அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் தற்போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்ளும் போக்கே கடந்த சில நாள்களாக நிலவுகிறது. நேற்று முன்தினம்கூட, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில், “2024 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தால் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என அண்ணாமலை பேசியதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இது குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசட்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கூட்டணி குறித்து பேசுவதற்கு தனக்கு அதிகாரமில்லை, நேரம் வரும்போது தங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள் என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கூட்டணி தொடர்பாக பேசுகையில், “அதற்கான நேரம் வரும்போது நான் விரிவாகப் பேசுவேன். என்னுடைய எண்ணோட்டங்கள் சில என் மனதில் இருக்கு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தூய அரசியலுக்கான நேரம் வந்துவிட்டது. பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்திப்பதுதான் அதன் அச்சாரம். இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆளுங்கட்சியாக இருந்தால் இவ்வளவு, எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் சில கருத்துகளை எங்களுடைய தலைவர்களிடத்தில் நான் பகிர்ந்திருக்கிறேன்.

அண்ணாமலை

இரண்டு வருடங்கள் பா.ஜ.க-வின் மாநில தலைவராகப் பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலில் இரண்டு ஆண்டுகளாக உற்று நோக்கிய பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன், மிகப்பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னது போல இந்தக் கட்சியுடன் கூட்டணி… அந்தக் கட்சியுடன் கூட்டணி என்று பேசுகின்ற அதிகாரம் எனக்கு இல்லை. அதற்கான நேரம் விரைவில் வரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இரண்டு வருடங்கள் அரசியலைப் பார்த்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். அதை என்னுடைய கட்சிக்குள் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன்.

கூட்டணியைப் பற்றி அதற்கான நேரம் வரும்போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள். நான் வேலையை விட்டுவிட்டு, மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன். தவறுகள் செய்வதற்கு நான் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் சில வார்த்தைகளை நான் அன்று பேசியிருந்தேன். நான் போலீஸில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் சம்பாதித்த எல்லா பணமும் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அதையெல்லாம் குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தேன். தேர்தல் முடிந்த பிறகு நான் கடனாளியாக இருக்கிறேன்.

அண்ணாமலை

இப்போது தமிழக அரசியல் களத்தில் நாடாளுமன்றத் தேர்தல் என்றால் ரூ.80 கோடியிலிருந்து ரூ.120 கோடி வரை செலவு பண்ண வேண்டும் என்பது கணக்கு. ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தால் 12 லட்சம் பேர் என்றால் 60 கோடி ரூபாய். இரண்டு வருடம் எல்லாத்தையும் பார்த்து விட்டேன். தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். நானும் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டுதான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியல் எனக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.