ரிசர்வ் வங்கி நடப்பு கவர்னர் சக்தி கந்த தாஸுக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த கவர்னர் விருது வழங்கி கவுரவித்துள்ளது, மத்திய வங்கிக் குழு சர்வதேச பொருளாதார ஆய்வு இதழ் (Governor of the Year’ for 2023 by Central Banking, an international economic research journal). இதற்குமுன் 2015-ல் ரகுராம் ராஜனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி

2018 -ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ஊர்ஜித் பட்டேல் தமது சொந்த விருப்பு காரணமாக திடீரென்று தமது பணியிலிருந்து விலகிக் கொண்டார். அப்பொழுது ஊர்ஜித் பட்டேலுக்கு மாற்றாக சக்தி கந்த தாஸ் ஆர்.பி.ஐ கவர்னர் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

சக்தி கந்த தாஸ்-ன் பதவி காலம் என்பது உண்மையிலேயே மிகவும் கடினமான கால கட்டமாக கருதப்படுகிறது. அவர் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று நமது நாட்டில் பரவத் தொடங்கியது. நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து கடன்களுக்கும் ஆறு மாதங்கள் வரை தவணை செலுத்த வேண்டியது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு கடன் வாங்கியவர்களை இக்கட்டில் இருந்து காப்பாற்றியது.

மேலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் பலமுறை கணிசமாக குறைத்து மக்களுக்கு உதவியது. இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் திரும்ப வருவதற்கு ரிசர்வ் வங்கி தன்னாலான முயற்சிகளை எடுத்ததில் சக்தி கந்த தாஸ்-ன் பங்கு அளப்பரியதாக இருந்தது.

கொரோனா நோய் தொற்று போன்ற கடுமையான காலகட்டம் எப்பொழுதும் நிலைத்திருக்காது. ஆனால் அந்த கடுமையான காலகட்டத்தை சரியாக நிர்வகிக்கும் கடுமையான மனிதர்களும், கடுமையான நிறுவனங்களும் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்று சக்தி கந்த தாஸ் கூறியது இங்கு நினைவு கூறத் தக்கது.

கொரோனா கோலம்

கொரோனா நோய் தொற்று முடிவடைந்து மக்கள் சற்று ஆசுவாசமடைந்த காலகட்டத்தில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெயின் விலை விண்ணை தொட்டது. இதன் காரணமாக நமது நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

பணவீக்க விகிதம் அதிகரிக்க தொடங்கினால் நாட்டில் பொருளாதார மந்த நிலை வந்துவிடும். இதன் காரணமாக கடன்களுக்கான குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மீண்டும் அதிகரித்து பணவீக்க விகிதங்களை குறைப்பதற்கான பெரு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. அதனை சரி செய்யும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பாக உள்ள டாலர்களை சந்தையில் விற்று ரூபாய் மதிப்பின் சரிவை தன்னால் ஆன அளவு குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

நமது அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மிகப் பெரிய பொருளாதார தேக்க நிலையை அடைந்த இந்தக் காலகட்டத்தில் நமது நாடு ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டது. நமது நிதி அளவுகளை முறையாக கையாண்டதில் சக்தி கந்த தாஸ்-ன் முயற்சி மிகப் பெரிய பங்களிப்பை செய்தது.

பொருளாதார நெருக்கடி | இலங்கை

மேலும் நமது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி  கடந்த 10 ஆண்டுகளில் 9% அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தனிநபரின் வருமானம் 1000 டாலர் என்ற அளவில் 2010 ஆம் ஆண்டு இருந்தது. இதுவும் தற்போது 2400 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

நமது நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் இன்னும் அதிக அளவு இருந்தாலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சராசரி 55% என்ற அளவில் இருந்து 16% என்ற அளவிற்கு கடந்த 15 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக யுனைடெட் நேஷன்ஸ் வெளியிட்டு இருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பேமண்ட்களில் மிகப்பெரிய சாதனைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்துள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 50 பில்லியன் டிஜிட்டல் ட்ரான்ஷாக்ஷன் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பேமெண்ட்களின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 100% க்கு அதிகமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சென்ற ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் வடிவில் ரூபாயை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு எல்லாம் சக்தி கந்த தாஸின் முயற்சி முக்கிய உந்து சக்தியாக இருந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

ஆனால் இதற்கு மாறாக கிரிப்டோகரன்சிக்கு எதிராக சக்தி கந்த தாஸ் தொடர்ந்து பேசி வருகிறார். கிரிப்டோ கரன்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பது அவரது கருத்தாக உள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தை சிறப்பாக நமது நாடு கடப்பதற்கு உதவிய சக்தி கந்த தாஸூக்கு  சிறந்த கவர்னர் விருது வழங்குவது பொருத்தமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் சக்தி கந்த தாஸ், 1980 – ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் குரூப்பை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.