பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்டிருந்தது. 2002-ல் நடந்த குஜராத் கலவரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற  சம்பவங்களைக் குறிப்பிட்டு இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவ அமைப்புகள் போராட்டத்தை நடத்தின. இதேபோல, பொதுவெளியில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட முயற்சியும் செய்தன. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் – சி.பி.எம் கவுன்சிலர்

இந்த நிலையில் சென்னை, அண்ணாநகர் டி.பி.சத்திரத்திலுள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றுகூடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு  எதிராகக் குரல் எழுப்பினர். இதில், சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினியும் கலந்துகொண்டார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், `அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து, சாலையில் அமர்ந்து தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த டி.பி.சத்திரம் போலீஸார், தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்ததற்காக கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரைக் கைதுசெய்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.