பா.ஜ.க-வை எதிர்ப்பதைப் போலவே, காங்கிரஸையும் கடுமையாக எதிர்த்துவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திடீரென காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுவருகிறார்.

நிதிஷ் குமார்

கடந்த ஏப்ரல் மாதம், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்த நிதிஷ் குமார், கொல்கத்தாவுக்குச் சென்று முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்துப் பேசினார். பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் இணைய வேண்டும் என்று நிதிஷ் குமார் போன்றவர்கள் வலியுறுத்திவந்தாலும், அதற்கு மம்தா பானர்ஜி பிடிகொடுக்காமல் இருந்துவந்தார்.

தற்போது, கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது. தென் இந்திய மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்ற நிலையில், அந்த ஆட்சியை காங்கிரஸ் அகற்றியிருக்கிறது. இது, தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை, மம்தாவின் கருத்திலிருந்தும் பார்க்க முடிகிறது.

மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அந்த இடங்களில் காங்கிரஸை தமது கட்சி ஆதரிக்கும் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். அதே நேரம், பிராந்திய கட்சிகள் எங்கெல்லாம் வலுவாக இருக்கின்றனவோ, அந்த இடங்களில் பிராந்திய கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்றும், அந்த வகையில், மேற்கு வங்கத்தில் தமது கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

“எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ, அங்கு அவர்கள் போட்டியிடட்டும். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அதில், தவறு எதுவும் இல்லை. ஆனால், மற்ற கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கும் மம்தா பானர்ஜி, மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில், தொகுதிப் பங்கீட்டில் மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸை நான் ஆதரிப்பேன். மேற்கு வங்கத்தில் அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிடக் கூடாது” என்றார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

முன்னதாக, பா.ஜ.க-வைத் தோற்கடித்ததற்காக கர்நாடகா மாநில மக்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடவே இல்லை. அடுத்த 10 நாள்களில் பாட்னாவில் 12 கட்சிகளின் தலைவர்கள் சந்திக்கப்போகிறார்கள் என்று செய்தி வெளியான பிறகு, மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டில் மாற்றம் வெளிப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா (யு.பி.டி), தி.மு.க., ஆம் ஆத்மி கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ (எம்.எல் – லிபரேஷன்) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கப்போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தை ஆட்சிசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துவிட்டது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று பா.ஜ.க துடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவிவிடுவதாகவும், அது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸார் குற்றம்சாட்டுகின்றனர்.

மம்தா பானர்ஜி

இப்படியான சூழலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால், அது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று மம்தா பார்க்கிறார். எனவேதான், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி, மம்தா பானர்ஜியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அது மட்டுமல்ல, சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சகர்திகி தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்தது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்தத் தோல்வியும் மம்தாவின் நிலைப்பாடு மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.