தமிழகம் முழுக்க எத்தனையோ தொழில் பேட்டைகள் உள்ளன. அவற்றில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பீங்கான் தொழில் பேட்டை மிகவும் வித்தியாசமானது.

பீங்கான் பொருள்கள்

இந்த பீங்கான் தொழில்பேட்டை சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழில் மூலம் வீடுகளில் பீங்கான் பொருள்களை செய்து வருகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட செராமிக் நிறுவனங்கள் நடைமுறையில் உள்ளன. சிறு அகல் விளக்கு தொடங்கி துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குத் தேவையான வட்டுகள் வரை பல மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில் அரசுபீங்கான் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றும் 1962-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத ஒரே அரசு செராமிக் தொழில் நுட்பக் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது. ஒரு மாலைப் பொழுதில் பீங்கான் தொழில்பேட்டைக்கு ஒரு விசிட் அடித்தோம். இங்குள்ள பல்வேறு செராமிக் நிறுவனங்களுக்கு மத்தியில் அபிராமி செராமிக்ஸ் உரிமையாளர் வைத்தியநாதனுடன் பேசினோம்.

“நாங்க முழுக்கவே அகல் விளக்குதான் பண்றோம். நான் கம்பெனி ஆரம்பிச்சி 25 வருஷம் ஆச்சு. என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை தர்றோம். ஹார்ட் வடிவம், மேங்கோ லீப், பிளவர், சங்கு, லோட்டஸ், டீ கப், ஸ்டார் வடிவத்துல ஒரு 5 வகை, சாதாரண சைஸ்ல 7 வகைன்னு மொத்தம் 50 வெரைட்டில களிமண் வச்சு விளக்கு செய்றோம்.

பீங்கான் தொழில்பேட்டை

எங்ககிட்ட அதிகபட்சம் 15 ரூபாய் வரைக்கும் அகல் விளக்கு கிடைக்கும். நாங்க தயாரிக்கிற பொருள்கள் தமிழ்நாட்டுல இருக்கும் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகுது. மலேசியாவுக்குக்கூட ஏற்றுமதி ஆகுது.

மூலப்பொருளுக்குக் களி மண்ணை ஆத்துல, குளத்துல தூர்வாரும்போது நாங்க எடுத்துப்போம். 2,500 ரூபாய்க்கு நாங்க மண்ணு வாங்குறோம். அந்த மண்ணை எடுத்துட்டு வந்து தொழில் பேட்டையில ஒரு மூணு ஒர்க் ஷாப் இருக்கு. அந்த வொர்க் ஷாப்ல கொடுத்து அரைச்சுப்போம். அதுக்கு 1500 ரூபா ஆகும். பக்குவம் உள்ள மணல அச்சுல போட்டு, வெயில்ல காய வைக்கும்போது அகல் ரெடியாகிவிடும்.

அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரி

அகல் விளக்கைத் தயார் செய்ய வெயில் காலமே ஏத்தது. ஆனா, மழைக்காலத்தில் விலை அதிகமாவும் வெயில் காலத்துல குறைவாவும் இருக்கும். களிமண்ணுல இருந்து அகல் விளக்கு ரெடி ஆகுறதுக்கு அதிகபட்சம் ஒரு நாள் போதும். ஒரு நாளைக்கு 10,000 விளக்குகள் குறைந்தபட்சம் உற்பத்தி பண்றோம். சீசன் டைம்ல நல்ல லாபம் கிடைக்கும். தீபாவளி, நவராத்திரி பண்டிகைக் காலங்கள்ல அதிகமா விற்பனை ஆகும். மணல் வாங்குறது, அரைக்கிறது, கூலி எல்லாம் போக போதுமான அளவுக்கு வரு மானம் கிடைக்கும்.

அகல் விளக்கைத் தயார் செய்யும் பணியில்..

இந்தத் தொழிலையும் தொழில் பேட்டையையும் நம்பி நேரடியா 5000 குடும்பங்களும், மறைமுகமா 3,000 குடும்பங்களும் பிழைக்குது. எங்க தயாரிப்புகளை அதிகளவுல வாங்கணும்னு நினைச்சா, எங்களைத் தேடி தாராளமா வரலாம்’’ என்று பேசி முடித்தார்.

அடுத்ததாக, பாரதி செராமிக்சின் உரிமையாளர் பாரதியுடன் பேசினோம். “நான் இந்தத் தொழிலுக்கு வந்து 30 வருஷம் ஆயிடுச்சு. படிச்சது எம்.எஸ்.இ பிஎட். நம்ம கிட்ட ஒரு 30 பேர் வேலை செய்றாங்க. அப்பா காலத்திலிருந்தே இது பண்ணிட்டு இருக்கோம்.

எங்ககிட்ட விநாயகர், பெருமாள், லட்சுமி, பூவராகவர், காமாட்சி, மாரியம்மன், மீனாட்சி, சிவன், ரங்கநாதர், வண்டி குபேரன், சாய்பாபா, லட்சுமி நரசிம்மர், கல்யாண செட், தசாவதாரம் மற்றும் விலங்குகள் என்கிற மாதிரி 100 வகையான பொம்மைகள், அப்புறம் 50 வகையான அகல் வெரைட்டி, இன்சுலேட்டர்னு சொல்ற தந்திக் கம்பங்கள் இருக்கும்.

அது மாதிரியான பொருள்கள் எல்லாம் உற்பத்தி பண்றோம். நாங்க செய்ற பொருள்கள் மற்றும் பொம்மைகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளான்னு போகுது. குறைந்தபட்சம் 25 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 1,500 ரூபாய் வரைக்கும் பொம்மைகள் இருக்கு.

மூலப்பொருள்களை உள்ளூர்ல இருந்தும், ஆந்திராவுல இருந்தும் வாங்குறோம். பொருள்கள் தயாரிப்புல முதன்மையான மூலப்பொருள், களிமண். இதுல சிகப்பு களிமண், வெள்ளைக் களிமண்ணு ரெண்டு வகை இருக்கு. சிகப்புக் களிமண் உள்ளூர்ல ஆத்து மணல், குளத்து மணல் தூர் வாரும்போது கிடைக்கும். அதை வச்சு அகல் விளக்குகளை செய்யலாம்.

பொம்மைகள் வெள்ளைக் களிமண்ணுல தயாராகுது. மூலப் பொருளில் இருந்து தயாரித்தலில் முதல் நிலை, சிலிப் பிரிப்பரேஷன். மோல்டுல கேஸ்டிங் பண்ணுவாங்க. கேஸ்டிங் அப்படின்னு சொல்றது அச்சுல கூழ்மத்த நிரப்புதல். அச்சுல இருந்து வெளியே எடுத்து வெயில்ல காய வைக்கணும். அடுத்து, ஃபினிஷிங். அடுத்ததாக, கலரிங். இறுதியில் ஃபயரிங். 1200 டிகிரி செல்சியஸ்ல ஃபையரிங் பண்ணி எடுத்தா பொம்மை ரெடி.!

முன்னாடி எல்லாம் நெய்வேலி மெயின்ஸ்ல இருந்து ஒயிட் கிலே கிடக்கும். இப்ப கிடைக்குறது இல்ல. அதனால ஆந்திரால இருந்து வாங்குறோம். இந்த களிமண் கூட பெல்ட்ஸ்பார் மற்றும் குவார்ட்சுன்ற மூலப்பொருள சேர்ப்போம். தட்பவெப்ப நிலையை தாங்குவதற்காக இதை சேர்க்குறோம். ஒரு டன் வெள்ளைக் களிமண் ரூ.7,000.

வெள்ளைக் களிமண்ணுல தயாராகும் பொம்மைகள்

பண்டிகை காலம்னு இல்லாம வருடம் முழுவதும் செய்ற தொழில் தான். நவம்பர், டிசம்பர்ல உற்பத்தி கம்மியா இருக்கும். வெயில் காலங்களில் அதிகமா உற்பத்தி விறுவிறுப்பாக நடக்கும். அப்ப மாசத்துக்கு 2 – 3 டன் வரைக்கும் வெள்ளைக் களிமண் தேவைப்படும். கிலோ கணக்குலதான் பொருளைத் தயாரிக்கிறோம். ஒரு நாளைக்கு 200- 300 கிலோ பொம்மைங்க தயாராகும். குறைந்தபட்சம் 10 நாளிலிருந்து அதிகபட்சம் ஒரு மாசத்துக்குள்ள கொடுக்கிற ஆர்டருக்கு பொம்மைகள ரெடி பண்ணி கொடுக்குறோம்.

என்னோட இலக்கு இன்னும் ஒரு 30 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கணும். புரடக்‌ஷன் அதிகப்படுத்தணும்”, எனப் பூரிப்போடு முடித்தார். இது மட்டும் இல்லாம ஒரு 500 குடும்பங்கள் தங்களது வீடுகள்லயே குடிசை தொழிலும் பண்ணிட்டு இருக்காங்க.

அகல் விளக்கைத் தயார் செய்யும் பணியில்

வீடுகளில் குடிசைத் தொழில் மூலம் செய்யப்பட்ட பொருள்கள் எல்லாம் தொழிற்பேட்டையில் உள்ள ரெண்டு, மூணு குடோன்கள் மூலம் வாங்கப்பட்டு, அங்கேயே விற்பனையும் ஆகுது.

பீங்கான்ல செய்யப்படுற அனைத்துப் பொருள்களும் தொழிற்பேட்டையில் உள்ள குடோன்களில் கிடைக்குது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தமா கொள்முதல் எடை கணக்குல குறு மற்றும் சிறு வியாபாரிகள் கொள்முதல் பண்ணிக்கிறாங்க” என்று முடித்தார்.

வித்தியாசமான இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் பீங்கான் பொருள்களைப் பயன்படுத்தி, இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாமே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.