தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இரண்டும் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்தாலும், இவ்விரு கட்சிகளுக்கான வார்த்தைப்போர்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வார்த்தைப்போர் முற்றி கூட்டணியில் பிளவு ஏற்படுமோ என்கிற அளவுக்கு நகர்ந்தாலும், டெல்லி மேலிடம் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிக ஒட்டுப் போடுகிறதே தவிர, முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தான், ‘அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகிக்கிறது’ என்று அமித் ஷா கூறினார்.

ஆனால், அண்ணாமலையோ , ‘இரண்டு மணி நேரம் அமித் ஷா அவர்களை சந்தித்து பேசினேன். 2024 தேர்தல் 2026 தேர்தல் குறித்தும், அரசியல் சூழல் குறித்து பேசினோம். பேட்டி ஒன்றில் அமித் ஷா சொன்ன கருத்து, `அ.தி.மு.க உடன் தற்போது கூட்டணியில் இருக்கிறோம்’ என்று தான். ஆனால், 2024 தேர்தலுக்கான அ.தி.மு.க கூட்டணி உறுதியானது என இப்போதே யாரும் சொல்ல முடியாது. தொகுதி பங்கீடு குறித்து எல்லாம் பேச வேண்டி உள்ளது. கூட்டணியை பொறுத்தவகையில் எதுவும் கல்லில் பொறிக்கப்பட்டது இல்லை’ என்று மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க இடையேயான கூட்டணியை கேள்விக்குறியாக்கினார். இதற்கிடையே அதே நாளில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ‘அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி வலிமையாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

அண்ணாமலையின் கருத்துக்கு பதில் கூறும் விதமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி குறித்து தேசிய தலைமைத்தான் முடிவு செய்யும். மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை’ என தன் கருத்தை முன் வைத்தார். நிலைமை இவ்வாறு இருக்க, அ.தி.மு.க., பா.ஜ.க இடையேயான இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-விலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் நாம் பேசினோம், “அண்ணாமலையின் பேச்சு லட்சியம், எதிர்கால திட்டம். முருகனின் பேச்சு இன்றைய நிலை, இன்றைய எதார்த்தம். இதில் குழப்பம் ஏதும் இல்லை. ஆனால், கலகம் விளைவிப்பவர்கள் குழப்பப்படுத்தலாம்.  ஒவ்வொருவருக்கும் ஒரு விஷண். அதை சாதிக்க அவரவர் வழியில் யோசனை சொல்கிறார்கள். இப்போது இருக்க கூடிய கூட்டணி, அது சம்பந்தமாக வேகமாக போகக்கூடிய இளைஞர், அவருக்கு மக்கள் மத்தில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் வரவேற்பு, எழுச்சி எல்லாம் வைத்து அவருடைய வார்த்தைகள் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்படுகிறது.

எஸ்.ஆர்.சேகர்

இன்னொருவர் இன்றைய கள எதார்த்தம், நிலைமையை சொல்கிறார். ஆக, ஏற்கனவே இருக்கும் இளைஞருக்கு முடிச்சு போடப்படுகிறது. எந்த ஒரு சொல், யார் வாயின் வழியாக வருகிறதோ அதை பொறுத்து அதன் வேகம், விவேகம், உத்வேகம் கிடைக்கிறது.  அண்ணாமலை சொன்ன விஷயங்கள் ஏற்கனவே கட்சிக்குள் பல பேரால், பல காலம் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றும் சொல்லப்படுகிறது. ஏன்… இருப்பதிலேயே கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கும் நானும் இதைதான் சொல்லி வருகிறேன். யார் பார்வையிலும் படவில்லை. அண்ணாமலை சொன்ன பிறகு பார்வைபடல், எழுச்சி கிடைக்கிறது. எல்.முருகன், அண்ணாமலை இருவருமே கட்சி ஆட்சியில் அமர்வதற்குதான் அவரவர் வழிமுறைகளை சொல்கிறார்கள். இதில் குழப்பமே கிடையாது.

‘நீ அப்படி செய்யக்கூடாது என் முறையைதான் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வது உள்ளுக்குள் ஏற்றுகொள்ளாத மனநிலை இருக்கிறது, அடிதடி நடக்கிறது என்று சொல்லலாம். ஆனால், யாரும் யாரை அப்படி சொல்லவில்லையே. `முருகன் சொல்வது தவறு, முருகன் சொல்வது நடக்காது’ என்று அண்ணாமலை சொன்னால் தகராறு என்று சொல்லலாம். `அண்ணாமலை இளையவர், முதிற்சியற்றவர், பக்குவமில்லாதவர், வேகமாக கொண்டு போனால் விபத்தில்தான் முடியும்’ என்று முருகன் சொன்னால் தகராறு என்று சொல்லலாம். இரண்டு பேரும் அவரவர் கருத்தை சொல்கிறார்கள். ஒரே கூட்டத்தில் உட்கார்ந்து மொத்த கருத்தையும் ஏற்று கொள்கிறார்கள். அதனால் இதில் குழப்பம் ஏதுமில்லை. பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் குழப்பமாக இருக்கலாம். அல்லது, குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பவர்களுக்கு குழப்பமாக இருக்கலாம்” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “எடப்பாடி, அண்ணாமலை இடையே ஒரு நட்பு முரண் முதலில் இருந்தே இருந்தது. அது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு பகை முரணாக மாறி இருக்கிறது. நகராட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டிலும் இந்த பிரச்னை வந்தது. அண்ணாமலை கேட்டதை விட எடப்பாடி குறைவாக கொடுப்பதாக சொன்னார். அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாக தந்து விடலாம் என்று சொன்னார். ஆனால், எடப்பாடி விரும்பவில்லை. அண்ணாமலை தனியாக போட்டி இட்டபோது சராசரியாக 6% வாக்கு கிடைத்தது. இதன்மூலம் பா.ஜ.க வாக்கு வங்கி மூன்று சதவீதத்திலிருந்து ஆறு சதவீதம் உயர்ந்திருப்பதாக அண்ணாமலை கருதுகிறார். 2014-ல் தனியாக கூட்டணி அமைத்த பா.ஜ.க, புதுச்சேரி சேர்த்து மூன்று இடம் வெற்றி பெற்றார்கள். 2019-ல் அ.தி.மு.க கூட்டணி. மூன்று இடத்தையும் இழந்துவிட்டார்கள். இதனை கொண்டு 2024-ல் என்ன வந்துவிட போகிறது என்பதை கணக்கு போடுகிறார் அண்ணாமலை.

தராசு ஸ்யாம்

இராமநாதபுரத்திலிருந்து வளர்ந்திருக்கிறோம் என்று அண்ணாமலை சொல்கிறார். அது உண்மைதான். ஏனென்றால் சிவகங்கையிலிருந்து, கிட்டத்தட்ட தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. இராமநாதபுரத்தில் மோடி நிற்கலாம் என்கிற ஒரு பேச்சும் இருக்கிறது. பிரதமர் வேட்பாளராக 2024- அவருக்கு இறுதி தேர்தல். வாரணாசியிலும், இராமேஸ்வரத்திலும் எம்.பி-யாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது பா.ஜ.க.

இங்கு ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா என அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த வாக்கு தேவை. அதனால்தான் மீண்டும் மீண்டும் எல்லோரும் ஒருங்கிணைந்த வாக்கு என்று சொல்லி வருகிறார் அண்ணாமலை. எடப்பாடி அதை முற்றிலும் எதிர்க்கிறார். அதனால் நட்பு முறண், பகை முறணாக மாறிவிட்டது. அண்ணாமலையின் ஸ்டேண்ட், வியூ பாயின்ட் வேறு. எடப்படி அதற்கு நேர் எதிராக இருக்கிறார்.

இதற்கிடையே கர்நாடக தேர்தல். கர்நாடகாவில் 1983, 89, 99 மூன்று முறை கோலார் தொகுதியில் (தனி தொகுதி) பக்தவச்சலம் எம்.எல்.ஏ -வாக தேர்வாகியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது நாற்பது தொகுதியில் தமிழ் வாக்காளர்கள் மெஜாரட்டியாக அங்கு இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. பா.ம.க-வுக்கும் இருக்கிறது. சிறு சிறு வாக்கு  வங்கியை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே ஐந்து சதவீதம்தான் வித்தியாசம் என்று சர்வே முடிவுகள் காட்டுகிறது. அதை ஈடுகட்டவே அ.தி.மு.க-வின் உதவி பா.ஜ.க-வுக்கு தேவையாக இருக்கிறது. இதைத்தான் அமித் ஷா-வின் மைக்ரோ மேனேஜ்மென்ட் மூலம் அதை கையாண்டு இருக்கிறார். இப்போதைக்கு அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்று சொல்கிறார். 2024-வரை தொடருமா…? என்பது குறித்து அண்ணாமலை கேட்கிறார். எடப்பாடிக்கும் பா.ஜ.க-வின் ஆட்டம் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர் செல்வம்

2018-ல் கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க-வும் போட்டியிட்டிருக்கிறது. அதற்கு முன் 2017-ல் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 2018-வரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தரவில்லை. அதற்குள் கர்நாடக தேர்தலும் வந்துவிட்டது. இரட்டை இலை இல்லாமல் தான் நிற்க வைத்தார்கள். மொத்தமாக சேர்த்தே பத்தாயிரம் வாக்குகள் கூட வரவில்லை. எனவே இந்த முறை இரண்டு தொகுதியோ, மூன்று தொகுதியோ வாங்கி இரட்டை இலை சின்னத்தில் நின்று ஒன்றாவது வெற்றி பெற்றோம் என்றால் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சகாப்த்தத்தை நாம் தொடரலாம் என்பது எடப்பாடியின் கணக்கு. இந்த முறை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தருவதற்கு தடையில்லை. இடைக்கால உத்தரவும் இல்லை. தேர்தல் ஆணையம் உடனே கொடுக்க வேண்டியதுதானே. ஆனால், பா.ஜ.க அதை தடுக்கிறது. அதனால் கர்நாடக தேர்தலை பயன்படுத்தி, அதை சரிகட்டிவிடலாம்  என்று நினைக்கிறார் எடப்பாடி.

கூட்டணியை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று எடப்பாடியும் சொல்கிறார். வெற்றிக்கு தேசிய தலைமையா வந்து பாடுபடும். கூட்டணியை வழிநடத்துவதெல்லாம் மாநில தலைமைதானே. மாநில தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் எடுக்கும் முடிவு எப்படி சரியாக வரும். கடைசி நேரத்தில் அவியல் கூட்டணி, தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாத கூட்டணி, மாநில தலைமைக்கு ஒத்துழைப்பில்லாமல் போவது எல்லாம் என்றைக்குமே தேறாது.  கடைசி நேர முரண்பாடுகள் கூட்டணியை கவிழ்த்துவிடும். வெறும் தலைவர்கள் கை குலுக்கி கொள்வது மட்டும் வெற்றி பெறுவதில்லை. கீழே தொண்டர்களும் கை  குலுக்க வேண்டும். கடைசி வரை எலியும், பூனையுமாக இருந்து கொண்டு எப்படி வேலை பார்ப்பார்கள். எடப்பாடி வெறும் டெல்லியை மட்டுமே கணக்கு செய்து, கொண்டு போய்விடலாம் என்று நினைக்கிறார். அது தவறான கணக்கு. அண்ணாமலை, எடப்பாடி கிட்டத்தட்ட ஒரே வாக்கு வங்கியைத்தான் பகிர்கிறார்கள். அதில் அண்ணாமலை தனி கூட்டணி போட்டு ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார். அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.