‘சிஸ்டர் சிட்டி’ பேரில் அமெரிக்காவுக்கே விபூதி அடித்த நித்யானந்தா.. நடந்தது என்ன தெரியுமா?

பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.

ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இதற்கடுத்தபடியாக எங்கே இருக்கிறது என்று கூகுள் மேப்பால் கூட கண்டுபிடிக்க முடியாத, வெளியுலகுக்கு ஒரு கற்பனை நாடாக இருக்கும் கைலாசாவுக்கு அங்கீகாரம் பெறும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரத்துடன் ஒரு சிஸ்டர் சிட்டி என்ற ஒப்பந்தத்தையும் போட்டிருந்தார் நித்யானந்தா.

இந்த செய்தி உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா தரப்பிலிருந்து நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் பங்கேற்று தங்களது நாட்டுக்கும், சுயபாணி கடவுளான நித்யானந்தாவுக்கு பாதுகாப்பும் கேட்டு வலியுறுத்தினார்களாம்.


ஆனால் கற்பனையான தேசத்துக்கு இந்த அங்கீகாரத்தை கொடுக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஐ.நா கூட்டத்தின் பங்கேற்றதை வைத்து, கைலாசாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கைலாசாவின் பக்கம் கவனத்தை திருப்ப முற்பட்டனர்.

ஆனால் கைலாசா உடனான தனது சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை நியூயார்க்கின் நெவார்க் நகர நிர்வாகம் ரத்து செய்து, நித்யானந்தா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பேசியுள்ள நெவார்க் நகர தகவல்துறை செயலாளர் சூசன் கரோஃபலோ, “இப்போதுதான் நித்யானந்தாவின் கைலாசாவை பற்றி அறிந்தோம். இதனால் நியூயார்க் கவுன்சில் இதன் மீது நடவடிக்கை எடுத்து சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது” என்றிருக்கிறார்.

நெவார்க் சிட்டியுடனான ஒப்பந்தத்தை வைத்து அமெரிக்காவே தங்களை அங்கீகரித்துவிட்டதாக நித்யானந்தா தரப்பினர் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கையை நியூயார்க் கவுன்சில் எடுத்திருக்கிறது.

ஆனால் தற்போது வெளியாகியிருக்கக் கூடிய தகவல்தான் பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது எனலாம். அதாவது அமெரிகாவின் நெவார்க்கில் மட்டுமல்லாமல் வர்ஜீனியா, ஃப்ளோரிடா, ஓஹியோ, ரிக்மண்ட் என 30 நகரங்களுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் கைலாசா கையெழுத்திட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

The United States of America signs bilateral agreement with United States  of KAILASA

அதேவேளையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களிடையே சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கைலாசா கையெழுத்திட்டதை பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ்-ம் இதனை உறுதிபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வடக்கு கரோனினாவைச் சேர்ந்த நிர்வாகி பேசுகையில், “கைலாசாவுடனான கையெழுத்து ஒப்பந்தமே இல்லை. அது அவர்களது கோரிக்கைக்கான பதில் மட்டுமே. அவர்களின் பின்னணியை சரிபார்க்காததுதான் தவறு” என்றிருக்கிறாராம்.

அமெரிக்காவில் உள்ள சமூகங்களும், மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களும் பல்வேறு கலாசாரங்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த சிஸ்டர் சிட்டி ஒப்பந்த முறை. இதில்தான் நித்யானந்தாவும் அவரது சீடர்களும் புகுந்து விளையாடி அமெரிக்க நகரங்களுக்கே விபூதி அடித்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM