தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணல் மாவட்டவாரியாக நடந்துவருகிறது. இந்த நேர்காணலை, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்றுவருகிறது. தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அணியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு கனிமொழிக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்பாளர் பதவிக்கான நேர்காணலை கனிமொழி தொடங்கிவைத்ததும் அந்தவகையில்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும், நேர்காணல் தொடர்பாக வெளியிடப்படும் விளம்பரம், நோட்டீஸ் உள்ளிட்டவற்றில் கனிமொழியின் படமும் இடம்பெறுகிறது. ஆனால், “கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்டங்களுக்கு நடைபெறும் நேர்காணலில், கனிமொழியின் படம் அழைப்பிதழில் இடம்பெறவில்லை” எனக் கொதிக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். கனிமொழிக்கு பதிலாக அமைச்சர் உதயநிதியின் படம் விளம்பர நோட்டீஸில் இடம்பெற்றிருப்பது புதிய பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது.

நேர்காணலைத் தொடங்கிவைத்த கனிமொழி

இது தொடர்பாக கனிமொழியின் ஆதரவு மகளிரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “மார்ச் 22-ம் தேதி, கோவையில் நடைபெறவிருக்கும் இந்த நேர்காணலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் தலைமை வகிக்கிறார். நேர்காணலுக்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸில், கனிமொழியின் படத்தைத் திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார் அவர். மகளிரணிக்கு மேற்பார்வை பொறுப்பு கனிமொழிதான் என கட்சித் தலைமையே அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், கனிமொழியின் பெயர், படத்தை நோட்டீஸில் போடாமல், ‘அமைச்சர் உதயநிதியின் அறிவுறுத்தலில் அணிப் பதவிகளுக்கான நேர்காணல் நடைபெறும்’ என நோட்டீஸ் அச்சடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. உதயநிதியின் படத்தையும் நோட்டீஸில் போட்டிருக்கிறார். உதயநிதிக்கும் மகளிரணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது… அவர் அறிவுறுத்தல் என்ன இருக்கிறது… கனிமொழியை இவர்கள் சீண்டிப்பார்ப்பது இது முதன்முறையல்ல.

அ.தி.மு.க-வில் இருப்பதுபோல, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைகளை தி.மு.க-வின் இளைஞரணியிலும் உருவாக்க முனைந்தார் உதயநிதி. கனிமொழியின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகே, அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பொறுப்பு அளிக்கப்பட்ட பகுதிக்குள், கனிமொழி பிரசாரம் செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டதால், கனிமொழியின் பிரசாரத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அடுத்தநாளே உதயநிதியை அழைத்துவந்து கனிமொழி பேசவிருந்த அதே பகுதிக்குள் பிரசாரம் செய்யவைத்தார் செந்தில் பாலாஜி. உதயநிதியைக் குளிர்வித்துதான் அரசியல் செய்ய வேண்டுமென செந்தில் பாலாஜி முடிவெடுத்தால், அது அவரது விருப்பம். ஆனால், அதற்காக கனிமொழியை சீண்டிப்பார்க்கக் கூடாது” எனக் கொதித்தனர்.

சர்ச்சையைக் கிளப்பிய நோட்டீஸ்

இந்த நோட்டீஸ் விவகாரம் தலைமை வரை புகாராகியிருக்கும் நிலையில், கனிமொழியின் பெயர், படத்தை அச்சடித்து புதிய நோட்டீஸ் விநியோகிக்கச் சொல்லியிருக்கிறதாம் அறிவாலயம். அதேநேரத்தில், தன்னுடைய பெயர், படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தலைமையிடம் வருத்தத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறாராம் கனிமொழி. கட்சி மேலிடமும் அவரை சாந்தப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நோட்டீஸ் விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், ஆறப்போடப் பார்க்கிறது தி.மு.க மேலிடம். ஆனால், ‘பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது’ என்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். விவகாரத்தின் சூடு தணிகிறதா இல்லை இன்னும் சூடாகப்போகிறதா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.