தூத்துக்குடியில் சமுத்ரா பேமிலி ரெஸ்டாரண்ட் என்ற தனியார் ஹோட்டல்,  4 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதில், ஜார்ஜ் ரோட்டில் உள்ள கிளையில் ஷவர்மா தயார் செய்வதற்காக சிக்கனை வேக வைத்துள்ளனர். போதிய ஊழியர்கள் இல்லாமல் அந்தக் கிளை இயங்கி வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஆசையாக சிக்கனை கடித்து ருசி பார்த்து சாப்பிட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட ஹோட்டல்

தொடர்ந்து அருகில் இருந்த சமையல் பாத்திரங்களையும் நக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ வைரலானது. இதனையடுத்து அப்பகுதியினர் உணவுப் பாதுக்காப்புத்துறையின் புகார் எண்ணுக்கு புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலவர் சிவக்குமாரால் மூடி சீல் இடப்பட்டது.   

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனிடம் பேசினோம், “தூத்துக்குடி மாநகராட்சியின் ஜார்ஜ் ரோட்டில் உள்ள சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டில் ஷவர்மா அடுப்பில் இருந்த சிக்கனையும், மற்ற உபகரணங்களையும் நாய் ஒன்று அசுத்தப்படுத்தியதாக புகார் வரப்பெற்றது.  உடனடியாக அந்த உணவகத்தினை ஆய்வு செய்ததில், 7 கிலோ பழைய சிக்கன் உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருள்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட ஹோட்டல்

மேலும், உணவகத்தில் இருந்த பொது சுகாதார குறைபாட்டிற்காகவும், கால்நடைகள் அணுகும் வகையில் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாலும், உரிம நிபந்தனைகளை மீறியிருந்ததாலும்,  அவ்வுணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர் விசாரணைக்காக உணவகத்தினை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. நுகர்வோர் உண்ணக்கூடிய  உணவுப் பொருட்களை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள் சுகாதாரத்தைப் பேணி, பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் உணவகத்தின் இயக்கத்தினை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சீல் வைக்கபட்ட ஹோட்டல்

மேலும், நுகர்வோர்கள் உணவகங்களில் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் எவற்றையேனும் கண்டறிந்தால், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.