்பது குறித்து எஸ்.வி.சேகரிடம் தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்டோம். “நான் டெல்லிக்குச் செல்வதற்கு அண்ணாமலை ஏன் டிக்கெட் போட்டுத் தர வேண்டும்… அண்ணாமலை, அவரின் செலவுக்கே நண்பர்களிடமிருந்து மாதாமாதம் 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். நான் சொந்த உழைப்பில் சம்பாதித்து, நேர்மையாக வரி செலுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர் டிக்கெட் போட்டுத் தர வேண்டிய அவசியம் இல்லை.

டெல்லிக்குச் சென்று நான் புகார் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் தயவில்தான் பா.ஜ.க இயங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறாரா… உலகத்திலேயே மிகப் பிரபலமான, மிகத் திறமையான தலைவர் பிரதமர் மோடி. அவருடைய அரசுடன் ஒப்பிடுகையில் அண்ணாமலை ஒரு தூசு. பா.ஜ.க பைலாவின்படி அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படவில்லை.

எஸ்.வி.சேகர்

அவர் ஒன்றுமே கிடையாது. ஒரு காவல் நிலையம்போல பா.ஜ.க-வை நடத்திக் கொண்டிருக்கிறார். யாரையும் பேச விடாமல், தான் மட்டுமே பேச வேண்டுமென்று அண்ணாமலை நினைக்கிறார். அதற்கு பா.ஜ.க என்ன ஃபைனான்ஸ் கம்பெனியா… பா.ஜ.க-வில் இருக்கும் பிராமணர்களை ஒடுக்க வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.