தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16-ம் நாள் திருவள்ளுவர்  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக-வின் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில், “சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டார். ஆனால், அவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

அண்ணாமலை

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் கேட்கப்பட்டது. அவர், “திருக்குறளை முழுமையாகப் படித்தவர்கள் யாரும் திருவள்ளுவருக்கு மத அடையாளத்தைத் தர மாட்டார்கள்” என விமர்சித்தார்.

மேலும், திமுக மாணவரணி தலைவர் இராஜீவ் காந்தியும் தன் ட்விட்டரில் இது தொடர்பாகப் பதிவிட்டிருந்தார். அதில் “பள்ளிபாடத்தில் குறளை கட்டாயமாக்கி, நாட்டின் எல்லை தொடக்கமான குமரியில் வானுயர சிலை அமைத்து வள்ளுவரை நம் இனத்தின் வாழ்வில் அடையாளமாக்கிய கலைஞருக்கும் வள்ளுவர் தினத்தில் நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.

திருவள்ளுவர்

வரலாற்றில் திருவள்ளுவர்:

திருவள்ளுவரின் உருவம் குறித்த ஆய்வுகளுக்கான முயற்சி 19-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 1904-ஆம் ஆண்டில் வடிவேலு செட்டியார் என்பவர் ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்’ என்ற நூலை வெளியிட்டார். அதில் ஜடை முடியுடன் தாடி மீசையுடன் மார்பு குறுக்கே யோகா பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடி திருவள்ளுவர் காட்சியளித்தார்

இதற்குப் பிறகு வெளியான ஆங்கில நூலின் பதிப்பிலும் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரை போல காட்சி தந்திருந்தார். கரங்களிலும் நெற்றிலும் விபூதி பட்டையுடன் காட்சியளிக்கும் இவர் மரத்தடியில் அமர்ந்து இருப்பது போல அந்த படம் இடம் பெற்றிருந்தது.

பின்னர் நடந்த ஆய்வுகளின் படியும் அவர் கருத்துக்களையும் கொண்டும், அவரின் பன்முகத்தன்மையை நிலைநிறுத்த 1950-களில் முதன்முதலாக திருவள்ளுவர் எந்த மத சின்னமும் இன்றி வரையப்பட்டார். 1950-களின் பிற்பகுதியில் தான் வெள்ளாடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர் கவிஞர் பாரதிதாசன். பின்னர், அவருடன் திராவிட கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பருடன் இணைந்து ஓவியர் வேணுகோபால் சர்மாவை வைத்து திருவள்ளுவர் படத்தை முதன்முதலாக மத சார்பில்லாமல் வரைந்தார்.

வேணுகோபால்

இவர் வரைந்த இந்த படத்தை காமராஜர், அண்ணா, கருணாநிதி நெடுஞ்செழியன் என பல முக்கிய பிரமுகர்களும் பார்வையிட்டு பாராட்டினர். பிறகு இந்தப் படம் 1960-ல் அண்ணாவால் காங்கிரஸ் மைதானத்தில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. பின்பு, இந்தப் படமே மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது. திமுக சட்டமன்றத்திற்குள் வந்த பிறகு திருவள்ளுவர் உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்க திட்டமிட்டனர். பின்பு 1966-ம் ஆண்டு வேணுகோபால் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை துணை குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். இதற்கு பின்பு கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தப் படம் அரசு பேருந்துகளில் அனைத்திலும் இடம்பெற்றது. அதில் தொடங்கி பாட புத்தகங்கள் என அனைத்திலும் இந்த படமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

திருவள்ளுவர்

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றி காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பாஜக முயற்சி செய்து வருகிறது. அதனடிப்படையில் 2017-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் முதன்முதலாக காவி உடை அணிந்த திருவள்ளுர் படத்தை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனாலும் தொடர்ந்து பாஜக காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசும் தமிழ் ஆர்வலர்கள், “பாஜக இது போன்று தொடர்ந்து செயல்படுவது சரி இல்லை. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும். சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது, “திருவள்ளுவரின் அடையாளத்தை வெள்ளையாக மாற்றியது திராவிடர் கழகங்கள் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு யாழ்பாணத்தில் வைக்கப்பட்டிருந்த அடையாளத்தை அண்ணாமலைப் பயன்படுத்தியிருக்கிறார். எனவே அடையாளங்களை மாற்றியது நாங்கள் அல்ல திராவிடர் கழகங்கள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் தானே தவிர, நிச்சயமாக பாஜக அல்ல. ஆகவே பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருந்தது சரிதான்”, என்றார்.

ராஜீவ் காந்தி

இந்தச் சர்ச்சை தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் இராஜீவ் காந்தியிடம் விளக்கம் கேட்டோம். “திருவள்ளுவர் சின்னம் தேசிய சின்னமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் காவி நிறம் பூசுவோரை எதிர்த்து வழக்கு தொடரலாம். ஆனால், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அர்சியல் ரீதியாக மட்டுமே நம்மால் இப்போது கருத்து சொல்ல முடியும். தமிழ்நாட்டு அரசு மதம் சார்ந்து இயங்காத சமத்துவ அரசு. அதனால்தான் சார்பற்ற படத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்களின் நோக்கம், இந்த அரசின் கொள்கையை சிதைப்பது, திருவள்ளுவரை இந்து மதத்துக்குள் திணிப்பதும் தான். இது ஆரோகியமற்ற தன்மை. இதை இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அது தமிழ்நாட்டில் எடுபடவில்லை. ஆனால். குறிப்பிட்ட சில அமைப்புள் இதை கையிலெடுத்து சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அதை செய்வோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.