அண்டை நாடான பாகிஸ்தானில், இன்று பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தான், கடன், பெட்ரோலிய செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் திடீர் மின் தடை

இந்த நிலையில், பாகிஸ்தான் முழுவதும் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டது. பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இன்று இருளில் மூழ்கியது. இந்த திடீர் மின்தடையால், மிகப்பெரிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், பெஷாரவர் நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் பாகிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பலூசிஸ்தானில் குவெட்டா உள்பட 22 மாவட்டங்களில் மின் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. கராச்சி மண்டலத்தில் மலிர், லாந்தி, குலிஸ்தான் ஜோஹர், அக்தர் காலனி, சுந்திகர் சாலை, நியூ கராச்சி, குல்ஷன், இப்ராஹிம் ஹைத்ரி, கோரங்கி பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள 117 மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

image

பாகிஸ்தான் அரசு சொன்ன காரணம்

இதுகுறித்து பாகிஸ்தான் மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று காலை 7.34 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய மின்பகிர்மானத்தில் திடீரென மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. அதை, விரைந்து செயல்பட்டு செயல்முறையை இயல்புக்கு வந்துவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தாகிர், “குளிர்காலத்தில் பெரும்பாலும் மின்சாரப் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், சிக்கன நடவடிக்கையாக, மின் உற்பத்தி செயல்முறையை நிறுத்தி வைத்துள்ளோம். காலையில் மீண்டும் இயக்கப்பட்டபோது, திடீரென கோளாறு ஏற்பட்டது, பல நகரங்களில் மின்சாரம் அழுத்தத்தில் தடை ஏற்பட்டது, ஏற்ற இறக்கம் இருந்தது. பெஷாவர், இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுவருகிறது. அடுத்த 12 மணிநேரத்தில் நாடுமுழுவதும் சீரான மின்சப்ளை கிடைத்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

image

கடந்த ஆண்டும் பாதிப்பு

மின் தடையால் பல்வேறு நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். அதேநேரத்தில், மின் விநியோகத்தை மீண்டும் கொண்டுவர முயற்சியில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில், கராச்சி, லாகூர் உள்பட மாகாண தலைநகரங்களில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசின் புதிய கட்டுப்பாடுகள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரூ.2.50 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளை முன்கூட்டியே மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 60 பில்லியன் தொகையை மிச்சப்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

image

இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளும் மின்சார பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதிக மின்சார செலவு பிடிக்கும் மின்விசிறிகளின் உற்பத்தியையும் ஜூலைக்குள் நிறுத்தப்பட இருக்கிறது எனவும், அதுபோல், அரசு அலுவலகங்களிலும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ”பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.