”என்னுடைய வெற்றியிலும் பாராட்டிலும் துணைப் பயிற்சியாளர்கள் 3 பேர் உள்ளனர்” என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடியது. இதில், இரண்டு தொடர்களையும் இழந்து ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பியது. இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடரில், இந்திய அணி இலங்கை அணியை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ஒயிட்வாஷ் செய்திருந்தது.

image

அதிலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் (ஜனவரி 15) ரன் மெஷின் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், அந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார். குறிப்பாக, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதையடுத்து, விராட் கோலி மீண்டும் ஜொலிக்க ஆரம்பித்தார்.

image

இந்தப் போட்டி முடிந்ததும் விராட் கோலி மற்றும் சுப்மான் கில் (கடைசிப் போட்டியில் அவரும் சதம் அடித்திருந்தார்) ஆகியோரிடம் பிசிசிஐ பிரத்யேக பேட்டி கண்டது. அப்போது அவர்கள் இருவரும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் ஆகிய முதன்மைப் பயிற்சியாளர்களை தாண்டி, ராகவேந்திரா, தயாந்த் கரானி மற்றும் நுவான் செனெவிரத்னே ஆகிய 3 துணைப் பயிற்சியாளர்களை அருகில் அழைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி மனதார பாராட்டினார்.

அப்போது பேசிய விராட் கோலி, ”ரகு, தயா, நுவான் ஆகிய மூன்று பேரும்தான் தினமும் வலைப்பயிற்சியின்போது எங்களுக்கு 145, 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். அவர்கள்தான் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் எங்களுக்கு தீவிரமான பயிற்சிகளை அளித்து தயார்படுத்துவார்கள். அந்தவகையில் பார்த்தால், அவர்கள்தான் எங்களது வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய பங்களிப்பைத் தருகிறார்கள். எனவே அவர்களின் முகம் மற்றும் பெயர்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

image

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் எங்களுக்கு தினம்தோறும் உலக தரமான பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள். அதிலும் வலைப்பயிற்சியின்போது கடுமையான சவாலைக் கொடுக்கிறார்கள். ஆகவே, எங்களது வெற்றியும் பாராட்டும் இவர்களையே போய்ச் சேரும். இந்திய அணியில் இவர்களுடைய பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கது.

குறிப்பாக நாங்கள் 140 – 150 கி.மீ வேகப்பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் சொன்னால், உடனடியாக அவர்கள் எங்களை பயிற்சி களத்திற்கு அழைத்துச் சென்று சோதிப்பார்கள். அதில், பலமுறை நாங்கள் அவுட்டும் ஆகியிருக்கிறோம். அவர்களிடம் இதுபோன்ற பயிற்சிகளைப் பெற்றபிறகே நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். மாஸ்டர் சச்சின், முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்குக்கூட இவர்கள் பயிற்சி அளித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.