இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம்.

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த 2008 ஐபிஎல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார்.

image

கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது சீசனில் தோனியுன் முழு ஆதரவுடன் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க போட்டிகளில் சிறப்பாகச் செயல்படாததையடுத்து தன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிற்பகுதி ஆட்டங்களுக்காக மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார், தோனி. ஆனாலும், கடந்த சீசன் சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2022 சீசனில், 10 அணிகள் கொண்ட போட்டியில் வெறும் எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை மட்டுமே சென்னை அணி பிடித்தது. தொடக்க போட்டிகளின் தோல்வியே இந்த நிலையை எட்டுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஆனால், இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. மேலும், இந்த தொடரே தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கோப்பையை வென்றுதரும் முயற்சியில் தோனி தீவிரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சீசனில், சென்னை அணி, டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தொடக்க பேட்டர்களாய் களமிறக்கும் என்று கூறப்படுகிறது.

image

மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். இவர், சென்னை அணியுடன் இணைந்திருப்பதால் அது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. தவிர, 4வது வரிசையில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. நடுவரிசையில் ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் தோனி உள்ளார்.

ஆகையால் இந்த முறை சென்னை அணி, ஓர் சிறந்த படையை வைத்திருப்பதாகவும், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பந்துவீச்சிலும் சிறந்த வீரர்களை சென்னை அணி கொண்டுள்ளது. தீபக் சாஹர் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரும் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கக்கூடியவர்கள். கடந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. ஆனால், இந்த முறை அதை ஈடுகட்டும் எனத் தெரிகிறது.

image

மேலும், தமிழக ரசிகர்களால் ’தல’ என அன்புடன் அழைக்கப்படும் தோனி, முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவர் சென்னைக்காக 4 கோப்பைகளை (2010, 2011, 2018, 2021) வென்று கொடுத்து ஐபிஎல்லின் 2வது வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 13 சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே வீறுநடை இப்போதும் சென்னை அணியிடம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை:

1. மார்ச் 31, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்

2. ஏப்ரல் 3, இரவு 7.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சென்னை

3. ஏப்ரல் 8, இரவு 7.30: மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை

4. ஏப்ரல் 12, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை

5. ஏப்ரல் 17, இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு

6. ஏப்ரல் 21, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை

7. ஏப்ரல் 23, இரவு 7.30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா

8. ஏப்ரல் 27, இரவு 7.30: ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர்

9. ஏப்ரல் 30, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், சென்னை

10. மே 4, மதியம் 3.30: லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ

11. மே 6, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், சென்னை

12. மே 10, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை

13. மே 14, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை

14. மே 10, மதியம் 3.30: டெல்லி கேப்பிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி

image

சென்னை அணி வீரர்கள்

எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அம்படி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , டிவைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன் , அஜய் மண்டல், பகத் வர்மா.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.