ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. பின்னர், அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 19-ம் தேதி சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுக்களால், உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததால், மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்தன. 27 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்ததுடன், டிசம்பர் 2-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடக் கேட்டுக்கொண்டார்.

சட்டமன்றம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வுசெய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருந்தது. அந்த குழு கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே சட்டமுன்வரைவை தமிழக அரசு இயற்றியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடந்த மசோதாக்களுடன் இதுவும் சேர்ந்துகொண்டது. ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதாக தகவல் கசிய, எதிர்ப்புகள் வலுத்தன. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால்தான் ஆளுநர் ரவி, மசோதாவிற்கு கையெழுத்திட மறுக்கிறாரா என தனது பிறந்தநாள் விழாவில், தேசியத் தலைவர்களை வைத்துக்கொண்டே கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வரைவு மீது சில கேள்விகளை அனுப்பியுள்ள ஆளுநர், கடந்த 8-ம் தேதி மசோதாவை அரசுக்கே திருப்பியனுப்பினார்.

“ஆன்லைன் சைபர் என்பது மத்திய அரசின் வரம்புக்குள் வரும் விஷயம். எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்குமுறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசாங்கமும் சட்டம் இயற்ற முடியாது. ஒரு மாநில அரசாங்கத்தால் திறமையான விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும் மற்றும் முற்றிலும் தடை செய்ய முடியாது. இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும் மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.” என்று திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியானது.

ஆன்லைன் சூதாட்டம் திறமை சார்ந்தது என ஆளுநர் கூறியிருப்பதற்கு கடும் விமர்சனங்களை எழுந்துள்ளன. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் மசோதாவை திருப்பியனுப்பினால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200-ன் படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், எனவே மசோதாவை திருப்பி அனுப்பலாம் என திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை கூறியுள்ளன. அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழக அமைச்சரவையும் முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில், ஒரே காரணத்தை திருப்பி வேறு வேறு விதமாக ஆளுநர் கூறுகிறார். இதுபோன்ற விவகாரத்தில் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில பட்டியலில் அதற்கான உரிமை உள்ளது. அந்த அதிகாரத்தின்படி இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்புவோம். ஏற்கெனவே இது பற்றி நீதிமன்றங்கள் தெளிவாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளன”எனக் கூறியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

“ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மீளா கடனுக்கு ஆளாகிறார்கள். அதனால் வேறு வழியைத் தேட முடியாமல் சிலர் தற்கொலைக்கு முயல்கிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்” என்ற கோணத்தில் எழுந்த பிரச்சனை தற்போது மாநில உரிமை சார்ந்த விவகாரமாக மாறியிருக்கிறது. கையெழுத்திடப் போவதில்லை என்பதில் ஆளுநரும், எழுவர் விவகாரத்தில் கூட ஆளுநர் கையெழுத்திடவில்லைதான், அதற்காக அப்படியே விட்டுவிட்டோமா என திமுக அரசும் விடாப்பிடியாக நிற்பதால் இவ்விவகாரம் மீண்டும் சூடிபிடித்துள்ளது.

ஒருவேளை மீண்டும் ஆளுநர் மசோதாவை கிடப்பில் போட்டால், அரசு என்ன செய்யும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த அவர், “ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டிய ஆளுநர் அதைச்செய்யாமல், மக்கள் உயிரை உறிஞ்சிக் குடிக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் முதலாளிகளை சந்திக்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஸ்பான்சராக எம்.பி.எல். சூதாட்ட நிறுவனம் இருக்கிறது. பி.சி.சி.ஐ. செயலாளராக ஜெய் ஷா பொறுப்பேற்ற பின்னர்தான் இது நடந்திருக்கிறது. அதனால்தான் அண்ணாமலை ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுகிறார். சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து அண்ணாமலை லஞ்சம் பெறுகிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழன் பிரசன்னா

இந்த சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று எந்த சட்ட அறிஞர் ஆளுநருக்கு சொன்னது? அரசியலமைப்புச் சட்டம் 7 (34)-ன் படி சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அங்கீகரிக்க வேண்டியது மட்டும்தான் ஆளுநரின் கடமை. இவர் தொடர்ந்து இப்படி நடந்துகொள்வதால்தான் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து 7 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். எனவே மசோதா மீண்டும் அனுப்பப்பட்டு ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.

ஆனால் பாஜக மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறார் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் பாஜக தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டார் என்று சொல்வதே தவறு. சட்ட ரீதியான விளக்கங்களை ஆளுநர் கேட்டிருக்கிறார். அது என்ன விளக்கம், அரசு என்ன பதில் சொல்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆளுநர் கையெழுத்திடாததை மட்டும் கேள்வி கேட்கும் திமுகவினர், அவசரச் சட்டம் இயற்றியபோது தடையை ஏன் அமல்படுத்தவில்லை? ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் பாஜக நிதி வாங்குவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மலிவான அரசியலாகவே பார்க்கிறேன்” என்றார்.

நாராயணன் திருப்பதி

இந்த இறுதிச் சுற்றில் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியா? அவருக்கு அதற்கு அதிகாரம் இருக்கிறதா?”

“ஆன்லைன் ரம்மி திறமையின் அடிப்படையில் அமைந்த விளையாட்டல்ல. அது திட்டமிடப்பட்ட சூதாட்டம் என்றும், அதைத் தடை செய்வதைத் தவிர அந்த ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் கொண்டுவரமுடியாது என்றும் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். எங்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடைசெய்து அவசர சட்டம் பிறப்பித்தார்கள். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். அதே சட்டப் பிரிவுகளுடன் தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்டவரைவுக்கு ஆளுநர் ஏன் இசைவு அளிக்கவில்லை என்று தெரியவில்லை.

அது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கு அவர் நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டதும் இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் ரம்மி கம்பெனிகளின் பிரதிநிதிகளை சந்தித்ததும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. சட்டப் பிரச்னையில் அவருக்குக் குழப்பம் இருந்தால் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலையும் சட்டத்துறை செயலாளரையும் நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் மறுபடியும் சட்டமன்றம் இந்த மசோதாவை பரிசீலிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியிருப்பது ஆளுநர் பதவியின் அதிகார வரையறையை மீறுவதாகும்.”

“ஆளுநர் கேட்கும் விளக்கங்களை கொடுத்துவிட்டால் பிரச்னை முடிந்துவிடுமே?”

“ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான விடைகள் என் தலைமையில் அமைந்த கமிட்டியின் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சட்டம் நிறைவேற்றியதனால் அதை ஆன்லைன் ரம்மி கம்பெனிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏற்கனவே சூதாட்ட சட்டத்திற்குள் ரம்மி விளையாட்டை தடை செய்ய முடியாது என்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். அவ்வழக்குகளின் மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதேபோல் அவசர சட்டத்தை எதிர்த்து அவர்கள் போட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய சட்டத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் அவர்கள் பெற வேண்டிய முடிவுகளை ஆளுநரே அளிப்பது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத அதிகாரம்.”

சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி

“மீண்டும் மசோதாவை நிறைவேற்றி தமிழக அரசு அனுப்புவதாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டுமா? ஒப்புதல் அளிக்காவிட்டால் என்ன நடக்கும்?”

“அரசமைப்பு சட்டம் 200வது பிரிவின்படி ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால் அந்த சட்டவரைவிற்கு ஆளுநர் கட்டாயம் இசைவு தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தை மீறும் ஆளுநர்கள் மீது உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து பரிகாரம் காணலாம். ஏற்கனவே தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசும் நீட் மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசின் மீது பிரிவு 131-ன் கீழ் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.”

சந்துரு

“இந்த விவகாரத்தில் இறுதி வெற்றி யாருக்கு வெற்றி கிடைக்கும்? ஆளுநருக்கா அல்லது அரசுக்கா?”

“இது வெற்றி தோல்வி சம்பந்தப்பட்ட பிரச்னையல்ல. அரசமைப்புச் சட்டப்படி அனைத்து அதிகார அமைப்புகளும் செயல்பட வேண்டும். மீறினால் நீதிமன்றங்களை நாடி தீர்வு காணலாம். இறுதி வெற்றி எப்பொழுதுமே மக்களுக்கானது.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.