திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் பாலு இல்ல திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில், பாலு குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பேனா சிலையை நினைவுப் பரிசாகக் கொடுத்தனர்.

ஸ்டாலின்

தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் பேசிய ஸ்டாலின், “கடந்த இரண்டு நாள்களாக நம்ம திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ, மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு ஏன் வெளிநாடுகளுக்கு கூட செல்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஆனால் அதில் ஏற்படாத மகிழ்ச்சி, பூரிப்பு, புலங்காகிதம் எனக்கு திருவாரூரில் கிடைத்திருக்கிறது. நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். மக்கள் தந்த ஆர்வத்தால், வரவேற்பில் பேச முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.

சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்டவர்கள் இங்கு பேசும்போது, இது சிறப்பான திராவிட மாடல், மக்கள் போற்றுகின்ற, இந்தியாவே வியந்து பார்க்கின்ற, மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய அளவிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். தமிழ் நாட்டில் இரண்டாண்டு காலமாக நடைபெறக்கூடிய ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். அனைத்து திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம் என்ற ஒரு தவறான கருத்தை நான் பதிவுசெய்ய விரும்பவில்லை. ஆனால், மிச்சம் இருக்கக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

ஸ்டாலின்

உங்கள் அன்பை பெற்ற முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். விவசாயிகள் இந்த ஆட்சியில் பலன் பெற்று வருகிறார்கள். 20 ஆண்டு காலம் இல்லாத புரட்சி, நெஞ்சை உயர்த்திச் சொல்லக் கூடிய வகையில் விவசாயிகள் பெற்றிருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிவிப்போம் என்றோம், சொன்னது போலவே செய்தோம். அதேபோல இந்த ஆண்டும் விவசாயத்துக்கு என தனிப்பட்ஜெட் வெளியிடப்படும். தி.மு.க ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த ஐந்து முறையும் விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பையும் அழைத்து கருத்துகளை கேட்டே நிதிநிலை அறிக்கையை வெளியிடுவார். அதே முறையைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியில் நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடப்படுகிறது.

விவசாயத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயிகளை அழைத்துப் பேசிய பிறகே விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் வெளியிட்டோம். அதேபோல இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். ஆங்கில பத்திரிகை ஒன்றில் முதலிடத்தில் ஸ்டாலின் இருப்பதாக வெளியிட்டனர். இந்தியாவிலேயே முதல், முதலமைச்சர் என்ற மதிப்பை பெறுவதை விட தமிழ்நாடுதான் முதல் இடம் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலையைக் கொண்டு வந்திருக்கிறோம். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை, சலுகைகளை தி.மு.க ஆட்சி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின்

106 நவீன நெல் சேமிப்பு கிடங்குகளைத் தொடங்கியிருக்கிறோம். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன சில திட்டங்கள் நிதி பிரச்னை காரணமாக, சட்ட ரீதியாக, அதிகாரிகள் மெத்தனத்தால் முடிவடைய முடியாத சூழ்நிலை இருக்கிறது. திடீரென பெய்த மழையில் விவசாயிகள் பாதிப்படைந்தனர். ஈரோடு தேர்தல் பணியில் சில அமைச்சர்கள் ஈடுபட்டிருந்தாலும் அமைச்சர்களை அனுப்பி இழப்பீடு குறித்து ஆய்வு செய்ய வைத்தேன். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினோம். இன்னும் ஒரு வாரத்தில் பாதிப்படைந்த விவசாயிகள் வங்கிக் கணக்கில் இழப்பீடு பணம் வரவு வைக்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். எதை நிறைவேற்றவில்லை… நிதி பற்றாக்குறையால் சில திட்டங்கள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கவலைப்பட்டு நீங்கள் முறையாக கஜானாவில் நிதியைச் சேர்த்து வைத்திருந்தால் நாங்கள் திட்டங்களை நிறைவேற்றியிருப்போம்.

எடப்பாடி பழனிசாமி

கஜானாவை காலியாக்கி, பெரிய கடனாளியாக்கி விட்டுச் சென்றீர்கள். அதைச் சமாளிக்கவே சிரமப்பட்டேன். அதைச் சமாளித்து இன்றைக்கு நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறேன். 85 சதவிகிதப் பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன். மிச்சமுள்ள 15 சதவிகித பணிகளை விரைவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற அந்த நம்பிக்கையோடு இருங்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.