கர்நாடகா மாநிலத்தில், 1.5 மாதத்தில் தேர்தல் நடக்கவிருப்பதால், பிரசாரம், ‘ரோடு ஷோ’ என தேர்தல் களம் சூடாகியிருக்கிறது. இதுவரை, இரண்டு மாதங்களில் 5 முறை கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி, 6–வது முறையாக இன்று, காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் மாண்டியா, ஹப்ளி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் வந்து, ‘ரோடு ஷோ’ சென்றார்.

‘ரோடு ஷோ’வில் பிரதமர் நரேந்திர மோடி

மாண்டியா, ஹப்ளி மாவட்டங்களில், ரூ.16 ஆயிரம் கோடிக்கான வளர்ச்சிப் பணிகள், ரூ.8,480 கோடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு – மைசூர் அதிவிரைவுச்சாலையை தொடங்கி வைத்தார்.

‘காங்கிரஸுக்கு ஏழைகள் குறித்து அக்கறையில்லை!’

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘கர்நாடகத்தில் பெங்களூரும், மைசூரும் முக்கியமான நகரங்கள். ஒன்று ‘ஐ.டி ஹப்’ ஆகவும், மற்றொன்று பண்பாடு, பாரம்பர்யத்திலும் வலுவாக இருக்கின்றன. இந்த இரண்டு நகரங்களையும் இணைப்பது மிக முக்கியமானது. அதனால்தான், பெங்களூர் – மைசூர் அதிவிரைவுச்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதால் மக்களுக்கு செளவுகரியம் மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, வீடு, வருமானத்துக்கான வாய்ப்பு உருவாகிறது.

பெங்களூர் – மைசூர் அதிவிரைவுச்சாலை.

2014-க்கு முன்பு காங்கிரஸ் அரசு ஏழை, எளிய மக்கள் குறித்து அக்கறைப்படவே இல்லை. ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியை காங்கிரஸ் அரசாங்கம் கொள்ளையடித்துவிட்டது. பா.ஜ.க-வுக்கு ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பு வழங்கியதிலிருந்து இதுவரை, ஏழை மக்களுக்காக நேர்மையாக உழைக்கிறோம். மக்களின் கஷ்டங்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால், 2014 முதல் நேர்மையான வளர்ச்சி மூலம், பா.ஜ.க அரசு ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

‘ரோடு ஷோ’வில் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸ் அரசின்கீழ் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும், சேவைகளைப் பெறவும், அரசு அலுவலகங்களைத் தேடி பயணித்தனர். ஆனால், இன்று நாங்கள் மக்களின் வீட்டுக்கே சென்று சேவைகளை வழங்குகிறோம்.

2014-க்கு முன்பு இந்தியாவில், அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசுதான் இருந்தது. இதுவரை பல கோடி ரூபாயை காங்கிரஸ் கொள்ளையடித்ததை தவிர, வேறெதுவும் செய்யவில்லை, எந்த வளர்ச்சியையும் கொடுக்கவில்லை.

கல்லறை கட்ட காங்கிரஸ் மும்முரம்…

பா.ஜ.க-வுக்கும், மோடிக்கும் புதைகுழி வெட்ட காங்கிரஸார் மும்முரமாக உள்ள நிலையில், நான் பெங்களூரு – மைசூர் போன்ற ரோடுகள் அமைப்பதில் மும்முரமாக இருக்கிறேன். மோடிக்கு கல்லறை கட்ட காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது. ஆனால், மோடி இந்திய நாட்டை வளர்ச்சி பெறச்செயவதில் மும்முரமாக இருக்கிறார்; இந்நாட்டு மக்களின் வாழ்த்துகள்தான் எனது கேடயமாக உள்ளது.

நரேந்திர மோடி.

‘டபுள் இன்ஜின்’ அரசால், கர்நாடகம் வளர்ச்சியை நோக்கி மட்டுமே பயணிக்கிறது. கர்நாகத்தின் அதிவேக வளர்ச்சிக்கு, மீண்டும் ‘டபுள் இன்ஜின்’ அரசை நிறுவுவது கட்டயாம்’’ என, காங்கிரஸை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

தேர்தலுக்காக மீண்டும், மோடி அலை உருவாக்க திட்டமிட்டிருக்கும் பா.ஜ.கவினர், 6–வது முறையாக மோடி வந்ததால் குஷியில் இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்தின் முக்கிய மாவட்டங்கள் அனைத்தையும் கவர் செய்துவிடுவார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.