மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இரு அணிகளும் தேர்தல் கமிஷனையும் அணுகி இருக்கிறது. அவர்களின் மனுக்களை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், அம்மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக இரு அணிகளுக்கும் தனிப்பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இரு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே இரு தரப்பினரும் தங்களது தரப்பில் இருக்கும் ஆதரவாளர்கள் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதோடு இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருந்தனர். இதையடுத்து இறுதியாக வேறு எதாவது ஆவணங்கள் இருந்தால் ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று மாலையில் உத்தவ் தாக்கரே தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அனில் பரப் தலைமையிலான தலைவர்கள் தேர்தல் கமிஷனுக்கு சென்று ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அக்கட்சியின் எம்.பி.ராகுல் ஷெவாலே தலைமையில் வந்து மாலை 5 மணிக்கு பிறகு தாக்கல் செய்தனர். இது உத்தவ் தாக்கரேயின் அனில் பரப் கூறுகையில், “சிவசேனாவின் கட்டமைப்பு இன்னும் உத்தவ் தாக்கரேயிடம் தான் இருக்கிறது. சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தான் வேறு அணிக்கு சென்று இருக்கின்றனர். எங்களிடம் பெரும்பாலான நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

3 லட்சம் நிர்வாகிகளின் கடிதம், 20 லட்சம் தொண்டர்களின் கடிதங்களையும் தாக்கல் செய்திருக்கிறோம். சிவசேனாவின் சட்டத்தில் தலைமை தலைவர் என்ற ஒரு பதவியே கிடையாது. எனவே ஷிண்டேயின் தலைமை தலைவர் என்ற பதவி செல்லுபடியாகாது” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயின் ராகுல் ஷெவாலே எம்.பி. அளித்த பேட்டியில், “தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் கட்சி அங்கீகரிக்கப்படுகிறது. எங்களது அணியில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பதால் எங்களது அணியைத்தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கவேண்டும். இது குறித்து தேர்தல் கமிஷனில் தெரிவித்திருக்கிறோம். தாக்கரே சிவசேனாவின் சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறார். இது குறித்து தேர்தல் கமிஷனில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம். 4 தலைவர்கள், 6 துணைத்தலைவர்கள், 13 எம்.பி.க்கள், 40 எம்.எல்.ஏ.க்கள், 49 ஜில்லா பிரமுக், 87 விபாக் பிரமுக் ஆகியோரின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

சிவசேனா

ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலில், சிவசேனாவின் சட்டப்படி மும்பையில் உள்ள விபாக் பிரமுகர்கள் 12 பேர் மட்டுமே தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஆவர். ஆனால் ஷிண்டே தரப்பினர் அவர்களாகவே வேறு மாவட்டங்களில் 87 பேரை விபாக் பிரமுக்காக நியமித்து அவர்களை தங்களது ஆதரவாளர்கள் என்று கூறுகின்றனர். மொத்தமுள்ள 281 நிர்வாக குழு உறுப்பினர்களில் 170 பேர் தங்களை ஆதரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக உத்தவ் தாக்கரே தரப்பில் 124 பக்க ஆவணங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டு தேர்தல் கமிஷன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் கமிஷன் ஓரிரு நாள்களில் தங்களது முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு இச்சின்னம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.