மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தடாலடியாக பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் மூதாட்டி குளியலறையில் இருந்திருக்கிறார். அப்போதும் மின் வாரிய ஊழியர்களை தடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக பொருட்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணத்தில் அந்த மூதாட்டி அவர்களை பின் தொடர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பான வீடியோதான் பரவி பலரது கண்டனங்களையும் பெறச் செய்திருக்கிறது.


இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மூதாட்டியை அவரது மகனும், மருமகளும் தனித்து விட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் தங்கியுள்ள வீட்டின் மின்சார இணைப்பு மருமகளின் பெயரில் இருந்ததால் மூதாட்டிக்கு தெரியவில்லை. ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட மூதாட்டியின் பொருட்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்துறை அதிகாரி மந்தீப் திமாஹா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே மத்திய பிரதேசத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான குடிநீர் வரியை கட்டாததால் பால் வியாபாரியின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.