திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழாவையொட்டி நேற்று திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் பல்லக்கைச் சுமந்து வீதியுலாவாகச் சென்று பட்டணப் பிரவேசம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இங்கு, ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா, மகரத் தலைநாள் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு குருபூஜை விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10-ம் நாளான நேற்று (சனிக்கிழமை) சிகர விழாவான பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. விழாவையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து, சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்குத் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாயை அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார்.

பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்

தொடர்ந்து, பல்லக்கின் முன்னே 10 குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க பக்தர்கள் பல்லக்கினைச் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிகள், 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.