வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மகளிர் தினமும்,இந்து நாட்காட்டியின் படி வண்ணங்களின் கொண்டாட்டமான ஹோலிப் பண்டிகையும் இந்த ஆண்டில் ஒரே தினத்தில் வந்தது. இந்த இரு தினங்களை கொண்டாடி சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில், சில தகவல்களை இங்கே பகிர்கிறேன்..

பெண்களையும், வண்ணங்களையும்… எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது. கலர்கலராய் புடவைகள், அதற்கேற்ப ஜாக்கெட்டுகள், பொருத்தமான நைல் பாலீசுகள், தலையில் சூடும் வண்ண ரோஜா மலர்கள், கால்களில் அணியும் கலர் காலணிகள் என கலர் மேட்சிங்கில் அதீத கவனம் செலுத்தும் பெண்களின் வாழ்வில் எப்போதும் வண்ணங்களுக்கு வலுவான இடமிருக்கிறது.

Representational Image

உலக அளவில் மகளிர் தினம் வருடா வருடம் மார்ச் – 8 ல் மட்டுமே கொண்டாடப்படும். வண்ணப் பொடிகளை வீசியும்,வண்ண நீர்களை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் வட மாநிலத்தவரால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை மகளிர் தினத்தைப் போல ஒரு பொதுவான தினத்தில் பொருத்தி கொண்டாடி விட முடியாது.

ஹோலி பண்டிகை ஒரு இந்து பண்டிகை ஆகும். இந்து மக்களின் பக்தி விஷ்ணுவின் சக்தியைப் பெருக்கும் என்பது ஐதீகம்.

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு தீ மூட்டி “ஹோலிகா தகான்” என்றும் நம்மூர் பொங்கல் பண்டிகைகளுள் ஒன்றான போகிப் பண்டிகையைப் போன்று கொண்டாடுகிறார்கள்.

Representational Image

புராண காலத்தில் ஹிரண்யகசிகு எனும் அசுர மன்னனுக்கு ஹிரண்யாகக்ஷன் எனும் சகோதரனும், ஹோலிகா எனும் சகோதரியும் வாழ்ந்ததாகவும், அப்பாவி மக்கள் மீது ஹிரண்யாகக்ஷனின் அசுர அட்டகாசம் தாங்காமல் விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து அவனைக் கொன்றதாகவும்.

தன்னையே கடவுளாகக் கருதி தன்னை மட்டுமே நாட்டு மக்களை வணங்க கட்டளை பிறப்பித்த அசுர அரசன் ஹிரண்யகசிகுவின் மகன் பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தன்.தன்னை வணங்காது விஷ்ணுவை வணங்கும் தன் மகனைக் கொல்ல தன் சகோதரி ஹோலிகாவை நெருப்பில் தீப்பற்றா வரம் பெற்ற ஆடையை அணிந்து கொண்டு பிரகலாதனை தீயில் இட்டுக் கொள்ள அத்தை ஹோலிகா சிறுவன் பிரகலாதனை தூக்கிக் கொண்டு தீயில் இறங்கிய போது, தீப்பற்றா வரம் பெற்ற ஆடை பிரகலாதனைச் சுற்றிக் கொண்டு காப்பாற்றி, ஹோலிகாவை சாம்பலாக்கியதாகவும் ஹோலிகா தீயில் சாம்பலான தினத்தை இரவில் தீ மூட்டி “ஹோலிகா தகான்” என வட மாநிலத்தவரால் காலங்காலமாக கொண்டாடப்படுகிறது என்கிறது புராணக் கதை!

“ஹோலி பண்டிகை” குளிர்காலத்தின் முடிவையும்,வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் விதமாக வடமாநில வானிலையே வண்ணமயமாக வசீகரமாகிக் கிடக்கும் ஹோலி தினத்திலும்…காண்போர் மனத்திலும்!

ஹோலி பண்டிகை புராணங்களின் அடிப்படையிலானது என்றால், மகளிர் தினம் வரலாறுகளின் அடிப்படையிலானது. 18 ம் நூற்றாண்டுகளில் பெண்ணடிமைத்தனம் என்பது உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது.1850 களின் தொடக்கத்தில் பல எதிர்புகளை மீறி பெண்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கால் பதிக்கத் தொடங்கினார்கள். ஆனாலும், ஆண்களுக்கு நிகராக பணியாற்றினாலும் பாலினப் பாகுபாடுகளால் பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஊதிய முரண்பாடுகள் நிறைய இருந்தன.

Representational Image

1908 – மார்ச் 8 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்களின் நேரத்தைக் குறைத்தல், கூலியை உயர்த்துதல்,வாக்களிக்கும் உரிமை கோருதல் உள்ளிட் கோரிக்கைகளை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேலான பெண்கள் பேரணியாக நடத்தி உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பினர்.இந்த மார்ச் – 8 நாளை 1909 ல் தேசிய மகளிர் தினமாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி அறிவித்தது.ஆனாலும் இது உலக அளவில் நடைமுறைக்கு வரவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை 1975 ல்தான் மார்ச் 8 ம் தேதியை மகளிர் தினமாக அறிவித்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்றைக்கு உலகில் உள்ள ஒவ்வொரு குக்கிராமங்களிலும் இந்த மார்ச் – 8 ந் தேதியை மகளிர் தினமாக மகளிர் தங்களுக்கான தினமாகக் கருதி சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான ஐ.நா வின் தீம் “DIGITAL” அதாவது பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில் நுட்பம்.இது போல ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்திற்கான கருப்பொருளை ஐ.நா சபை உருவாக்கி வருகிறது.

Representational Image

இந்திய தேசத்தில் அவரவர் பின்பற்றும் பஞ்சாங்க நாட்காட்டியின் படி பல்வேறு தினங்களில் கொண்டாடினாலும் இரண்டு பண்டிகைகளுமே என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கான பண்டிகைகள்தான்…வண்ணங்களை விரும்பும் பெண்கள்தான் வண்ணக் கோலங்களை வாசலில் இடுகிறார்கள். வண்ண உடைகளை நேர்த்தியாக உடலில் உடுத்துகிறார்கள். வண்ணங்களை மனதில் நிறுத்தி மகத்தானதாகக் கொண்டாடுகிறார்கள்.

உலகில் ஹோலியைக் கொண்டாட இயற்கை படைத்த முதல் பறவைகள் பஞ்சவர்ணக் கிளிகள்தான் என்று சொல்வேன்.

——

“நீ

கிளிதான்!..

ஹோலியில்

பஞ்சவர்ணக்

கிளியாகி

விடுகிறாய்!*

—–

வருடத்தின்

365 நாட்களில்

ஒரு நாளைத்தான்

உலகம்

மகளிர் தினமாக

கொண்டாடுகிறது!

நானோ

365 நாட்களையும்

உனக்கான

தினமாகத்தான்

கொண்டாடிக்

கொண்டிருக்கிறேன்!

——-

Representational Image

வாழைத்

தோப்புக்குள்

நுழைந்தாய்.

” தார்” போட்ட

வாழை மரங்கள்

நீ வர தோதாக

“ரோடே” போடத்

தொடங்கி விட்டன!

என நான் முன்பு எழுதிய கவிதைகள் இன்றைக்கு நினைவுக்குள் வந்து போகிறது.

ஒரு பக்கம் புராணங்களின் அடிப்படையிலான ஹோலிப் பண்டிகை. மறுபுறம் வரலாற்றின் நீள் தொடர்ச்சியாக நடைபெற்ற விளைவுகளால் நிகழ்ந்த மகளிர் தினம். இந்த இரண்டும் இந்த ஆண்டு அரிதாக ஒரே தினத்தில் வந்தது சிறப்புதான்.

– க.தங்கபாபு

முத்துப்பேட்டை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.