பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இலங்கையை தொடர்ந்து நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்!

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வானார். அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே, அந்நாடு பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது.

image

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரும் பாகிஸ்தான்!

அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. நிதிப் பிரச்சினையை சமாளிக்க பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ளது.

பொருட்கள் தட்டுப்பாடால் உச்சம் தொடரும் விலைவாசி உயர்வு!

நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டது.

image

ஒரு கிலே அரிசி ரூ335 – வரலாறு காணாத விலை உயர்வு

இந்த நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் உணவுபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் மக்கள் இந்த மாதம் ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 1 கிலோ அரிசி ரூ.70ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் பழங்களின் விலையும் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1 டஜன் இனிப்பு ஆரஞ்சு ரூ.440க்கும், ஒரு டஜன் ஆரஞ்சு ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ மாதுளை ரூ.440க்கும் 1 கிலோ ஈரான் ஆப்பிள் ரூ.340க்கும், 1 கிலோ கொய்யா ரூ.350க்கும், 1 கிலோ ஸ்டிராபெர்ரி ரூ.280க்கும் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்து உள்ளது. 1 கிலோ கோழிக்கறி ரூ.350 ஆக உள்ளது.

image

முன்பு, 1 கிலோ ரூ.700 என இருந்த மாட்டிறைச்சி, தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் முன்பு 1 கிலோ ரூ. 1,400 என இருந்த ஆட்டிறைச்சி தற்போது ரூ.1,600 – ரூ.1,800 வரை விற்கப்படுகிறது. மேலும், வெங்காயத்தின் விலை 228.28 சதவீதமும், கோதுமை மாவின் விலை 120.66 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், தக்காளி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு சார்ந்த 51 பொருட்களில் 26 பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாகவும், 13 பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதாகவும், 12 பொருட்களின் விலை குறைந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வால் துயரத்தில் மக்கள்!

கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும், இந்த விலைவாசி உயர்வால், ஏழை மக்களால் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பாகிஸ்தானில் இலவசமாக வழங்கப்படும் கோதுமை மாவு வாங்கச் சென்றவர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.