துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகப்பெரும் அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் மிகப்பெரியவை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் நிலப்பரப்பு 5 மீட்டர் அளவு நகர்ந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதன் விளைவாக நிலத்தட்டு நகர்வது எதனால் என்பது குறித்து பேரிடர் மற்றும் நிலநடுக்க ஆராய்ச்சி மாணவர் சரவண கணேஷிடம் கேட்டோம்.

சரவண கணேஷ்

சரவண கணேஷ் கூறும் போது, “நமக்குத்தான் நாடு என்கிற எல்லைகள் உண்டே தவிர, புவியியல் ரீதியாக பார்த்தோமேயானால் புவியின் மேற்பரப்பைக் கொண்டு 7 பெரிய தட்டுக்களாக (Tectonic plates) பிரிக்கலாம். பூமியின் 95% பரப்பு, இந்த ஏழு தட்டுக்களின் மீதே அமைந்துள்ளது. இதுபோக பல தட்டுக்கள் உண்டு (Secondary மற்றும் Tertiary plates). நிலநடுக்கங்களைப் பொறுத்தமட்டில், இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. இந்த தட்டுகளின் விளிம்புகளில் – தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதாலோ, ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு மேலேயோ கீழேயோ நகரும்போதோ, தட்டுகள் எதிரெதிராக நகரும்போதோ ஏற்படும் ஆற்றல் வெளிப்பாட்டால் நிகழும் நிலநடுக்கங்கள் (Interplate earthquakes), தட்டுக்களின் விளிம்புகளிலிருந்து வெகுதூரம் தள்ளி, தட்டுக்களில் உள்ளிடையாக இன்ட்ராபிளேட் பூகம்பங்கள் ( Intraplate earthquakes) ஏற்படும்.

இவ்வகை நிலநடுக்கங்கள் அரிதானவை என்றாலும், புவியியல் அமைப்பின் காரணமாகவும், அங்கிருக்கும் கட்டிட அமைப்புகள், மக்கள்தொகை அடர்த்தி, போன்ற பல காரணிகளால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். 2001 குஜராத் பூஜ் நிலநடுக்கம், intraplate வகையைச் சார்ந்தது. இந்த வகைகளைத்தாண்டி மனித நடவடிக்கைகளால் ஏற்படும் நிலநடுக்கங்களும் உண்டு (உதாரணத்திற்கு, அணைகளால் ஏற்படும் Reservoir Induced Seismicity).

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

எவ்வகை நிலநடுக்கமாக இருந்தாலும், அவை faults எனப்படும் பூமிப்பிளவின் செயல்பாடு காரணமாகவே நிகழ்கிறது. இப்பிளவுகளை, நமது உடலில் ஏற்படும் எலும்பு முறிவுகளைப் போல உருவகப்படுத்திக் கொள்ளலாம். சில கடுமையான முறிவுகள் – என்னதான் நல்ல சிகிச்சையெடுத்து, பல வருடங்களானாலும் – மீண்டும் அடிபடும்போது அதேயிடத்தில் முறிவு ஏற்படுவதில்லையா, அதுபோலவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியிருந்தாலும் பூமியின் சில பிளவுகள் புவியில் மாற்றங்களால் அவ்வப்போது உராய்வதும், மோதிக்கொள்வதுமாக ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த ஆற்றல் வெளிப்பாட்டைத்தான் நாம் நிலநடுக்கமாக உணர்கிறோம். இப்பூமி தோன்றிய நாள்முதல் தினமும் நடந்து கொண்டேயிருக்கும் நிகழ்விது. கடலுக்கடியிலும் நடக்கும் (சுனாமியின் காரணகர்த்தா); நிலத்திற்கடியிலும் நடக்கும். வெளிப்படும் ஆற்றலின் அளவை (Magnitude) ரிக்டர் அளவுகோலின்படி வகைப்படுத்துகின்றனர். 3 ரிக்டருக்கும் கீழே ஏற்படும் நிலநடுக்கத்தை நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் 1 ரிக்டரிலிருந்து ஏற்படும் நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவிகள் தற்போது உண்டு.

துருக்கி அமைந்திருக்கும் புவியில் பரப்பு, யுரேசிய மற்றும் அரேபிய தட்டுக்களின் எல்லையில் உள்ளது. இப்பெரும் தட்டுகளைத் தாண்டி, அனடோலிய தட்டும் உள்ளது (Anatolian plate). இத்தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளுவதும் உரசிக்கொள்வதும் வழக்கமான புவியியல் செயல்பாடு. இதன் காரணமாக, அங்கு ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு அனடோலிய பிளவுகள் (North and East Anatolian faults) என்று இரண்டு பெரும் பிளவுகள் (fault lines) உள்ளன.பிப்ரவரி 6 -ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது அரேபிய மற்றும் அனடோலிய தட்டுக்களின் மோதலால் ஏற்பட்டது. மோதலின் காரணமாக, பிளவுகளில் அழுத்தம் அதிகரிக்க, ஒரு பிளவு மற்றொரு பிளவிலிருந்து விலகிச் சென்றது. அதன் விளைவாக 7.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வகை பிளவு விலகலை Strike-slip fault என்பர்.

இப்படிப் பிளவுகள் விலகிச் சென்றதால், துருக்கியின் பெரும்பான்மையான நிலப்பரப்பு அமைந்திருக்கும் அனடோலிய தட்டு நகரவும் துருக்கி, 3 – 6 மீட்டர்கள் வரை நகர்ந்திருப்பதாக உலகின் பல முக்கிய புவியியல் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான நகர்வின் விளைவாக சாலைகள், நிலத்தடி அமைப்புகளான குடிநீர் குழாய்கள், வடிகால் குழாய்கள் போன்றவைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில் மேலும் கொடுமையான விஷயம், உள்நாட்டு போரினால் துருக்கியில் தஞ்சமைடைந்த சிரியா மக்களின் முகாம்கள் பலவும் பலத்த சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கம் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் ஜப்பான் போன்ற பேரிடர் மேலாண்மையை முக்கிய கொள்கையாக கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில் 7 ரிக்டரில் ஏற்படும் நிலநடுக்கத்திற்கும் – மக்கள் தொகை அடர்த்தியான, (அதிலும் குறிப்பாக வரைமுறையின்றி கட்டப்படும்) கட்டட அமைப்புகள் மிகுந்த ஒரு பகுதியில் ஏற்படும் 5.5 அளவிலான நிலநடுக்கதிற்கும் வேறுபாடு உண்டு. 5.5 என்பது ரிக்டர் அளவின்படி குறைவானதாகயிருந்தாலும் மேற்சொன்ன காரணிகளால் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடியது.

நிலநடுக்கங்கள் இங்கு, இந்த நேரத்தில் ஏற்படுமென்று யாராலும் எந்த அமைப்பாலும் கணிக்க முடியாது. மாறாக, இந்த இடத்தில் ஏற்படக்கூடும் (Probability), இவ்வளவு சேதங்கள் இருக்கலாம் (damage scenario), இவ்வாறான முன்நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் (mitigation and management) என்று மட்டுமே கூற முடியும்” என்றார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.