மதுரைக்கு குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி அனைத்து துறை சார்பிலும் விரிவான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18 மற்றும் 19ஆம் தேதியில் தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்படும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, அன்று நண்பகல் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தவடைய உள்ளார். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருவதோடு அனைத்து துறை அதிகாரிகளோடு மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

image

கோயிலில் சுவாமி தரிசனம் செய்துமுடித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் குடியரசு தலைவர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோயிலை சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒரு கோபுரத்தில் இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் குடியரசுத்தலைவர் கோயிலுக்கு வந்தவுடன் அவர் ஓய்வெடுக்க தற்காலிக வரவேற்பரை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், உளவுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், இந்து சமய றநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் டெல்லி கமாண்டோ பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

மேலும் குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசு தலைவரின் வருகை, சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அன்னதானத்தில் பங்கேற்று குடியரசு தலைவர் உணவு அருந்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, காவல்துறை, உளவுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.