உலக அளவில் குறைந்த எண்ணிக்கையில் கருவுறுதல் விகிதத்தை கொண்டிருக்கக் கூடிய நாடாக உருவாகியிருக்கிறது தென் கொரியா. அங்குள்ள பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஸ்ட்ரைக் செய்வதால் இந்த கருவுறுதல் விகிதம் குறைந்திருப்பதாகவும், அதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருப்பதும் அது குறித்த விவரமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதன்படி 2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி தென் கொரியாவின் 65 சதவிகித பெண்கள் குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதன் பின்னணியில் அவர்கள் சொல்வது, அதிக நேரம் பணியாற்றுவது, வீட்டு வாடகை உயர்வு, மோசமான வேலை வாய்ப்புகள். இக்காரணங்களால் தென் கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்ளவும், ஏன் திருமணமே செய்துக் கொள்ளவும் ஆண் பெண் என இருதரப்பினரும் தயக்கம் காட்டுவதாக நியூயார்க் டைம்ஸ் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதிக நேரம் பணியாற்றுவது, மோசமான வேலை வாய்ப்பு, பொருளாதார சிக்கல் யாவும் ஆண்களுக்கும் இருக்கிறது என்றாலும், அந்த அழுத்தங்களை காரணமாக சொல்லி அவர்கள் வீட்டு வேலையில் பங்குகொள்வதில்லை என அப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் வேலைக்கு செல்லும் மகளிருக்கு, வீட்டுவேலையுடன் சேர்த்து குழந்தைப்பேறும் அழுத்தங்களாக தங்களின் தலையிலேயே விடிவதால் தங்கள் ஒன்றும் குழந்தை பெற்று கொடுக்கும் இயந்திரம் அல்ல எனக் கூறி கருவுறுதலுக்கு தடை போடுகிறார்கள் என்றும் அச்செய்தி கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பெண்கள் தரப்பில், “கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்று வந்தாலும் வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தும் பெண்கள் மட்டுமே செய்யும் அளவுக்கான சமூக அழுத்தமும் விதிக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பணியிடங்களிலும் பாகுபாடு காட்டப்படுவதால் அது எங்களது தொழில் ரீதியான வாழ்க்கைக்கு கேடாக விளைகிறது” என தங்களின் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்களாம்.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டியிருந்தாலும் இன்றளவும் நாடளவில் எந்த நாட்டின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்ற போட்டாப் போட்டி தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால் தென் கொரிய மக்களோ திருமண பந்தங்களில் ஈடுபடுவதில் நாட்டமில்லாமலேயே இருந்து வருகிறார்கள்.

முன்னதாக, தென் கொரியாவில் சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 72 லட்சமாக இருக்கிறது என தகவல் வெளியானது. அங்கு 2000ம் ஆண்டில் 15.5 சதவிகிதமாக இருந்த திருமணம் செய்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 40 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் அப்போது 5ல் இருவர் சிங்கிளாகவே இருப்பார்கள் என்றும் அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியிருந்தது.

ALSO READ: 

நம்ம ஊரு 90s kidsக்கே டஃப் கொடுக்கும் தென் கொரியர்கள்: எதில் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.