”தொடர் நாயகன் விருதை விராட் கோலியோடு, முகம்மது சிராஜுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை, இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்திருந்தது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதுடன் மகத்தான சாதனை படைத்தது. மேலும், இந்தப் போட்டியில் சுப்மான் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்திருந்தனர். அதிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்திருந்தார்.

image

இதே தொடரில் முதல் போட்டியின்போதும் அவர் சதம் அடித்திருந்தார். அந்த வகையில் விராட் கோலி தொடர் நாயகன் விருதையும், கடைசிப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் பெற்றிருந்தார். அதேநேரத்தில், இந்த கடைசிப் போட்டியில் முகம்மது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவருடைய அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 73 ரன்களிலேயே சுருண்டது. அதுமட்டுமின்றி, முதல் இரண்டு போட்டிகளிலும் மொத்தமாய்ச் சேர்த்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மொத்தத்தில் இந்தத் தொடரில் அவர் 9 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதனால், அவருக்கும் தொடர் நாயகன் விருதைப் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என விமர்சனம் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், “என்னைப் பொறுத்தவரையில் முகமது சிராஜும் தொடர் நாயகன் விருதிற்கு முழு தகுதியானவர். அவரது பங்களிப்பு இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை அணியின் மிக முக்கியமான விக்கெட்டுகளை முகமது சிராஜ் இலகுவாக கைப்பற்றினார். ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த முகமது சிராஜிற்கு தொடர் நாயகன் விருது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

image

ஆனால் பேட்ஸ்மேன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது புதிதல்ல. தொடர் நாயகன் விருதை முகமது சிராஜ் மற்றும் விராட் கோலிக்கு பகிர்ந்தாவது கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் முகமது சிராஜ், நிச்சயமாக எதிர்கால இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.