”சச்சின் & டிராவிடை தந்திரமாகத்தான் வெளியேற்றனும்” -முன்னாள் பாக்., பவுலர் பரபரப்பு பேச்சு

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்தாக், எலியை வெளியேற்றுவதற்கும், புலியை வெளியேற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு அசாதாரண சூழ்நிலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தாலும், ஒவ்வொரு ஐசிசி போட்டிகளின் போதும் முடிவில்லாமல் தொடர்ந்து வரும் வரலாறுகள் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்வித்துதான் வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் என்றாலே இருநாடுகள் மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளும் அவர்களது ஆட்டத்தின் சுவாரசியத்தை காண ஆவலாகவே இருந்து வருகின்றனர். இரு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளன. அப்படி இரண்டு தரப்பிலான சிறந்த வீரர்களுக்கும் இடையே நிகழும் மோதலானது இரண்டு காளைகளின் கொம்புகளை சீவி களத்தில் இறக்கிவிட்டது போலதான், ஒவ்வொரு சந்திப்புகளும் எப்போதும் அனல் பறக்கும் விதமாகவே இருக்கும். இந்த இருநாட்டின் ரசிகர்களுக்கும் வெற்றி தோல்வியென்பது போட்டியை தாண்டி உணர்ச்சிகளோடு பின்னப்பட்டது என்றால் அது பொய்யாகாது.

image

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்புத் தொடரில் விளையாடி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. அப்படிப்பட்ட சூழல் இருந்து வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற வேண்டும் என்று பல முன்னாள் பாகிஸ்தான் கூறி வருகின்றனர். அப்படி வெளிப்படையாக தெரிவிக்காத சிலர், முந்தைய காலகட்டத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி, அவர்களுடைய அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் பகிறும் பல விஷயங்கள் விவாதப் பொருளாகவும், சர்ச்சையாகவும் இருப்பது வாடிக்கையானதுதான். அந்த வகையில், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான சக்லைன் முஷ்தாக், முன்னாள் இந்திய வீரர்களுக்கு எதிராக தனது பந்துவீச்சு அனுபவம் குறித்து பேசியுள்ளார். சில வீரர்கள் எந்தளவு தனக்கு கடினமாக இருந்தார்கள் என்றும், சில வீரர்கள் எப்படி தன்னுடைய பந்துவீச்சை பார்த்து பயந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

image

எலியை பிடிப்பதற்கும் புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

podcast நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் சக்லைன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டை பல சந்தர்ப்பங்களில் வெளியேற்றி இருந்தாலும், அவர்களுடைய விக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ சச்சின் மற்றும் டிராவிட் இருவரையும் நான் விக்கெட் எடுத்து வெளியேற்றி இருக்கிறேன். ஆனால் அவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு நீங்கள் நீண்டநேரம் களத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும்.

எலியை பிடிப்பதற்கும், புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா, அப்படிதான் அவர்கள் பேட்டிங் செய்யும் போது எலியை பிடிப்பது போல் எல்லாம் எளிதாக வெளியேற்றிவிட முடியாது. அவர்களை வெளியேற்றுவதற்கு நரியை போல் தந்திரம் செய்து, பொறி வைத்து சரியான நேரத்தில் வெளியேற்றுவதற்கு மணிக்கணக்கில் யோசிக்க வேண்டியிருந்தது.

image

சில நேரங்களில் நான் 20 ஓவர்களுக்கும் அதிகமாக வீசியிருக்கிறேன், அப்போதும் என்னால் அவர்களை வெளியேற்ற முடியவில்லை. அவர்களை வெளியேற்றுவது என்பது எளிதானதல்ல. உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களை சிறப்பாகப் பெறுவதற்கு, உங்கள் சிந்தனையை நீங்கள் விரிவுபடுத்த வேண்டும், பொறுமையாக காத்திருக்க வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் ” என்று சக்லைன் புகழ்ந்து கூறியுள்ளார்.

image

நான் பந்துவீச வந்தாலே அவர் முகம் பதட்டத்தில் வெளிறிப் போய்விடும்!

சச்சின், டிராவிட், அசாருதீன் மற்றும் கங்குலி போன்றவர்கள் சக்லைனுக்கு சில கடினமான நேரத்தைக் கொடுத்திருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தன்னுடைய பந்துவீச்சை கண்டாலே கலங்கி போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார், சக்லைன்.

When Ajay Jadeja's Brutal Assault On Waqar Younis Left The Crowd In Awe

அஜய் ஜடேஜா குறித்து பேசியிருக்கும் அவர், “ ஒரு காலத்தில் நான் பந்து வீச வருவதை பார்த்தாலே அஜய் ஜடேஜாவின் முகம் வெளிறிப் போய்விடும். அவர் எனக்கு எதிராக ஒரு முழுமையான ஓவரில் கூட நீடித்ததில்லை. என்னுடைய பந்துவீச்சு அவருக்கு கடினமானதாக இருந்துள்ளது என்பதை அவரும் வெளியே வந்து என்னிடம் கூறியுள்ளார். ஆனால் சச்சின், அசாருதீன், கங்குலி, டிராவிட் ஆகியோர் ஆபத்தான பேட்டர்கள். அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம்” என்று சக்லைன் பகிர்ந்திருக்கிறார்.

image

சக்லைன் முஷ்தாக் ஒருநாள் கிரிக்கெட்டில் அஜய் ஜடேஜாவை 6 முறை வெளியேற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் மட்டும், 3 போட்டிகளில் அஜய் ஜடேஜாவை தொடர்ந்து 3 முறை போல்டாக்கி சக்லைன் வெளியேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM