இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. இஸ்ரோவின் வணிகப்பிரிவான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ (என்.எஸ்.ஐ.எல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

image

ஒன்வெப் இந்தியா-1 மூலம் ஏற்கனவே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 36 செயற்கைகோள்கள்!

அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா – 1(one web india – 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

OneWeb India-1 Mission: ISRO's Heaviest Rocket Successfully Launches 36  Satellites Into Orbit. All About It

ஒன்வெப் இந்தியா-2 மூலம் கூடுதல் 36 செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது!

இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா – 2 இன்று காலை எல்.வி.எம் 3 – எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) – mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

image

இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட். அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மொத்தம் 5,805 கிலோ எடையுடன் பறக்கவிருக்கிறது!

இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6ஆவது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

image

உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது.

புவிவட்ட பாதையில் 588 செயற்கைகோள்கள் நிலைநிறுத்த திட்டம்!

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது. 588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும். இன்று விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.

image

LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.