தமிழ்நாட்டில் 200-வது நாளாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பரந்தூர் மற்றும் அதைச்சுற்றியிருக்கும் 13 கிராம மக்கள் வீடுகளையும், வழிபாட்டு தலங்களையும், தங்களுடைய விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் இடித்து தரைமட்டமாக்கி, விவசாய நிலங்களை கையகப்படுத்தி உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என 200-வது நாளாக அமைதியான அறவழியில் போராடி வருகிறார்கள்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்

ஆனால், இந்தப் போராட்டத்துக்கு வரும் மக்கள் குறிப்பாக பெண்களும், இளைஞர்களுன் ஒன்றுகூடி தங்கள் உணர்ச்சிகளை அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றத் தவறி வருகிறார். இதிலிருந்து அவரின் இரட்டை நிலைப்பாடு நன்றாக தெரிகிறது.

மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக தமிழ்நாடு அரசு அதற்கு துணை போவதா? அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பரந்தூரைச் சுற்றி முதலீடு செய்துள்ளன. விமான நிலையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால், மத்திய அரசின் பிரதிநிதிகள் யாரும் கிராம மக்களோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி, மத்திய அரசிடம் தரும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

அப்படி செய்யக்கூடாது என்பதற்காகத்தான், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் கவனஈர்ப்பு தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அதில், பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் பாதிக்கப்படுகின்றன. வேடந்தாங்கலின் ஒருபகுதியாக இருக்கக்கூடிய இந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் சீசனில் வந்து செல்கின்றன. பல்வேறு ஏரி குளங்களில் நமது பாரம்பரிய மீன் வகைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அழித்து, 5000 ஏக்கரில் விமான நிலையம் தேவையா… என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் அவையில் இருக்கும்போதே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன்.

ஸ்டாலின் – வேல்முருகன்

அதற்கு மதிப்பளிக்கும் வகையில், உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வரும் என்று தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சரின் அலுவலகத்தின் உயர்அதிகாரிகளையும் சந்தித்து, இந்திய அரசுக்கென இருந்த விமானங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. இந்த விமான நிலைய திட்டம், நாளை பணக்கார பன்னாட்டு நிறுவனமான டாடாவுக்கும், அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படி பல முறை நடந்திருக்கிறது என விளக்கியிருந்தேன். அப்போதும், இதை பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் இப்போது அரசு விமான நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? மக்களுடைய இந்த வாழும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றைப் பறித்து ஒரு பசுமை விமான நிலையம் உருவாக்கித் தருவதற்கான கொள்கை முடிவு எடுப்பதற்கு, எந்த அரசுக்கும் உரிமை இல்லை. கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட பேசவிசாமல் மைக்கை பிடுங்குவது தானே நடக்கிறது… சாதரண நடிகர் சங்க சங்கத் தேர்தலுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வந்து ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கிறார். அதே ஜனநாயகத்தையும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதிலும் பின்பற்றலாம் தானே…

விமான நிலையம் அமையவிருக்கும் பரந்தூர் கிராமம்

13 கிராம மக்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்துங்கள். பெரும்பான்மையான மக்கள் சம்மதம் தெரிவித்தால், பரந்தூர் விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுங்கள். கலைஞர் அவர்களே அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து எழுத்தின் மூலமாகவும், பேச்சுரிமை மூலமாகவும் போராடி இருக்கிறார். ஆனால் இன்று, முதல்வர் தலைமையிலனான காலநிலை மாற்றத்துக்கான குழுவில் உறுப்பினராக இருக்கும் பூவுலகின் நண்பர் குழுவின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வனை கைதுசெய்திருப்பது எந்த வகையில் சரி…

இந்த மக்களின் கோரிக்கை, ‘வீட்டில் ஒருவருக்கு மத்திய மாநில அரசுகளின் வேலையும் வேண்டாம்… எங்க நிலத்துக்கு ஒரு கோடியும் வேண்டாம்… எங்களை எங்கள் கிராமத்தில் நிம்மதியாக வாழ விடுங்கள் அது போதும் என கேட்கிறார்கள். ஒருவேளை போராடும் இந்த மக்கள், ராணுவம் அல்லது காவல்துறையின் மூலமாக அச்சுறுத்தப்பட்டு, மிரட்டப்பட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.