உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றபின் வீட்டில் ஓய்வில் இருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவான ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்தே இல்லை. உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை தெரிந்துகொண்டு, அவைத்தலைவராக இருப்பவர் தேர்தல் ஆணையத்துக்கு சொல்லவேண்டும் என கூறியிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ஐ சேர்த்துக்கொண்டு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்கிற தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சட்ட ஆலோசகர்களோடு அவர்கள் ஆலோசனை நடத்திவருகிறார்கள். நாங்கள் உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். எங்களை சேர்த்துக்கொள்ள முடியாது என குழப்பிக்கொண்டே இருந்தார்கள். இப்போது உச்ச நீதிமன்ற ஆணையை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி

உச்ச நீதிமன்றமே ஓ.பி.எஸ்-ஸை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆணை பிறப்பித்த பிறகு அவர்கள் என்னச் செய்யபோகிறார்கள். ஆகவே தமிழ்மகன் உசேன் என்ற அவைத்தலைவர் உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தென்னரசு வேட்பாளர் என்றால் அதை ஓ.பி.எஸ்ஸிடம் தெரிவிக்க வேண்டும். அவருடைய கருத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவரின் ஒப்புதலும் வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடும் சூழ்நிலை இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பா.ஜ.க தலையீடெல்லாம் இல்லை. அன்றைக்கு முதலமைச்சர் ஆவதற்கு அவர்கள் சொன்ன அறிவுரை எல்லாம் பழனிசாமிக்கு தேவைப்பட்டது. இன்றைக்கு பா.ஜ.க தேவையில்லை என பொன்னையனும் மற்றவர்களும் பேசுவதும், அதை இ.பி.எஸ் வேடிக்கைபார்ப்பதும் வழக்கமாக இருக்கலாம். பா.ஜ.க விஷயத்தில் கொள்கை ரீதியாக ஓ.பி.எஸ் சொல்லிவிட்டார். எங்களுக்கு யாரைப்பார்த்தும் பயம் இல்லை, மரியாதைதான் இருக்கிறது. அவர்களிடம் நாங்களும், எங்களுடன் அவர்களும் நன்றாக இருக்கிறார்கள். அதற்காக கொள்கை கோட்பாடுகளை எல்லாம் விட்டுவிட்டு தெருவிலே போய்விடமுடியாது. பா.ஜ.க மாநில தலைவர் ஆலோசனை சொல்லலாம். அதிகாரமாக சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓ.பி.எஸ், அண்ணாமலை

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதை தெளிவாக பதிவு செய்கிறேன். பா.ஜ.க எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை, இப்படி போங்கள் என வழிகாட்டவும் இல்லை. ஊடகங்கள் ஏதோ பா.ஜ.க வந்து இதை எல்லாம் செய்வதாக நினைக்கலாம். அப்படியானால் உச்ச நீதிமன்றம் வரை ஏன் செல்லவேண்டும். அவர்கள் சொல்வதையே கேட்டுவிட்டு போகலாமே. இரட்டை இலைச் சின்னத்தில் ஒரு வேட்பாளரைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க முடியும். அறிவிக்க முடியும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்போது. அவைத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரும் கலந்து ஆலோசித்த முடிவாக இருந்தால், அதை ஓ.பி.எஸ் ஏற்றுக்கொண்டால் இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர்தான், அவருக்கு இரட்டை இலை சின்னம்தான்… அதில் மாற்றுக்கருத்து இல்லை.” என்றார்.

கருணாநிதி – பேனா நினைவுச்சின்னம்

மேலும் சென்னை மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் குறித்த கேள்விக்கு அவர், “திராவிட இயக்கதின் 55 கால வரலாற்றில் பெரியார், அண்ணா, அதன்பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என 55 ஆண்டுகாலம் உருண்டு ஓடிவிட்டது. இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருக்கிறார். பேனாவை வைத்துதான் கலைஞரை அடையாளம்காட்ட வேண்டிய அவசியம் அவருக்கும் இல்லை, மக்களுக்கும் இல்லை. எல்லோருக்கும் கலைஞரை தெரியும். கலைஞர் எத்தனை பேனாக்களில், எத்தனை முறை எழுதினார் என்பதை கணக்கெடுக்க முடியாது. பேனாவை வைத்துதான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.