விழுப்புரத்தில் நேற்றைய தினம் பா.ஜ.க-வின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ” ‘நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் வந்துவிட்டேன்’ என்று சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத நீங்கள்… எப்போது தேசிய அரசியலுக்கு வந்தீர்கள். மம்தாவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்று ஒரு முறை பேசிவிட்டால் தேசிய அரசியலா…. தமிழகத்திலிருந்து யாராவது தேசிய அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அது பகல் கனவு.

விழுப்புரத்தில் அண்ணாமலை

விலை போகாத நான்கு கத்திரிக்காயைக் கொண்டுவந்து மைதானத்தில் ஏற்றி, முதலமைச்சரை மார்க்கெட் செய்கிறார்கள். அந்த கத்திரிக்காயே விலை போகவில்லை. அதோடு சேர்த்து புடலங்காய் எப்படி விலை போகும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கிவைத்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அண்ணாமலையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “கத்திரிக்காயையும், வெண்டக்காயையும் ஒப்பிட்டுச் சொல்லும்போதே, அவரின் அரைவேக்காட்டுத்தனம் என்னவென்று தெரிகிறது.

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மஸ்தான்

ஒரு தேசியக் கட்சியில், தான் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிற அருமைச் சகோதரர் அண்ணாமலை அவர்கள்… ‘கும்மிடிப்பூண்டியைத் தாண்டி’ என்று தடம்புரண்டு சொல்கிறார். இந்திய திருநாட்டில், கோபாலபுரத்தில் அமர்ந்துகொண்டு, இந்திய அரசியலை வழி நடத்தியவர் கலைஞர் என்பது அண்ணாமலை போன்ற சிறுபிள்ளைகளுக்குத் தெரியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் உள்ளடக்கிய 40 இடங்களில், 39 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க கூட்டணி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார் தளபதி. மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைக் கண்டவர். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இடைத்தேர்தலில் தான் பேசும்போதுகூட, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு, `தந்தை பெரியார் மண்ணிலிருந்து நான் உரிமை கேட்கிறேன்’ என்று சொன்னார்.

`ஓர் ஆட்சியை எடைபோட்டுப் பார்க்கும் தேர்தலாகவே இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பார்க்கிறேன்’ என்று வெளிப்படையாகப் பேசியவர் தளபதி ஸ்டாலின். ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள், தி.மு.க கூட்டணிக்குக் கொடுத்த மாபெரும் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஜீரணிக்க முடியாமல் இருக்கின்ற சிறுபிள்ளை அண்ணாமலையின் பேச்சை… அரைவேக்காடு பேச்சாகவே கருதுகிறேன். எனவேதான், சொத்தைக் கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றையெல்லாம் அவர் உதாரணம் காட்டுகிறார். அதையே நாங்கள் அவருக்கு உதாரணமாகச் சொல்வதற்குகூட விரும்பவில்லை.

மஸ்தான்

தளபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் பெரும் வெற்றிபெற்று வருகின்றன. தேசிய அரசியல் பற்றி தளபதி ஸ்டாலின் கூறியிருப்பது, எதிர்காலத்திலும் வெற்றிபெறும் என்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கை. சிலிண்டர் விலை உயர்வுக்கு அண்ணாமலை ஃபீல் செய்கிற மாதிரியே தெரியவில்லையே. இந்த விலை உயர்வுக்கு உரிய காரணம் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்கிறார் என்றால்… அதுதான் அண்ணாமலையிடம் உள்ள ஸ்பெஷல். ‘பொய்யை பயங்கரமாகச் சொல்வது… பயங்கரமாகப் பொய் சொல்வது..!’ இதுதான் அவரிடம் இருக்கிற தனித்தன்மை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.