நேபாள விமான விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலையில் நடந்த விபத்து!

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜனவரி 15) காலை 10:33 மணிக்கு 72 பயணிகளுடன் புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம், பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர், செட்டி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காத்மாண்டு – பொக்ரா நகரங்களுக்கு இடையேயான விமான நேரம் 25 நிமிடங்கள்தான். இதில் விமானம் தரை இறங்குவதற்கு இன்னும் சில நொடிகளே (அதாவது 10-20 வினாடிகள்) இருந்த நிலையில்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் நேபாளத்தில் அடர்ந்து பனி மூட்டம் நிலவியது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஃப்ளைட் ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின்படி, ’விபத்துக்குள்ளான விமானம் 15 ஆண்டுகள் பழமையானது’ என்று குறிப்பிட்டுள்ளது. ஏடிஆர் 72 என்பது ஏர்பஸ் மற்றும் இத்தாலியின் லியோனார்டோவின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம் ஆகும்.

image

மீட்புப் பணிகள் தீவிரம்!

இதுகுறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா, ”விபத்துக்குள்ளான விமானத்தில் 2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் பயணித்தனர். அதில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 கொரியர்கள் மற்றும் அர்ஜென்டினா, ஐரிஷ், பிரெஞ்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு நபர் அதில் பயணித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாததால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நேபாள விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள் இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

image

நேபாளத்தில் தொடரும் விமான விபத்துகள்!

கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் பலியாயினர். இந்த விமானம் காத்மாண்டுவை நெருங்கியபோது விபத்துக்குள்ளானது. அடுத்து 2018ஆம் ஆண்டு, டாக்காவில் இருந்து அமெரிக்க-பங்களா டாஷ் எட்டு டர்போபிராப் விமானம் காத்மாண்டுவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 71 பேரில் 51 பேர் உயிரிழந்தனர். அதுபோல் 2022ஆம் ஆண்டு மே மாதம், காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 9 என்ஏஇடி சிறிய ரக விமானம், ஆற்றில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 16 நேபாளிகள், 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள் என 22 பேரும் பலியாகினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தாய் ஏர்வேஸ் விமானம் விபத்தில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

கருப்புப் பட்டியலில் நேபாள விமானச் சேவை!

நேபாள நாட்டின் விமானச் சேவையை பொறுத்தவரை பாதுகாப்பு மேலாண்மை, ஊழியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. விமானங்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. நேபாள நாட்டை விமான பாதுகாப்பிற்கான கருப்பு பட்டியலில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் சேர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நேபாளத்தில் இருந்து வரும் விமானங்கள் தங்களது வான்வெளிக்குள் பயணிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.