டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் திடீர் சோதனை நடத்தினர். சரியாக நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தச் சோதனை, மாலை 4 மணி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின்போது, ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வெளியாட்களிடம் பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இது வருமான வரி சோதனை என பலரும் கூறினர். “இது சோதனை அல்ல, வெறும் ஆய்வு மட்டுமே. நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது” என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், `இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பிபிசி

2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் நடைபெற மோடி முக்கியக் காரணமாக இருந்ததாக, பிபிசி நிறுவனம் இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதை தொடக்கம் முதலே எதிர்த்த பா.ஜ.க, அதன் மேல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அதையடுத்து, பிபிசி நிறுவனம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்து கொள்வதாகக் கூறி, மத்திய அரசு ஆவணப்படத்துக்கு தடைவிதித்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், மாணவ அமைப்புகள் மத்திய அரசு தடைசெய்த ஆவணப்படத்தை, பொது இடங்களில் மக்கள் பார்க்க திரையிட்டனர். சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

குஜராத் படுகொலை

இந்த நிலையில், பிபிசி-யின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது ஊடகச் சுதந்திரத்தைப் பறித்து, பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு, “சுதந்திரமான பத்திரிகை ஒரு ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அது கடிதத்திலும் எழுத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும்” என மோடியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

பிபிசி-வருமான வரி சோதனை

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி வேணுகோபால், “மோடி அரசு விமர்சனத்தைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது” எனக் கூறினார்.

இந்தச் சோதனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயாலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில், “குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு, ஊழியர்களுக்கு மிரட்டல். ஐ.டி துறை, அடியாள் துறையானதா… உள்நாட்டு ஊடகங்களின்மீதான அடக்குமுறை தர்பாரில் சர்வதேச ஊடகமும் தப்பவில்லை” எனப் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். “எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. ஆனால், பா.ஜ.க தலைமையிலான அரசால் அதன் சுதந்திரம் முற்றிலுமாக இழந்துவிட்டது. அமலாக்கத்துறை சி.பி.ஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளைத் தாக்க பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் இதற்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

ஸ்டாலின்

இது குறித்து நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், “இந்தியாவிலுள்ள நடுநிலையான ஊடகங்கள் அனைத்தும் மத்திய அரசின் சோதனையைக் கடந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, பத்திரிகையாளர்களான கௌரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் தங்கள் அரசியல் கருத்தை வெளியிட்டதற்காகவே கொல்லப்பட்டனர். ஹத்ராஸ் கொடூர கொலை வழக்கு பற்றி விசாரிக்கச் சென்ற சித்திக் கப்பன் இரண்டு ஆண்டுகள் காரணமின்றி தன் வாழ்க்கையை சிறையில் கழித்தார். இப்படி பத்திரிகையாளர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க-வின் எண்ணம் இப்போது தொடங்கப்பட்டதல்ல. இவர்களின் இந்த அணுகுமுறை கடுமையானதன் விளைவாகத்தான், பத்திரிகைச் சுதந்திரத்தில் 2021-ல் 142-வது இடத்திலிருந்த இந்தியா, 2022-ம் ஆண்டு 150-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

கனகராஜ்

பிபிசி ஆவணப்படம் வெளியானபோது, அவர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு, `இது வெளிநாட்டு ஊடகம், அவர்கள் இதில் தலையிடக் கூடாது’ என்பதே. இந்த நுண்ணறிவு மற்ற நாட்டுக்காரர்கள் அவர்களைப் பாராட்டும்போது தெரியவில்லையா… அப்போதெல்லாம், `மற்ற நாடுகளே இந்தியாவைப் பாராட்டிவிட்டன. மோடி அனைத்து நாட்டினருக்கும் விஷ்வ குருவாக திகழ்கிறார்’ என்று சொன்னதெல்லாம் இவர்களுக்கு கசக்கவில்லையா… சுழற்சி முறையில் அளிக்கப்பட்ட வாய்ப்பாக இருந்தாலும், அவர்களை ஜி-20 மாநாட்டை தலைமை தாங்க அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டனர் என மார்தட்டிக் கொள்கிற பா.ஜ.க-வினருக்கு அதில் இங்கிலாந்தும் கலந்துகொள்கிற செய்தி தெரியுமா… தெரியாதா… பாராட்டும்போது அதை ஏற்பதும், விமர்சனம் எழும்போது அது வெளிநாட்டு கருத்து என விமர்சிப்பதும் நியாயமல்ல.

ஊடகச் சுதந்திரம்

இது குஜராத் கலவரம் பற்றி தன் விமர்சனத்தை ஆதாரபூர்வமாக முன்வைத்த, பிபிசி-மீது வேண்டுமென்ற இந்தச் சோதனை நடத்தப்படிருக்கிறது. கடந்த காலத்திலும் நியூஸ் கிளிக், நியூஸ் லான்றி போன்ற செய்தி நிறுவனங்கள்மீதும் சர்வே என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கை தொடுக்கப்பட்டது. எப்போதெல்லாம் ஒரு செய்தி நிறுவனம், பா.ஜ.க-மீது விமர்சனம் வைக்கிறதோ, அப்போதெல்லாம் இப்படியான பழிவாங்கல் நடவடிக்கை அரங்கேறுகிறது. காரணம், இந்த ஆவணப்படத்தை பார்க்கிறவர்களுக்கு இது நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனால்தான் அதை தடைசெய்தனர்.

ஊடகச் சுதந்திரம்

குஜராத் கலவரம் குறித்து விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். ஹரன் பாண்டியா குஜராத் கலவரம் பற்றி உண்மையைப் பேசிய காரணத்துக்காக, அவர் மர்மமாக கொல்லப்பட்டார். அவர் பா.ஜ.க-வின் உள்துறை அமைச்சராக இருந்தவர். அந்த வழக்கின் குற்றவாளிகள் இன்று வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், உண்மையை வெளிப்படுத்திய காவல் அதிகாரி சஜ்சய் தத் தற்போதும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் பிபிசி இது குறித்துப் பேச வேண்டும் என சிலர் கேட்கிறார்கள். ஆனால், யூதர்கள் கொலைசெய்யப்பட்டது பற்றி தொடர்ந்து பேசப்படுகிறது. ஆகவே,வெறுப்பு பிரசாரங்கள் தீவிரமாகும் போதெல்லாம் இந்த நிகழ்வை எடுத்துச் சொல்வதன் தேவை அவசியமாகிறது.

திரையிடப்படும் பிபிசி-யின் ஆவணப்படம்

பிபிசி ஆவணப்படத்தில் சொல்லப்பட்ட விஷயம் சரியா, தப்பா… என்பதற்குள் வராமல், அது `வெளிநாட்டு ஊடகம்’ எனச் சொல்லி மீண்டும், இதை சர்வதேச சதி என்னும் விமர்சனத்துக்கு கொண்டு  செல்வது நியாமல்ல. சர்வதேச சதி என்னும் வாதத்தை முன்வைத்து, தேசபக்தி என்னும் போர்வைக்குள் அவர்கள் ஒளிந்துகொண்டு தங்களைப் புனிதமாக்க முயல்கிறார்கள். ஆனால், இது தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கை” என்றார்.

தேசியக் கொடி

இது குறித்து பத்திரிகையாளர் பிரியன் நம்மிடம் பேசுகையில், “நடுநிலையான ஊடகங்களுக்கு மோடி அரசு விடுக்கும் எச்சரிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். இதை பா.ஜ.க மேற்கொள்வது புதிதல்ல. இதற்கு முன்பு இந்திய ஊடகங்களான தி வயர், ஆல்ட், நியூஸ் கிளிக், நியூஸ் லான்றி ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்திருக்கின்றனர். ஆனால், இதுவரையிலும் இந்தியாவிலுள்ள ஊடகங்களை அச்சுறுத்திய மோடி அரசாங்கம், தற்போது சர்வதேச ஊடகத்தில் கைவைத்திருக்கிறது. பிபிசி நிறுவனம் அரசாங்க நிதியில் இயங்கக் கூடியது என்பதால், நிதி நிலையில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. இது பா.ஜ.க அரசால் ஆத்திரத்தில் செய்யப்பட்ட சோதனை. ஏற்கெனவே மூச்சுமுட்டும் அளவுக்கு இந்திய ஊடகங்கள் நெருக்கப்படுகின்றன. இனி அது இன்னும் இறுகும் என்பதே இந்த செயல் உணர்த்துகிறது.

பிரியன்

குஜராத் ஆவணப்படம் இன்று புது வாக்காளர்களாக இருப்பவர்கள், பிறப்பதற்கும் முன்பு நடந்த நிகழ்வு குறித்து. இதை பிபிசி வெளியிட்டதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் இது தீவிரமாகப் பேசப்படும். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் நடுக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆனால், அதே வேளையில் இது இந்து வாக்குகளைப் பா.ஜ.க-வுக்கு அதிகரிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். காரணம், அவரின் ஆதரவாளர்களை நீதிமன்றம் விடுவித்த பின்னரும், மோடிமீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்பது மோடியை அனுதாபத்துக்குரிய ஆளாக தோன்றவைக்கும்.

மோடி

அதேபோல், ஆவணப்படத்தை இந்தியாவில் எடுக்க யார் மறைமுகமாக உதவி செய்தார்கள் என்பதை இந்தச் சோதனை வாயிலாக தெரிந்துகொள்ள அவர்கள் முயல்வதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த சர்ச்சை அடுத்த தேர்தல் வரையிலும் தாக்குப்பிடுக்குமா? என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதை தீவிரமாக கையில் எடுத்தால், இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவர்கள் இதை கையிலெடுத்தால் இந்துக்கள் வாக்குகள் பறிபோகும் என்னும் அச்சத்தில் அது பற்றி பேசத் தயங்குகின்றனர்” என்றார்.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக பிபிசி-யின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.