”பேர கேட்டால சும்மா அதிருதுள்ள” என ’சிவாஜி’ படத்துல சூப்பர் ஸ்டார் ரஜினி வசனம் பேசுவாரு. அப்படிதாங்க இருக்கு, இன்னிக்கு அதானியோட பேர கேட்டா. போன வருஷத்துல உலக பணக்காரர் லிஸ்ட்ல 3வது இடத்துல இருந்த அதானி, ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஒரேயொரு அறிக்கையால, இன்னிக்கு அதளபாதாளத்துக்குப் போயிட்டாரு. யார் இந்த அதானி? அவரு, எப்படி இவ்வளவு வேகமா வளர்ச்சியடைஞ்சாரு, அவருக்கும் மோடிக்கும் உள்ள நட்பு, ஹிண்டன்பர்க் சொன்னது என்ன? இனி, அதானி குழுமத்தின் எதிர்காலம் என்ன என எல்லாத்தையும் இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

யார் இந்த அதானி?

குஜராத் மாநிலம் அகமதாபாத்துல ஜவுளித் தொழில் செஞ்சுக்கிட்டிருந்த ஒரு நடுத்தர குடும்பத்துல பிறந்தவருதான் இந்த கெளதம் அதானி. 1962ம் ஆண்டு பிறந்த அதானியுடன் கூடப் பிறந்தவர்கள் ஏழு பேரு. பள்ளிக்கல்வியை முடிச்சுட்டு இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவுல காலேஜ்ல சேர்ந்த கெளதம் அதானிக்கு தொழில் செய்றதுல இண்ட்ரஸ்ட் வந்ததால, அத்துடன் காலேஜுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மும்பைக்குப் பறந்தாரு. அங்க, வைர வியாபாரம் செஞ்சுக்கிட்டிருந்த மஹேந்திரா குழுமத்துல வேலைக்குச் சேர்ந்து வைரத்தைத் தரம் பிரிக்கும் தொழில அக்கறையாக கத்துக்கிட்டாரு.

image

படிப்பைக் கைவிட்டதால் கவலை

அதேநேரத்துல, தன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டது குறித்து சமீபத்தில் அதானி பேசியபோது, “இந்தத் தொழிலை விரைவிலேயே கற்றுக்கொண்டதால் அதன்மூலம் அறிவு பெற்றேன். முறையாகக் கல்வி பயின்றிருந்தால், அது நீண்டகாலத்திற்குத் தமக்கு உதவியிருக்கும் என்று தற்போது எண்ணுகிறேன். என் வாழ்க்கையில் கல்லூரிக் கல்வியை நான் பெற்றிருந்தால், இன்னும் கொஞ்சம் பயனடைந்திருப்பேன். முறையான கல்வியே ஒருவரின் அறிவை வேகமாக விரிவுபடுத்துகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நான் மட்டும் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தால் என் அனுபவம், புத்திசாலித்தனம், கல்வியறிவு ஆகியவற்றோடு இன்னும் அதிக திறமையை வளர்த்து வேகமாய் முன்னேறி இப்போது உள்ள இடத்தை, 10 வருடத்துக்கு முன்பே அடைந்திருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

image

அதானி எண்டர்பிரைசஸ் ஆரம்பம்

பின்னர், குஜராத்துக்குத் திரும்பி வந்த அதானி, தன் சகோதரனின் பிளாஸ்டிக் ஆலைய கவனிச்சுக்கிட்டாரு. அப்படியே தனக்கென ஒரு நிறுவனத்தையும் 1988ல ஆரம்பிச்சாரு. அதுதாங்க இன்னிக்கு அதானி குழுமத்தோட முதன்மையா இருக்கும், தள்ளாட்டத்தல நிக்கும் ‘அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம். இதன்மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள கவனிச்சுவந்த அதானி, 1991ல தாராளமயமாக்கல் கொள்கைய தனது டிரேடிங் தொழிலுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு தொழில விரிவுபடுத்த ஆரம்பிச்சாரு.

1 ரூபாய்க்கு நிலம் வாங்கி ரூ.600க்கு வாடகை

1994ல இந்திய பங்குச் சந்தையில தன்னுடைய நிறுவனத்தைப் பட்டியலிட்ட அதானி, அதே ஆண்டு குஜராத் அரசு முந்த்ரா துறைமுக நிர்வாகத்த தனியாருக்குத் தர நினைச்சது. அதுக்கான ஒப்பந்தம் 1995ல கெடச்சது. குஜராத் கட்ச் வளைகுடாவுல முந்த்ரா பகுதியில துறைமுகம் கட்டுவதற்காக ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்டது. 1 சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது.

அதுபோல், 2005ம் ஆண்டு, முந்த்ரா கிராமத்தில் கால்நடை மேய்ச்சலுக்காகக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் குஜராத் அரசால் கையகப்படுத்தப்பட்டது. 1 சதுர மீட்டர் நிலத்தை 1 ரூபாய்க்குப் பெற்ற அதானி, அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதே நிலத்தை, 1 சதுர மீட்டர் 600 ரூபாய் என்ற மதிப்புல வாடகைக்குக் கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டதாகச் செய்திகளும் வெளியாகின.

image

பிரதமர் மோடியின் நட்பு

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 2001ல குஜராத் முதல்வரா இப்போதைய பிரதமரு மோடி இருந்தப்போ, அவருடைய நட்பு அதானிக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சது. அதுக்கு இன்னொரு காரணம், ரெண்டுபேருமே ‘குஜராத்’தான். சாதாரண நடுத்தர நிலையில இருந்து வந்தவங்கதான்.
அதானி குழுமம் `சிறப்புப் பொருளாதார மண்டலமாக’ அளிக்கப்பட்ட பிறகுதான், கடந்த 28 ஆண்டுகளுல கெளதம் அதானி, தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பிச்சது. அதுமட்டுமில்ல, உலகம்பூராவும் வெற்றிக்கொடிய நாட்ட ஆரம்பிச்சாரு. சிறப்புப் பொருளாதாரம் குறித்துப் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் லாபகரமாக சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் அதானியின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நன்றாகச் செயல்பட்டன. அதற்கு அதானியின் நல்ல நிர்வாகம் ஒரு காரணம் என்றாலும், அதானிக்கு நிலவும் சாதகமான சூழலே முக்கியக் காரணம்” என சுட்டிக் காட்டியிருந்தார்.

image

விரிவடைந்த அதானி குழுமங்கள்

இதற்கிடையே 1996ல பவர் நிறுவனத்தையும், 2000ல சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனையையும் 2001ல சமையல் எரிவாயு விநியோகத்தையும் தொடங்குனாரு. 2001ல குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தப்போ, அந்த மாநிலமே வளர்ச்சி பெற்றது. அதுமட்டுமின்றி ’குஜராத் மாடல்’ என்னும் சொல்லமளவுக்கு அம்மாநிலத்தின் வளர்ச்சியும், அதானியின் தொழில் வளர்ச்சியும் கொடிக்கட்டி பறக்கத் தொடங்கியது. இதுகுறித்து ஜேம்ஸ் கிராப்ட்ரீ என்பவர், ’பில்லியனர் ராஜ்’ என்ற புத்தகத்தில், “2001ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கின” என தெளிவாக குறிப்பிடுகிறார்.

நிலக்கரிச் சுரங்கம் ஒப்பந்தம்

2014 பொதுத் தேர்தலின்போது, மோடி தன்னுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு, அதானி குழும விமானங்களில் பயணித்து வாக்கு சேகரித்ததாகவும், அந்த நட்பின் பலனாக அதானிக்கு, பல வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்கள் கிடைச்சதாகவும் ஊடகங்களில் இன்றுவரை செய்திகள் வெளியாகி வருகின்றன. அதில் ஒருபலனாகத்தான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்களை அதானி கையகப்படுத்தியதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்திய நிலக்கரி, துறைமுகங்கள், விமான நிலையங்கள் பராமரிப்பு என அனைத்தும் அதானியின் கைகளுக்குள் அடங்கிப்போயின.

image

கொரோனா ஊரடங்கில் அசுர வளர்ச்சி

மின் விநியோகம், மின் உற்பத்தி, கட்டுமானம், காஸ் உற்பத்தி, பெட்ரோலியம், அம்புஜா சிமெண்ட் எனப் பலவற்றிலும் கால்பதிச்சாரு. ஆரம்ப காலங்களுல, பல தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்த கெளதம் அதானி, கொரோனா காலக்கட்டமான, அதாவது உலகமே ஊரடங்கின் இருளுக்குள்ள மூழ்கியபோது, 2020-21ல அசுர வளர்ச்சிய அடஞ்சாரு. அது மட்டுமில்ல, உலக பணக்காரர் லிஸ்டுலேயும் 3வது இடத்த பிடிச்சாரு.

2013ல 3.1 பில்லியனாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2020ல 8.9 பில்லியன் டாலராகவும் (ரூபாயில் 73,187.8 கோடி), 2021ல 50.50 பில்லியன் டாலராகவும் (4.15 லட்சம் கோடி ரூபாய்), 2022ல 146.0 பில்லியன் டாலராகவும் (12 லட்சம் கோடி) உயர்ந்தது. அதாவது, இந்த ஆண்டுகளுல சுமார் 40 மடங்கு வளர்ச்சிய அடைஞ்சாரு. அதுக்கு காரணம், 2019ல ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்திய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுத்ததாகவும், அதன் நீட்சியாகத்தான், அதே ஆண்டுல அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம் நாட்டின் 7 முக்கிய விமானநிலையங்களின் நிர்வாக, பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள எடுத்து லாபம் பார்த்ததாகவும் சொல்லப்பட்டது.

அசுர வளர்ச்சிக்குக் காரணம்

இதேபோல அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு பல மரபுசாரா மின்சாரத் திட்ட ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2021-22 நிதியாண்டில், அதானி போர்ட்ஸ் மட்டும் சுமார் 312 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது. இதுபோக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தது அதானி குழுமம். தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளுல மட்டும் அதானி குழுமம் 35 புதிய நிறுவனங்களையும் வாங்கின. இதுல, ரூ.82,600 கோடியை லாபமா பெற்றுள்ளது. குறிப்பா, 2021ம் ஆண்டிலிருந்து அதானி வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. அதாவது நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி லாபம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

image
கடந்த இரு ஆண்டுகளில் அதானி குழுமத்தில் சில நிறுவனங்கள் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. 2020ம் ஆண்டிலிருந்து அதானி டோட்ல் கேஸ், அதானி கிரீ்ன் பங்குகள் 1000 சதவீதம் உயர்ந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுனப் பங்கு மதிப்பு 2020ம் ஆண்டிலிருந்து 1400 மடங்கும், அதானி டிரான்மிஷன் 1000 சதவீதமும் வளர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு 120 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான கையகப்படுத்தல்களால் இக்குழுமத்தின் வருமானமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.70,463 கோடியிலிருந்து ரூ.2.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 53.8% ஆகும்.

செயற்கையாக உயர்த்தப்பட்ட ஷெல் விலை

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி பட்டியலிடப்பட்ட இவரது ஏழு நிறுவனங்களில் இவருக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடியாக இருந்தது. குறிப்பாக, இந்தக் குழுமம் 2022ம் நிதியாண்டில் ரூ.18,066 கோடி லாபம் சம்பாதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஷெல் கம்பெனி நாடுகளான மொரிஷியஸ், கரிபியன், சைப்ரஸ் தீவுகளில் செய்யப்பட்ட எஃப்ஐஐ முதலீடுகளால், அதானி குழும நிறுவனங்கள் பலவற்றின் பங்கு விலை செயற்கையாக உயர்த்தப்பட்டது. இதனாலேயே அதானி குழுமம் அதிக லாபம் அடைந்ததாகவும் பேசப்பட்டது.

எனினும், அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு நிறுவனங்களை மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது. இதில், கடந்த (2022) ஜூன் 11ஆம் தேதி நிலவரப்படி சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில், 6ல் ஐந்து நிறுவனங்கள் இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களில் இடம்பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

image

அதானியை விமர்சித்த பத்திரிகையாளர்

அதானியின் வளர்ச்சி குறித்து, இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவரான பரன் ஜோய் குஹா தாகுர்தா கடுமையாக விமர்சித்திருந்தார். அவர், ‘அரசின் கொள்கைகள் அதானிக்கு சாதகமாக இருந்தது எனவும், அதானி குழுமத்தின் வரி ஏய்ப்பு தொடர்பு குறித்தும் எழுதியிருந்தார். இதை எழுதியதற்காக, அதானி குழுமம் அவர்மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்ததும் நினைவிருக்கலாம்.

’எனது வளர்ச்சி மோடியை மட்டும் சார்ந்ததல்ல.. அதில் 4 காலக்கட்டம் இருக்கு’ – அதானி

அதேநேரத்தில் தன் வளர்ச்சி குறித்து கெளதம் அதானி, “எனது தொழில் பயணத்தை மொத்தம் 4 கட்டங்களாக பிரிக்கலாம். எனது ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் முதல் கட்டம். 1991ல் அப்போதைய பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள், எனக்கு 2வது கட்டம். தொடர்ந்து 1995ல் அப்போதைய குஜராத் மாநில முதல்வர் கேஷூபாய் படேல் மூலம் 3வது கட்டத்தை எட்டினேன். அடுத்து, 2001ல் குஜராத் முதல்வராக இருந்த மோடி மூலம் 4வது கட்டத்தை எட்டினேன். இப்படியாக மூன்று தசாப்தங்களுக்கு மேல் பல்வேறு தலைவர்கள், அரசு மற்றும் கொள்கைகள் மூலமாக எனது தொழில் வளர்ச்சி அடங்கியுள்ளது. அது தனியொருவரை (மோடி) சார்ந்தது அல்ல. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வைக்க காரணம், நானும் பிரதமர் மோடியும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டும்தான்” என ஊடகம் ஒன்றிற்கு முன்னர் அதானி பேட்டியளித்திருந்தார்.

image

அதானி வாழ்வில் துயர சம்பவங்கள்

தன் வளர்ச்சி குறித்துப் பேசிய அதானி, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியான சமயங்களையும் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், ”வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் மாறிமாறி நடந்து கொண்டேதான் இருக்கும். அதில் மோசமான அனுபவங்களை மறந்துவிட வேண்டும் என சிலர் கூறுவார்கள். உண்மைதான். ஆனால், அந்த மோசமான அனுபவங்கள் நமது வாழ்க்கையையே மாற்றும் சில வழிகளை காட்டியிருக்கும். எனக்கும் அப்படி சில மோசமான அனுபவங்கள் இருக்கின்றன. 1997ஆம் ஆண்டு ஒருநாள், காருடன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டேன். என் கதை அன்றுடன் முடிந்தது என்றே நான் நினைத்தேன். ஆனால் மறுநாள் காலையில் அவர்கள் என்னை விடுவித்தார்கள்.

தீவிரவாத தாக்குதலின்போது மும்பை தாஜ் ஓட்டலில் இருந்த அதானி!

கடத்தல் அனுபவம், எனக்கு ஒரு விஷயத்தை கற்றுக்கொடுத்தது. அதாவது, நம் வாழ்வில் நடப்பது நம்முடைய கட்டுப்பாட்டில் அல்ல. அதன் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோம் என்பதை அன்று உணர்ந்தேன். அதுபோல், 2008 நவம்பர் 26ம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் நண்பர் ஒருவருடன் இருந்தபோது, தீவிரவாதிகள் ஓட்டலுக்குள் நுழைந்து பல பேரைச் சுட்டுவிட்டார்கள் என்ற தகவல் வந்தது. இதையடுத்து, தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க அங்கிருந்த ஊழியர்கள் எங்களை சமையலறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நானும், மற்றவர்களும் மரண பயத்தில் அமர்ந்திருந்தோம். தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பிறகு நாங்கள் மீட்கப்பட்டோம். அந்த அனுபவம்தான், வாழ்க்கை பற்றிய புரிதலையும், குடும்பத்தினரின் முக்கியத்துவத்தையும் எனக்கு உணர்த்தியது” எனத் தெரிவித்திருந்தார்.

image

ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கை

இந்த நிலையிலதான் கடந்த ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவின் மிகப் பிரபல புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அறிக்கை ஒண்ணு வெளியிட்டுச்சு. அதுல, ’நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம்’ ஈடுபட்டு வருவதாக தெரிவிச்சிருந்தது. இதுக்குப் பதிலளிச்ச அதானி குழுமம், ’ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது. அதனால அந்த நிறுவனத்தின் மீது நாங்க வழக்கு தொடுப்போம்’ எனச் சொன்னது. இதுக்கு பயந்துபோகாத ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு பதில் அறிக்கைய தந்தது. அதுல, ’88 கேள்விகளை கேட்டிருந்தோம். அதுல 66 கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லவே இல்லை. குறிப்பாக சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் – லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் என்ன சம்பந்தம் கேட்டதற்கு அதானி குழுமம் பதிலே சொல்லல’ என்றதுடன் அவர்கள் குறித்த உறவுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. மேலும், `வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’ எனவும் `மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்’ எனவும் ஹிண்டன்பர்க் தெரிவிச்சது.

அதானி குழுமத்தின் தொடர் சரிவு

இப்படி, ஹிண்டன்பர்க் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளால, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை சந்திச்சது. குறிப்பா, பங்குச்சந்தையில அதானி குழும பங்குகளின் மதிப்பு மொத்தம் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு சரிவைச் சந்திச்சது. அதாவது, மொத்த பங்கு மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு சரிஞ்சது. மேலும், அதானியின் சொத்து மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி குறைஞ்சது. அதன்பலனா, பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி கீழிறக்கப்பட்டார். தவிர, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வந்த பட்டத்தையும் அதானி இழந்தார்.

image

திரும்பப் பெறப்பட்ட FPO பங்கு

இந்தநிலையிலதான், பங்குச் சந்தையில அறிமுகமான பின்பு நிதியை திரட்டுவதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி சந்தைக்குள் கொண்டுவரும் நடைமுறையான FPOவுல, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பொதுப் பங்குகளை ரூ.20 ஆயிரம் கோடிக்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்தது. இதுக்கான விற்பனையும் 3 நாள் நடந்துச்சு. அப்போ, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. அதுல அனைத்து பங்குகளும் விற்பனையாகின என பங்குச்சந்தையில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டபோதும், அதானி திடீரெனு ஒரு முடிவெடுத்தார். அதாவது, ’அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் FPO அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடம் பணத்தை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவிச்சார்.

கடனுக்கான பிணையை ஏற்க முடியாது

இந்த அறிவிப்புக்குப் பிறகு, அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள், கிட்டத்தட்ட 30 சதவிகிதம் சரிந்து, கடந்த வாரத்தைவிட 28 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்தது. இதன்மூலம், அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3.94 லட்சம் கோடி) இழந்தார். இந்தச் சூழ்நிலையிலதான், இதுவரை அதானி குழும நிறுவனங்கள், தங்களுடைய உள்கட்டமைப்பு சொத்துக்கள் அல்லது பங்குகளை அடமானமாக வைத்து பெரும்பாலான நிதியை கடன்கள் மூலம் திரட்டியிருந்தன. இதனால் பங்கின் விலை பாதிக்கும் கீழே சரிந்ததால், அவர்களின் பங்கு பிணையங்களின் மதிப்பு குறைந்தது. தற்போது கடனுக்கான பிணையாக அதானி குழும நிறுவனங்களின் பத்திரங்களை இனி ஏற்றுக்கொள்ள இயலாது என Credit Suisse மற்றும் சிட்டி குரூப் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதேபோன்று பல்வேறு நிறுவனங்களும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

image

ரிசர்வ் வங்கி அளித்த பதில்

அதேநேரத்தில், அதானி குழுமத்திற்கு வங்கிகள் கடன் கொடுத்தது தொடர்பாக விவாதம் எழுந்த நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அதானி நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் வங்கி துறையை தொடர்ச்சியாக கவனித்து வருவதாகவும், வங்கித் துறை நிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது” என தெரிவித்திருந்தது. இதற்கிடையே, 3 மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகள், அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த விபரத்தை அளித்திருந்தன. அதில், எஸ்.பி.ஐ., 27 ஆயிரம் கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் தலா 7 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அவைகளை முடக்கிய எதிர்க்கட்சிகள்

இதுஒருபுறமிருக்க, மறுபுறம், அதானி விவகாரத்தைப் பூதாகரமாக்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடனே விவாதிக்க வேண்டும், கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பதுடன், கடந்த 2 நாட்களாக இரு அவைகளையும் முடக்கிவருகின்றன. இந்த விவாகாரம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொதுநல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

image

அதானி குழுமத்தின் எதிர்காலம்

அதேநேரத்தில், ஒருகட்டத்தில் உலகின் டாப் 10 பில்லியனர்களில் 2வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி, இன்று முதல் 20 இடங்களுக்குள் இல்லை என்பது பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் அந்த குழுமத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், பல்வேறு முக்கிய வங்கிகளும் அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கோடி கோடியாக கடன்களை வழங்கியுள்ளன. அதானி குழுமம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் கடனை குவித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற லட்சிய திட்டங்களில் கவனம் செலுத்தியதன் காரணமாக இந்த கடன் அளவு கடந்த 3 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதானியின் கடனில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பத்திரங்கள் அல்லது வெளிநாட்டு வங்கிகள் போன்றவற்றிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புதிய கடன்களைப் பெறுவது கடினம்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, கடன் வழங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் எனவும், இது, கடனை திருப்பிச் செலுத்த முடியாத அபாயத்தை அதிகரிக்கிறது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், ”புதிய கடன்கள் என்பது இனி, அதானிக்கு அதிக வட்டிக்கான கடன் தொகையாகவும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையில் அழுத்தம் இருக்கும் எனவும், வெளிநாடுகளில் அதானி குழுமம் இனி புதிய கடன்களைப் பெறுவது கடினம்” எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுவதாக பொருளாதாரக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.