கரூர் வாங்கலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பிரேம் மகாலில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து, கரூர் மாநகரில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அவருக்கு, மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீர்த்தக் குடம் எடுத்துச் செல்லும் நிகழ்வில் அண்ணாமலை

அந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கரூர் மாவட்டத்தில் மட்டும் பா.ஜ.கவினரின் எந்த விதமான போராட்டத்திற்கும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படுவதில்லை. கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராடினாலே கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து, கரூர் மாவட்ட பா.ஜ.கவினர் மீது போலீஸார் தரப்பில் பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதையும் தாண்டி கரூர் மாவட்ட பா.ஜ.கவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் ஆளுங்கட்சியினரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறார். அதனால், கரூர் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை பற்றியும், வருங்காலங்களில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரத்யேகமாக இந்த கூட்டம் மாவட்ட பா.ஜ.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அணியுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. எப்படி காவல்துறையினரின் நடவடிக்கைகளை பார்க்கிறீங்க, எப்படி சில கைதுகளை பார்க்கிறீங்க, இரவு 2 மணிக்கு, 3 மணிக்கு ஃபேஸ்புக்குல, ட்விட்டர்ல யாரோ சிலபேர்கள் போடுற போஸ்டுகளுக்காக, காவல்துறை அங்கு சென்று கைது செய்து வருகின்றனர். அதுக்காகதான் இந்த கலந்துரையாடல். என்ன நடக்கிறது என்பதை நாம தெரிஞ்சுக்கணும் என்பதற்காகதான்.

கூட்டத்தில் பேசும் அண்ணாமலை

அதனால், கரூர் வரும்போது, 500 பேர், 1000 பேர் என எந்த கூட்டத்தையும் வைக்காதீங்க, சுருக்கமாக ஒரு 20 பேர், 30 பேர்களை கூப்பிடுங்க, அவங்க மட்டும் இருக்கணும்னு செந்தில்நாதன்கிட்ட சொல்லியிருந்தேன். அதேபோல், மாநில பா.ஜ.கவிடம் இருந்து உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, ஏதாச்சும் எதிர்பார்க்கிறீங்களானு விவாதிக்க இருக்கிறோம். ஏன்னா, பலபேரை எதிர்த்து கரூரில் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. எல்லாவிதமான பிரச்னைகளும் இங்கு தரப்படுகிறது. தமிழகம் முழுக்க பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும்போது, கரூர் மாநகரம் மட்டும் வித்தியாசமா இருக்கும். காவல்துறை அனுமதி தருவதில்லை. இங்கிருக்கும் கவுன்சிலர் ஒருவர் மீது, இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 எஃப்.ஐ.ஆர்கள் பதிவுசெஞ்சுருக்காங்க. அதனால், உங்களிடம் கலந்தாலோசித்து, அதற்கு எதிராக நாம் எந்தவித யுக்திகளை கையில் எடுக்க வேண்டும் ஆலோசனை செய்யதான் இந்த கூட்டம். எனக்காக ஒன்றரை மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். பல தொண்டர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களை சந்தித்ததால், லேட்டாகிவிட்டது. அடுத்தமுறை வரும்போது, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.