வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

லாரியின் மீது நடனமாடியபோது தவறி விழுந்து இறந்த ரசிகர் தொடங்கி அலகு குத்திக்கொண்டு கிரேன் மூலம் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது வரை நடந்த அஜித் ரசிகர்களின் துணிவு ஜுர ஜன்னி பிரான்சையும் விட்டுவைக்கவில்லை !

பெரிய நடிகர்கள் நடித்த தமிழ் படங்களின் சிறப்புக் காட்சிகளிலும் முதல் நாள் காட்சிகளிலும் விசில் மற்றும் கூச்சல்களுடன் ஜிகினா துகள்களும் பறப்பது பிரான்சிலும் பழகிய ஒன்றுதான் என்றாலும், துணிவு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் நடந்த களேபரங்களைப் பற்றிய செய்தி பல்வேறு பிரெஞ்சு ஊடகங்களில் வெளியானது.

George Clooney

பாரீஸ் நகரத்தை ஒட்டிய Epinay-Sur-Seine எனும் ஊரின் திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்ட துணிவு படத்தின் சிறப்புக் காட்சியில் திரையை நோக்கி பாப்கார்ன்கள் வீசப்பட்டதில் தொடங்கி, கால்பந்து போட்டிகளின் போது திறந்தவெளி மைதானங்களில் பயன்படுத்தப்படும் கலர் புகைக் குண்டுகளுடன் திரையரங்கினுள் பட்டாசுகளும் வெடிக்கப்பட்ட நிகழ்வை “வியப்புடன்” அலசிய சில ஊடகங்கள் சென்னையில் நிகழ்ந்த மரணத்தையும் குறிப்பிட்டிருந்தன.

இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் காரணமாக இந்தியத் திரைப்பட ரசிகர்களின் “கதாநாயக வழிபாட்டு” குணம் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய யூனியனில் தமிழ்ப் படங்களை வாழ வைப்பதில் ஈழத் தமிழர்களின் பங்கு தான் அதிகம். ஆனால் கொரியர்கள், வியட்நாமியர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அனைவரையும் சீனர்கள் எனக் குறிப்பிட்டுவிடும் சில பிரெஞ்சு ஊடகங்களுக்கு ஈழ தமிழர்களும் ஒட்டுமொத்தமாக இந்தியர்கள். பாகிஸ்தானியர்களுக்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாது. அவர்களின் தெளிவு அப்படி .

துணிவு

அந்த செய்திகளில் கருத்து தெரிவித்திருந்த ஒன்றிரண்டு ரசிகர்கள் “இதெல்லாம் சகஜமப்பா” பாணியில், கதாநாயக வழிபாட்டை வழிமொழிந்திருந்தனர். மூடிய இருட்டு அரங்கினுள் புகையும் நெருப்பும் ஏற்படுத்தக்கூடிய விபரீத விளைவுகளை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை .

திரையரங்கு நிர்வாகத்தின் கருத்தைப் பதிவு செய்ய முயன்றபோது அவர்கள் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன…

அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை போலும் .

மேற்படி திரையரங்குக்குச் செல்லாமல் பாரீஸ் நகரின் மையப் பகுதியில் இருக்கும் Grand Rex எனும் புகழ்பெற்ற திரையரங்கில் துணிவு படத்தைப் பார்த்த ஒரு ரசிகரின் வருத்தமான ட்வீட் கீழ்க்கண்டவாறு…

“சிறிய அரங்கு மற்றும் அதிகமான பாதுகாப்பு காரணங்களால் பெரிதாக கொண்டாட முடியவில்லை .”

பிரெஞ்சு தொலைக்காட்சி சானல்களில் ஒன்றான FRANCE2 தொலைக்காட்சியின் மதிய செய்தி தொகுப்பில் ஒளிபரப்பப்பட்ட, துணிவு படம் பற்றிய இரண்டு நிமிட செய்தி தான் உச்சக்கட்ட ஹைலைட் .

திரையரங்கில் நடந்த களேபரங்களுடன் துணிவு பட முன்னோட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டு ரசிகர்களின் பேட்டிகளும் சேர்க்கப்பட்ட அந்த செய்தி தொகுப்பில்,

ஒரு ரசிகர் மூடப்பட்ட அரங்கினுள் கலர் புகைக் குண்டுகள் உடைக்கப்பட்டதையும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதையும் படு கூலாக கூற, மற்றொரு ரசிகரோ தங்களால் படத்தை அமைதியாகப் பார்க்க முடியாது என்றதுடன் இப்படியான ஆர்ப்பாட்டங்களே படத்துக்கான மரியாதை என்றார் .

தமிழ் நாட்டுத் துணிவு கொண்டாட்டத்தையும் காட்டிய அந்த செய்தி தொகுப்பை வழங்கிய பெண்மணியின் வர்ணனை அல்ட்டிமேட் ஹைலைட் ….

அஜித் குமாரை இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாகக் குறிப்பிட்ட அப்பெண் அவரை இந்தியாவின் ஜார்ஜ் க்ளூனி என குறிப்பிட்டார் . அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பார்த்த அந்த பெண் அப்படி குறிப்பிட்டாரா அல்லது அஜித்தின் பிரான்ஸ் ரசிகர்கள் யாராவது எடுத்து கொடுத்திருப்பார்களா என்பதை தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை .

ஒரு நீண்ட பின் குறிப்பு :

எனக்கு யாரும் அவசரப்பட்டு அஜித் முத்திரை குத்திவிட வேண்டாம் …

துணிவு மற்றும் வாரிசு படங்களை நான் இன்னும் பார்க்கவில்லை. உடனடியாக பார்க்கும் உத்தேசமும் இல்லை . இதற்கான முழுமுதல் காரணம் எனக்கிருக்கும் சப்த ஒவ்வாமை ..

பிரான்சில் திரையரங்குக்குச் சென்று நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் 1994ல் வெளியான காதலன். படம் சரியான நேரத்துக்குத் திரையிடப்படவில்லை. பொறுமையிழந்து ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டத்தில் பலர் புகைத்தும் தள்ள, அரங்கினுள் நுழைந்து பார்த்த உரிமையாளர் தலையில் கைவைத்துக்கொண்டு ஓடியது இன்னும் நினைவிருக்கிறது . அந்த படத்தின் பாடல்களுக்கு எழுந்த, பாரீஸ் நகர டிஸ்கோதேக்களின் டெசிபல் அளவையும் மீறிய கூச்சல் கும்மாளத்தால் பாதிக்கப்பட்ட நான் அடுத்ததாக அரங்கில் பார்த்த திரைப்படம் விக்ரம் . அதுவும் மிகச் சிறிய திரையரங்காக தேடி, வார நாட்களில் பார்த்தேன். அங்கேயும் ஒன்றிரண்டு “விசிலடிச்சான் குஞ்சுகளின்” தொல்லை .

ஹெச்.வினோத்

அடுத்துப் பார்த்தது பொன்னியின் செல்வன்…

ஆண் பிள்ளைகளின் ஆரம்ப ஆராவாரங்களை துணிச்சலான சில “பிரான்ஸ் வாழ்” குந்தவைகளும் பூங்குழலிகளும்,

“வாயை மூடுங்கள் . ஒன்றும் புரியவில்லை”

என (பிரெஞ்சு மொழியில்) அதட்டியதால், நான் பிழைத்தேன் .

ஒரே ரேட்டிங், “இரண்டும் நன்றாகப் போகிறது” என்பதான பொத்தாம் பொது வசூல் அறிக்கை என இரண்டு படங்களையும் இரண்டு கண்களாகப் பாவிக்கும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் போலவே இந்த கட்டுரையை எழுதத்தான் எனக்கும் ஆசை…

ஆனால் அஜித் ரசிக “சாதனைகளை” பேசிய அளவுக்குப் பிரெஞ்சு ஊடகங்கள் விஜய் ரசிக “சாதனைகளை” பேசியதாகத் தெரியவில்லை . நிறைய தேடிப்பார்த்துவிட்டேன் .

அப்படியான செய்திகள் உங்களுக்கு கிடைத்தால் தாராளமாக அனுப்பலாம்…

அனுப்பியவர் விஜய் ரசிகர் என்றெல்லாம் சொல்லாமல் நடுநிலையுடன் மொழிபெயர்த்து எழுதுகிறேன் .

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.