வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

ஏசு நாதர் மேரி மாதா சிலைகளுடன் பிரம்மாண்ட நுழைவு வாயிலைக் கொண்ட பள்ளிக்கூடம். அகண்ட வராண்டாக்களும், பெரிய தூண்களும், மூச்சிரைக்க வைக்கும் மாடிப்படிகளும் சூழ்ந்த விசாலமான வகுப்பறைகள்…

எங்கள் பள்ளியின் காவல் தெய்வங்களான பெரிய பியூன் ஜெயராமன் மற்றும் சின்ன பியூன் மரியநாதனின் மொத்த உருவமாய் செக்யூரிட்டி ஜனகராஜ்!

“டேய் தம்பிகளா… கிளாஸ்ல முறுக்கிக்கிட்டு நின்ன மாதிரியே பாதர் கிட்டயும் நிக்காதீங்க… பேசாம நில்லுங்க ! நான் பக்குவமா சொல்லிக்கறேன்…”

ஆசிரியர் வராத வகுப்பில் சட்டைக்கிழிய சண்டையிட்டு பிடிபட்டு, கசாப்பு ஆடுகளாகத் தலைமையாசிரியர் அறைக்கு நடத்திச் செல்லும் வழியில் பக்குவமாய் புத்தி சொல்லும் அதே வாஞ்சை ஜனகராஜ்..

அதே நண்பர்கள் கூட்டத்தின் கொட்டம், சைக்கிள் வரிசை, சலூன் கடைக்காரர்…

“டேய் மாப்ள ! டைரக்டர் நம்ம குரூப்பாத்தாண்டா இருக்கனும்… அப்படியே எடுத்திருக்காண்டா !”

இன்ப அதிர்ச்சியுடன் அலறத் தோன்றியது…

96 படம்

“நம்ம பத்தாவது குரூப்பில் நமக்குத் தெரியாமலேயே யாராவது சினிமாவுக்கு போயிட்டானா” எனத் தேடியது மட்டுமல்லாமல், சி. பிரேம்குமாரின் புகைப்படத்தையும் பார்த்துத் தெளிந்த பின்னர் தான் படபடப்பு அடங்கியது !

இயக்குநர் பிரேம்குமார் எங்கள் குரூப் அல்ல. ஆனால் எந்த மாயக்கண்ணாடியில் எங்கள் பள்ளி காலத்தைக் கணித்தாரோ ?…

“ஸ்கூல் எப்படி இருக்கு ? அப்படியே தான் இருக்கா இல்ல இடிச்சி கட்டிட்டான்களா ?” எனும் பக்ஸின் கேள்விக்குப் பதிலாக எங்கள் பள்ளியை இடித்துக் கட்டிவிட்டார்கள்…

அத்தனை நினைவுகளைத் தாங்கி நின்ற அதன் பிரம்மாண்டத்தைப் புதைத்துவிட்டு, ஒற்றை சுவர் கட்டிடமாக கட்டிவிட்டார்கள்.. விரிவாக்கத்துக்கு வழிவிட்டு சுருங்கிய மைதானம் பன்னீர் பூ மரங்களையும் மகிழம்பூ மரத்தையும் இழந்து, பொட்டை புழுதிக்காடாய் கிடக்கிறது..

பள்ளி நினைவுகளில், பிரதானமாய் வீற்றிருக்கும் “ஒடிசல்” ராமையும், எங்கள் பள்ளிக்கு மறு பக்க தெருவிலிருந்த பெண்கள் பள்ளியின் “பளிச்” இரட்டைச் சடை ஜானுவையும் பிரேம்குமார் கண்டுபிடித்தது எப்படி ?…

பேச்சு திணறி, இதயத்துடிப்பு எகிறி ராம் மயங்கிச் சரிந்ததைக் கூடவா அந்த மாயக்கண்ணாடி காட்டிவிட்டது ? அது மட்டுமா ? இருபது வருடங்கள் கழித்த, வாழ்க்கை புத்தியைப் புடம் போட்ட வயதில் ஜானுவை சந்தித்த தருணத்திலும் ராமுக்கு வார்த்தைகள் விக்கி, அவன் சரிந்ததை கூட காட்டியிருக்கிறதே !

96 எனும் திரைக்காட்சி காதல் கவிதையை ஆத்மார்த்தமாக உணர்ந்துகொள்ள அதனுள் ஒளிந்திருக்கும் இரண்டு குறியீடுகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்..

விஜய் சேதுபதி – த்ரிஷாவின் `96

முதல் குறியீடு கதை நாயகனின் தொழில். ராம் ஒரு புகைப்பட கலைஞன். தன் புகைப்படக் கருவியின் வழி காலத்தை சிறைபிடிக்கும், உறைய வைக்கும் கலைஞன்…

ஜானகியின் நினைவுகளிலேயே வாழ்க்கை லயித்துப்போன ராமச்சந்திரனின் ஒரே ஆசை என்னவாக இருக்கும் ? அவளை பார்த்துத் திரிந்த அந்த பள்ளி காலங்களிலேயே வாழ்க்கை சுழன்றுகொண்டிருந்திருக்கலாமே என ஆசைப்படுபவனுக்குக் காலத்தைச் சிறை பிடிக்கும் புகைப்படக்கலையைத் தவிர வேறெந்த கலை அல்லது தொழில் பொருத்தமாக முடியும் ?

இரண்டாவது குறியீடு திரைப்படத்தின் காட்சி அமைப்பு…

ராமின் நிகழ் கால வாழ்க்கை பகலில் படமாக்கப்பட்டிருக்கும் படத்தில் ஜானு மற்றும் ராம் சந்திக்கும் காட்சிகள் அனைத்தும் இரவில் நிகழும். நிறைவேறாத ஆசைகளின் நினைவுகள் மேலோங்குவதும், அந்த நினைவுகளை தூண்டும் கனவுகள் தோன்றுவதும் இரவின் ஏகாந்தத்தில் தானே ?

முக்கியமாக,

“என் ராம் என்னைத் தேடி வந்துட்டான் !”

என ஜானு ராமின் மாணவிகளிடம் தன் “கற்பனை கனவை” இரவில் வெளிப்படுத்தும் காட்சி !

பதிணென் காதலைப் பத்திரமாய் காத்து, அந்த காதலையே வாழ்க்கையின் உந்து விசையாகக் கொண்டிருக்கும் இரு உள்ளங்கள் மத்திம வயதில், தனிமையில் சந்தித்தால் என்ன நடக்கும் ?…

“கம்பியின் மீது நடப்பது” என்றெல்லாம் தயங்கும் அளவுக்கு வழக்கமான தமிழ் சினிமா கட்டமைத்த கற்பனைகள் எதுவும் நிகழாது ! நிச்சயமாக அது உடல் ரீதியிலான சந்திப்பாக முடியாது ! இந்த யதார்த்தத்தை யதார்த்தமாக, சினிமா அரிதாரங்கள் எதுவுமின்றி காட்சிப்படுத்தியதால் தான் 96 திரைப்படம் என்பதற்கும் ஒரு படி மேலாக திகழ்கிறது !

“ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…”

என ஜானு பாடும் அந்த காட்சி…

அந்த காட்சியில், “ஈரல் குலையை பிய்த்து எரிந்தது போல” பதைத்துப் பனிக்காதவர்கள் காதல் உணர்வை அறியாதவர்கள் !

பார்ப்பது படம் என்பதை அவ்வப்போது மறக்கச்செய்து, சொந்த நினைவுகளாகவே மாற்றிவிடும் இளையராஜா பாடல்கள்…

ஒரு காலத்தின் ஒட்டு மொத்த இசைக்கும் ஒற்றை மனிதனை பிரதிநிதிப்படுத்துவது நியாயமா என்பது விவாதத்துக்குரியதுதான் என்றாலும், ஒரு தலைமுறையின் அத்தனை உணர்வுகளுக்கும் இசையமைத்த அந்த மனிதனின் இசையைக் கேட்டால் தானே நமக்கும் நிறைகிறது ?!

‘96’

இந்த காதல் கிளிகளின் நினைவுகளை மீட்ட,

“ஒரு ஜீவன் அழைத்தது… ஒரு ஜீவன் துடித்தது…

இனி எனக்காக அழ வேண்டாம்…”

என காதலில் உருகிய ராகதேவனை விடவும் ஒரு மேலான தேவன் உண்டா என்ன ?

எல்லாம் சரி, ஜானுவை மீண்டும் சந்திக்க விரும்புவானா ராம் ?…

“சந்தோசமா இருக்கேனான்னு தெரியாது, ஆனா நிம்மதியா இருக்கேன்” என கூறுவாள் ஜானு.

வாழ்க்கையின் யதார்த்த சூழலில், குடும்பமாக இருக்கும் அவளது நிம்மதியாவது சற்றே குலையலாம். ஒப்பீடுகள் தோன்றி சஞ்சலப்படலாம்.

ஜானுவின் நினைவுகளிலேயே, “அவளை விட்ட” அதே இடத்திலேயே நின்று புகைப்படமாய் உறைந்துவிட்ட ராமச்சந்திரனுக்கு ஜானகியின் வருகை கூட இரண்டாம் பட்சம்தான் ! அவளின் நினைவுகள் அவனுக்குள் ஏற்படுத்தும் நிம்மதி நிரந்தரமானது…

அந்த நிம்மதி, அவள் விட்டுச் சென்ற உடை அவனது இங்க் தெளித்த சட்டையுடன் பெட்டியில் ஒன்றாக கலந்திருக்கும் காலம் வரையிலும் நிலைத்திருக்கும் !

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.